ரவி கீதா திவிஜா
அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு மற்றும் அரங்கப் பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 27ஆம் தேதியன்று தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றன.
தமிழ் பேசுவதை ஊக்குவித்து, தமிழில் சிறந்து விளங்குபவர்களை சிறந்த மேடைப் பேச்சாளர்களாக உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
“இந்தப் போட்டி, 17 பேச்சாளர் மன்றங்கள், நான்கு வட்டாரங்கள் பங்குபெறும் மாவட்ட அளவிலான போட்டி. இந்தப் பேச்சாளர் மன்றங்களைத் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவரும் தமிழ் பேச்சாளர் மன்றங்களின் ஆலோசகருமான திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தயார்நிலைப் பேச்சுப் போட்டி, அரங்கப் பேச்சுப் போட்டி என இருவகைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தயார்நிலைப் பேச்சுப் போட்டியில் திருமதி மதிவதனா கோபால், 36, ‘என்னையும் தமிழையும் தேடி’ என்ற தலைப்பில் பேசி, முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
“நான் கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியின்மீது ஆர்வம் அதிகம். அதுவே, நான் இப்போட்டியில் பங்குபெற ஒரு தூண்டுதலாக இருந்தது. மேலும், நான் என் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளின்வழி என் உரையைத் தயார்செய்தேன்.” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘மூன்று கிழிசல்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திரு இராஜ்குமார் இராஜேந்திரன், 34, இரண்டாம் பரிசை வென்றார்.
“மாதாந்தர மன்றக் கூட்டங்களுக்கு உரைகள் தயார்செய்வது மிகவும் சவாலாக இருந்தது. எனவே, இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக நான் இப்போட்டியில் கலந்துகொண்டேன். வருங்காலத்தில் ஒரு தெளிவான பேச்சாளராகி, மற்றவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் குறிக்கோள்,” என்றார் திரு இராஜ்குமார்.
அடுத்தபடியாக, ‘உன் வாழ்வை மாற்றிய ஒரு சொல்’ எனும் தலைப்பில் அரங்கப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
திரு நாராயணன் உமாசங்கர், 45, ‘நீ எப்போது நிஜமாக சம்பாதிப்பாய்’ என்பதை மையப்படுத்திப் பேசி முதல் பரிசு பெற்றார்.
“ஒரு தந்தையாக நான் பல தமிழ் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பரிசுகள் பெறுவது என் பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் என்பதால் இப்போட்டியில் கலந்துகொண்டேன். பல தமிழ் புதினங்களைப் படித்து இப்போட்டிக்குத் தயார்செய்தேன்,” என்றார் அவர்.
‘இறப்பு’ என்ற சொல்லை மையமாக வைத்து உரையாற்றி, இரண்டாம் பரிசை வென்றார் திருமதி சுகந்தினி யசோதரன், 42.
“கேட்கும் கேள்விகளுக்கு அனுபவம் சார்ந்த பதிவுகளைக் கொடுப்பதற்காக நான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். தமிழ்மொழியை இளம் தலைமுறையிடம் கொண்டுசேர்க்க என்னால் முடிந்ததைச் செய்வேன்,” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இரு போட்டிகளிலும் திரு அன்பரசன் நாகலிங்கம் மூன்றாம் பரிசை வென்றார்.

