பிரபல உடை நிறுவனமான யுனிக்லோ, உள்ளூர் லாப நோக்கற்ற அமைப்பு ‘ஹெல்த்சர்வ்’ உடன் இணைந்து ஜனவரி 12ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடைகளை விநியோகித்தது.
உலகம் முழுதும் உதவி தேவைப்படுவோருக்கு ஒரு மில்லியன் புத்தாடைகளை வழங்கும் யுனிக்லோவின் ‘த ஹார்ட் ஆஃப் லைஃப்வேர்’ (The Heart of LifeWear) அனைத்துலக முயற்சியின் ஒரு பங்காக இந்த உடை விநியோகம் நடைபெற்றது.
‘ஜேடிசி ஸ்பேஸ்@துவாஸ்’ பகுதியில் நடைபெற்ற இவ்விநியோகத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் மூவகை உடைகளிலிருந்து தேர்வுசெய்தனர்.
இதன்படி வியர்வையையும் வெப்பத்தையும் விரைவில் அகற்றும் யுனிக்லோ ஏரிசம் (AIRism), குளிர்காலத்திற்கான ஹீட்டெக் லைஃப்வேர் (HEATTECH LifeWear) என மொத்தம் 1,200 புதிய உடைகளும், ரி:யுனிக்லோ (RE:UNIQLO) நன்கொடைகள்வழி பெறப்பட்ட நல்ல நிலையிலுள்ள 1,300 உடைகளும் வழங்கப்பட்டன.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏரிசம் உடைகளும் ரி:யுனிக்லோ உடைகளும் உதவும். இந்தியா, சீனாவில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு குளிர்காலத்தில் ‘ஹீட்டெக் லைஃப்வேர்’ உடைகள் பயனளிக்கும்.
‘த ஹார்ட் ஆஃப் லைஃப்வேர்’ எனும் இந்த அனைத்துலக முயற்சி நடைபெறுவதற்கான காரணம், சமூகத்தை ஆதரிப்பதில் யுனிக்லோ கொண்டுள்ள நம்பிக்கையே என யுனிக்லோ சிங்கப்பூரின் மூத்த நீடித்த நிலைத்தன்மை இயக்குநர் ஹுவீ லீ கூறினார்.
“நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உயர்தர உடைகளை வழங்கி அனைவருடைய வாழ்வையும் மேம்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் ஹுவீ லீ.
நிகழ்ச்சியில், குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருத்தல், வேலையிட மன உளைச்சல் போன்ற சவால்களைக் கையாள்வதைக் குறித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை மனநலப் பயிற்சியும் ஹெல்த்சர்வ் வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
உடைகளைப் பெற்றதில் பெருமகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார், சிங்கப்பூரில் ஆறு ஆண்டுகளாக மின் தொழில்நுட்பராகப் பணியாற்றிவரும் வெளிநாட்டு ஊழியர் கான் முகமது சமாத் கான்.
“சிங்கப்பூரில் இதுவரை நான் இத்தகைய நிகழ்ச்சியை அனுபவித்ததே இல்லை. நான் இந்த தங்குமிடத்தில் ஒரு மாதம்தான் இருந்துள்ளேன். எனினும், ஆதரவாளர்களும் தங்குமிடமும் என்னை வரவேற்றதற்கு நன்றி. இலவச உடைகளைப் பெற்றதில் நான் மகிழ்கிறேன்,” என்றார் திரு கான்.
இந்த விநியோகத்தை உள்ளிட்டு, சமூக அமைப்புகளுடன் இணைந்து சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 175,000 வெள்ளி மதிப்பிலான 10,000 புதிய லைஃப்வேர் உடைகளை விநியோகிக்க யுனிக்லோ திட்டமிட்டுள்ளது.

