திருமுறைத் தொண்டாற்றும் நோக்கத்துடன் பல குடும்பங்களும் ஒரே குடும்பமாக இணைந்து படைத்த ‘மாணிக்கவாசகர்’ இசை நாடகம், பக்திப் பழஞ்சுவையைப் புதிய தொழில்நுட்ப உத்திகளுடன் பரிமாறியது.
கவிஞர் அ.கி.வரதராஜன் இயற்றி ஒருங்கிணைத்த இந்த நாடகம், ஆகஸ்ட் 11ஆம் தேதி பிஜிபி திருமண மண்டபத்தில் அரங்கேறியது.
கிட்டத்தட்ட 150 பேர் இணைந்து படைத்த இந்நாடகத்தைக் காண ஏறத்தாழ 800 பார்வையாளர்கள் அரங்கில் திரண்டனர்.
சைவ சமயக் குரவர்களில் ஒருவராகப் போற்றப்படும் மாணிக்கவாசகரின் வாழ்க்கைக் கதை உருக்கமாக இந்நாடகத்தில் சித்திரிக்கப்பட்டது.
நாடகத்தின் முக்கியக் கதாபாத்திர நடிகர்கள், துணை நடிகர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரின் கதாபாத்திரப் புரிதல் ஆழமாக இருந்ததைக் காண முடிந்தது.
பரிகள் நரிகளாக உருமாறியது, அரசால் இளையருக்குப் பிரம்படி பட்டபோது அனைவருக்கும் வலித்தது, மாணிக்கவாசகர் திருவடி தீட்சை பெற்றது எனப் பல்வேறு காட்சிகள் நெகிழ்வூட்டும் வண்ணம் இருந்தன.
காட்சிகளில் மிகப் பொருத்தமாகச் சேர்க்கப்பட்ட உயிரோவியங்கள், ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஓசைகள், இசை வாசிப்புகள் ஆகியவை பார்ப்போரைக் கவரும் வண்ணமாய் இருந்தன.
சிறப்பு விருந்தினரான இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், ஆன்மிகச் சொற்பொழிவாளரும் அறிஞருமான சொ.சொ. மீ. சுந்தரம் ஆகியோருடன் சமூகத் தலைவர்களும் கலை, ஆன்மிக ஆர்வலர்களும் கூடி நிகழ்ச்சியை ரசித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் ஒன்பதாவது நாடகமாக இது அமைந்தது. 2014ல் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நாடகமான ‘பித்தா பிறைசூடி’ நாட்டிய நாடகத்திற்குப் பிறகு, திருநீலகண்டர், திலகவதியார், அப்பூதி அடிகள், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், திருமுறை கண்ட புராணம், காரைக்கால் அம்மையார் என சைவ சமயப் பெரியவர்களைப் பற்றிய நாடகங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.
நாடகத்திற்கான தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து நடைபெற்று வந்ததாக திரு அ.கி வரதராஜன் தமிழ் முரசிடம் கூறினார்.
“நாடகம் எது பற்றியது என்ற முடிவுக்கு வந்த பிறகு பாடல்களைப் புனையத் தொடங்கினேன். இந்த நாடகத்தின் பாடல்களை அறுசீர் விருத்தத்தில் அமைத்துள்ளேன்,” என்றார் அவர்.
வயலின் மணிகண்டன், மிருதங்கக் கலைஞர் தேவராஜன் இருவரின் இசையுடன், திருமுறை மாநாட்டுக்கு குழு ஏற்பாடு செய்த போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் நாடகத்தில் பாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“இவ்வாண்டு பிப்ரவரியில் இசை ஒலிப்பதிவு வேலைகள் நடைபெற்று பின் ஏப்ரலில் இருந்து நாடகம் அரங்கேறும்வரை வாரயிறுதி தோறும் ஒத்திகைகள் நடைபெற்று வந்தன,” எனக் கூறிய திரு வரதராஜன், இதற்காக ருத்ர காளியம்மன் ஆலயம் பேருதவி அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
நாடகத்தின் இறுதியில் தில்லைக் கருவறை, பொன்னால் வேயப்பட்ட கூரை, நடராஜர் திருவுருவம் ஆகியவற்றை வெளிநாட்டுக் கலைஞர்களுடன் எவர்ஸ்டார் என்ஜினியரிங் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு இரவு உணவும் பரிமாறப்பட்டதுடன் மாணிக்கவாசகரைப் பற்றிய சித்திரப் புத்தகமும் கொடுக்கப்பட்டது.
குடும்பங்கள் இணைந்து வழங்கிய படைப்பு
நாடகத்தைப் படைத்தவர்களில் ஏழெட்டுக் குடும்பங்களிலுள்ள அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுமே கலந்துகொண்டனர். மாணிக்கவாசகராக நடித்த சுவாமிநாதன் விஸ்வா, 22, தம்முடைய தாய், தந்தையும் நாடகத்தில் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிட்டார்.
ஓரிரு காட்சிகளில் சிறு வேடங்களில் நடித்திருப்பதுடன் நாடக உதவி வேலைகளைச் செய்து வந்த விஸ்வாவுக்கு முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது இதுவே முதல்முறை.
“எல்லாக் காட்சிகளிலும் நான் இடம்பெறுவதால் நேரத்தைச் சரியாக ஒதுக்க முடியுமா என தொடக்கத்தில் ஐயப்பட்டேன். ஆனால் திரு அ.கி.வா, பெற்றோர் மற்றும் பலரும் என்னை ஊக்குவித்ததால் ஒப்புக்கொண்டேன்,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பயிலும் விஸ்வா.
நாடக உத்திகளைக் கற்று தம் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டது நல்ல கற்றல் அனுபவமாக இருந்ததாக அவர் கூறினார்.
“அமைச்சராக இருந்து பின்னர் முனிவராக மாறும்போது, வீரமுள்ள தோற்றத்திலிருந்து பவ்வியமான தோற்றத்திற்கு மாற வேண்டியிருந்தது. இந்த மாற்றத்தை முக, உடல் அசைவுகளில் நுட்பமாகக் காண்பிக்க வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.
நடிகர்களின் நடிப்புக்கேற்ற ராகங்கள் இசையில் பயன்படுத்தப்பட்டதாக வயலின் கலைஞர் ஜி.மணிகண்டன் தெரிவித்தார்.
“அரசர் ஆணையிடும் காட்சியில் கம்பீரத்தைக் காண்பிப்பதற்கு அடானா ராகம் இளையராக இருந்த சிவபெருமான் இடம்பெற்ற காட்சியின் நகைச்சுவை காண்பிக்க மாண்டு ராகம் என இந்நாடகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் இசை மூலம் வெளிப்பட்டன,” என்று அவர் கூறினார்.
நாடகத்தைச் செம்மைப்படுத்த பல குடும்பங்கள் ஒரே திருமுறைக் குடும்பமாக இணைந்து கைகோத்ததை திரு வரதராஜன் சுட்டினார்.