தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோரை மகிழ்வித்த மாயவித்தை நிகழ்ச்சி

3 mins read
e092e0a4-5cbf-47fa-aef8-e303c4802d2c
‘எஸ்பிடி’ அறநிறுவனத்துடன் இணைந்து ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) உடற்குறையுள்ளோருக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  - படம்: ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா
multi-img1 of 2

மாயவித்தைகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் அமைந்திருக்கும் ‘ஹேரி பாட்டர்: விஷன்ஸ் ஆஃப் மேஜிக்’ கண்காட்சி.

எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் உருவாக்கிய தனித்துவமான மந்திர உலகை வயது, திறன் போன்ற பாகுபாடுகளின்றி, யார் வேண்டுமானாலும் இக்கண்காட்சியில் அனுபவித்து மகிழலாம்.

இதைப் பறைசாற்றும்விதமாக உடற்குறையுள்ளோருக்காகச் செயல்படும் ‘எஸ்பிடி’ அறநிறுவனத்துடன் இணைந்து ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகள் கொண்ட 34 பேரும் அவர்களுடன் பராமரிப்பாளர்கள் 19 பேரும் பங்கேற்றனர்.

சிறப்புத் தேவையுடைய 34 பேருடன் பராமரிப்பாளர்கள் 19 பேரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறப்புத் தேவையுடைய 34 பேருடன் பராமரிப்பாளர்கள் 19 பேரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா

பயனாளிகள், தங்கள் வசதிக்கு ஏற்ற முறையிலும் வேகத்திலும், மந்திர உலகுக் கண்காட்சியின் 10 இருவழித் தொடர்பு அங்கங்களில் பங்கேற்றனர். மாய உலகின் மந்திர அமைச்சு (Ministry of Magic), நியூட்டின் விலங்குக் காட்சியகம் (Newt’s Menagerie), ரகசிய அறை (Chamber of Secrets) போன்ற நன்கு அறியப்பட்ட இடங்களையும் அவர்கள் கண்டு களித்தனர்.

கண்காட்சியில் உடற்குறையுள்ளோருக்கு ஏதுவாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சக்கரநாற்காலியைப் பயன்படுத்துவோர்க்கு வசதியாக இருக்கும் வகையில் முழுக் கண்காட்சியும் வடிவமைக்‌கப்பட்டுள்ளது.

மாய உலகின் மந்திர அமைச்சு பிரிவில் இந்தக்‌ கண்காட்சி இரண்டு மாடிகள் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் உடற்குறையுள்ளோர், முதியவர்களுக்கான தனிப்பட்ட மின்தூக்கி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாம்புகளைக்‌ கண்டு அஞ்சுவோர் ரகசிய அறையில் இருக்கும் பாம்பு உருவங்களைத் தவிர்ப்பதற்கு உதவும் வகையில் மாற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒலி, ஒளி உணர்திறன் அதிகரிப்பால் (sensory sensitivities) பாதிக்‌கப்பட்டோருக்கு இங்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. சிறப்புத் தேவையுள்ளவர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவோ ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஊழியர்களிடம் நேரடியாகவோ தெரிவித்துக் கூடுதல் உதவிக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ‘கேர்’ திட்டத்தின் ஓர் அங்கமான இந்நிகழ்ச்சியின் நோக்கம், அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலாத் துறையை உருவாக்குவதாகும்.

‘எஸ்பிடி’ அறநிறுவனத்துடனான இந்தப் பங்காளித்துவம் உடற்குறையுள்ளோருக்கு ஆதரவாக பல்வேறு வசதிகளை அமைத்துகொடுத்து, குறையற்ற, மகிழ்ச்சியான அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது.

“இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்து வரும்போது, சிறப்புத் தேவையுடையோர், அவர்களின் பராமரிப்பாளர்கள், சமூகத்தின் இதர பிரிவினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க ஒரு வாய்ப்பு அமைகிறது. இது அவர்களுக்கிடையிலான புரிதலையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்க உதவுகிறது,” என்றார் ‘எஸ்பிடி’ தலைமை நிர்வாக அதிகாரி அபிமன்யு பால்.

பயனாளிகளில் ஒருவரான செல்வி திவ்யா வாசுதேவன், 30, கண்காட்சியைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார்.

பயனாளிகளில் ஒருவரான செல்வி திவ்யா வாசுதேவன், 30, (இடது) கண்காட்சியின் வெவ்வேறு அங்கங்களைக் கண்டு மகிழ்ந்தார்.
பயனாளிகளில் ஒருவரான செல்வி திவ்யா வாசுதேவன், 30, (இடது) கண்காட்சியின் வெவ்வேறு அங்கங்களைக் கண்டு மகிழ்ந்தார். - படம்: ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா

கடந்த ஆண்டு எனேபிலிங் சர்வீசஸ் ஹப்@பொங்கோல் (Enabling Services Hub@Punggol) அமைப்பில் சேர்ந்த இவருக்குச் சிறுவயதிலேயே கேட்கும் திறன் குறைபாடும் உலகளாவிய வளர்ச்சித் தாமதநிலையும் (global developmental delay) கண்டறியப்பட்டன.

ஹேரி பாட்டர் திரைப்படங்களின் தீவிர ரசிகரான திவ்யா, “எனக்கென்று ஒரு மந்திரக்கோலைத் தந்தனர். அதனுடன் கண்காட்சியில் இருந்த விதவிதமான பொருள்களையும் படங்களையும் தொட்டுப் பார்த்துச் செயல்படுத்தியது மிகவும் பிடித்திருந்தது. அனைத்தையும் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் எந்தச் சிரமமும் இல்லை,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்