தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்தாண்டு தீர்மானங்கள் தோல்வியுற்றால் மனந்தளர வேண்டாம்

3 mins read
59c23fca-a707-4361-b1c7-e57ab746fe9a
புத்தாண்டு வரவிருக்கும் நேரத்தில் தீர்மானங்கள் குறித்து பலர் சிந்திப்பதுண்டு. - படம்: பிக்சாபே

எதை மாற்றுவது, அதை எப்படி மாற்றுவது என்பதில் இல்லை மாற்றம்; நாம் எதுவாக, யாராக மாற விழைகிறோம் என்பதில்தான் மாற்றத்தின் ரகசியம் உள்ளது என்றார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர்.

தன்முனைப்பு, சுய உதவிப் புத்தகங்களில் உலகக் கவனத்தை ஈர்த்தது அவரின் ‘அடோமிக் ஹேபிட்ஸ்’ எனும் நூல். இப்புத்தாண்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நீடிக்கவும் ஆக்கபூர்வமாக அமையவும் அந்நூல் பரிந்துரைக்கும் சில வழிமுறைகள் இதோ:

தீர்மானங்கள் எளிதில் மறந்தோ, புறக்கணிக்கப்பட்டோ போவதற்கான முக்கியக் காரணம், அவற்றின் நோக்கம் மெல்ல நினைவிலிருந்து அகன்றுவிடுவதே.

இச்சிக்கலைப் போக்க, நாம் மாற்ற அல்லது செயல்படுத்த முயலும் பழக்கங்களை நமது அடையாளத்தோடு ஆழமாகத் தொடர்புப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாண்டு உடல் எடையைக் குறைக்கவேண்டும் எனத் திட்டமிட்டால், அதற்கான வழிகளைப் பட்டியலிட்டு அதனை வழக்கப்படுத்திக்கொள்ள முயல்வோம்.

மாறாக, முதல் படியாக, ஓர் ஆரோக்கியமான மனிதர் எவற்றைத் தேர்ந்தெடுப்பார், அவரின் வாழ்க்கைமுறை எவ்வாறிருக்கும் என நினைவுபடுத்திக்கொண்டு அந்த அடையாளத்தையே வழிகாட்டியாகப் பாவித்துக்கொள்ளவேண்டும் என்பது எழுத்தாளர் கிளியரின் கருத்தாகும். 

நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கும் கெட்ட பழக்கங்களைக் கைவிடுவதற்கும் ஓர் எளிய வழிமுறையை எழுத்தாளர் பரிந்துரைக்கிறார்.

நல்லவற்றைச் செயல்படுத்த, அவற்றை முதலில் வெளிப்படையாகத் தெரியும்படியாக, அடுத்து ஈர்ப்புத்தன்மை மிக்கதாக, தொடர்ந்து சுலபமானதாக, கடைசியில் திருப்திப்படுத்துவதாக உருமாற்றிக்கொள்ள வேண்டும்.

தீங்கானவற்றைக் கைவிடுவதற்கு இந்நான்கு படிகளுக்கும் எதிர்மறையானவற்றைக் கடைப்பிடித்தால் போதும். இவையே கிளியர் உரைக்கும் “நடத்தை மாற்றத்தின் நான்கு விதிகள்”. 

நாம் எடுக்கும் தீர்மானங்கள் தோல்வி அடைவது உத்வேகமில்லாததால் அல்ல; அவை குறித்த போதுமான தெளிவு இல்லாததால்தான்.

“செயல்முறை உத்தேசம்” இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாண்டு இன்னும் கூடுதலான புத்தகங்கள் படிக்கவேண்டும் என்ற தீர்மானத்தைவிட, இவ்வாண்டு ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு ஒரு புத்தகத்தில் 10 பக்கங்களைப் பேருந்தில் வீடு திரும்பும்போது படிப்பேன் என்ற தீர்மானம் நீடிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

இதில் பொதிந்துள்ள மற்றுமோர் உத்தி: “பழக்கங்களை அடுக்குதல்”. 

அனுதினமும் நம்மை அறியாமலேயே பின்பற்றப்படும் சில முக்கியப் பழக்கங்கள் இருக்கலாம். காலையில் எழுந்தவுடனேயே சிலர் காப்பி போடுவதுண்டு.

ஏற்கெனவே நடப்பில் உள்ள இப்பழக்கத்தின்மேல் மற்றொன்றை அடுக்குவது அதனை செயல்படுத்துவதை இன்னும் ஆக்கபூர்வமானதாய் மாற்றும்.

காலையில் காப்பி போட்டவுடனேயே செய்தித்தாள் படிப்பேன் என்று மனத்தில் நிறுத்திக்கொள்வது அப்பழக்கம் இன்னும் எளிதாக வாழ்க்கைமுறைக்குள் இணைவதை உறுதிப்படுத்துகிறது. 

‘கோல்டிலோக்ஸும் மூன்று கரடிகளும்’ எனும் பிரபலச் சிறுவர் கேளிக்கைக் கதையில் இடம்பெறும் கோல்டிலோக்ஸ் சிறுமி, தமது கஞ்சியை மிகச் சூடாகவும் இல்லாமல் மிகல் குளிர்ந்ததாகவும் இல்லாமல் சரியான வெப்பத்தில் பருகுபவளாகச் சித்திரிக்கப்படுவாள்.

இதுவே ‘கோல்டிலோக்ஸ் விதி’ எனக் கூறப்படுகிறது.

நாம் மேற்கொள்ளும் சவால்கள் மிகக் கடினமாக இருந்தால் துவண்டுபோய் விடுவோம்; மிக எளிமையாக இருந்தால் ஊக்கமிழந்து விடுவோம்.

நம் குறைநிறைகளையும் மனப்பான்மையையும் அறிந்து, நமக்கு ஏற்றாற்போல் கடின அளவில் சவால்களை வடிவமைத்துக்கொள்வது முக்கியம். 

பழக்க மாற்றங்கள் ஒவ்வொன்றும் சவால்களே. அச்சவால்களில் ஏற்படும் தோல்விகளை நமது திட்டமிடலில் இன்னும் சீரிய உத்திகள் பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்கான அடையாளமாகக் கருதி இப்புத்தாண்டை நம் வசப்படுத்திக்கொள்வோமாக.

குறிப்புச் சொற்கள்