தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இதய நலனில் அலட்சியம் வேண்டாம்

3 mins read
c0e5ac82-5a92-44cd-ae58-6147e6b3b6c3
பதக்கும் (இடம்) அவரது மருத்துவரும். - படம்: அபியோமெட், இன்க்

துடிப்புமிக்க வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து, அடிக்கடி நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றார் பிரேம் பிரகாஷ் பதக்.

துடிப்புமிக்க வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்த பிரேம் பிரகாஷ் பதாக், அடிக்கடி நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றவர்.
துடிப்புமிக்க வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்த பிரேம் பிரகாஷ் பதாக், அடிக்கடி நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்றவர். - படம்: அபியோமெட், இன்க்

40களின் மத்தியில் இருக்கும் பதக், சைவ உணவுகளை உண்பவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஆனால், ஈராண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் பதாக்கிற்குத் திடீரென உடலின் வலது பக்கத்தில் வலி ஏற்படத் தொடங்கியது.

ஓடும்போதெல்லாம் இத்தகைய வலியை அனுபவித்த இவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிவில் இதயத்தின் மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் அண்மையில் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இளையர் ஒருவர் மாண்ட சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பதக்குக்கு ஏற்பட்ட இதயக் கோளாறு குறித்த தகவல் இதய நலனைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது.

சிங்கப்பூரர்கள் மூவரில் ஒருவர், கண்டறியப்படாத ஆரம்ப நிலை இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இதய நோய்த் தடுப்புக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

உடல்நலத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கான நினைவூட்டலாகப் பதக்கின் வாழ்க்கை விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்போருக்கும் இதய நோய் ஏற்படலாம் என்கிறார் பதக்கின் இதய மருத்துவரான டாக்டர் லெஸ்லி டேய். மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையில் பணியாற்றிவரும் இவர், அறுவை சிகிச்சையின்றி, ‘கதீட்டர்’ எனும் சிறு குழாயைச் செலுத்துவதன் மூலம் சிலவகை இதய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பயிற்சி பெற்றவர் (Interventional Cardiologist).

நெடுந்தூர ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த பதக், அவரது இதய பலம் 26 விழுக்காடு மட்டுமே என்ற செய்தியை மருத்துவர் கூறுவார் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.

இது குறித்து விளக்கிய டாக்டர் லெஸ்லி, சாதாரணமாக ஒருவருக்கு இதய பலம் 55 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கவேண்டும் என்றார்.

மிகக் குறைவான இதய பலம் இருந்தால் அது நாளடைவில் மிக மோசமான ஆபத்தை விளைவிக்கும் அளவுக்குக் கொண்டுபோய்விடுமென அவர் எச்சரித்தார்.

பொதுவாக, 40 வயதை எட்டியவுடன் ஒருவர் எவ்வளவு உடல்நலத்துடன் இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதய நலனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் லெஸ்லி கேட்டுக்கொண்டார்.

மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் பதக்கின் இதயத் தசை வலிமையாக இருந்ததால் அவருக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ எனும் செயல்முறையை டாக்டர் லெஸ்லி பரிந்துரைத்தார்.

அதைப் பற்றி விவரித்த டாக்டர் லெஸ்லி, அந்தச் செயல்முறை மூலம் அடைப்பு இருக்கும் ரத்தக்குழாய் பலூன் எனும் ஊதற்பை மூலம் திறந்து நீட்டப்படும் என்றார்.

மேலும், பதக்குக்கு இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் மூன்று முக்கியக் குழாய்களில் அடைப்பு இருந்ததால் ‘ஸ்டென்ட்’ எனப்படும் ஐந்து உறைகுழாய்கள் பொருத்தப்பட்டன.

இதற்கு மாறாக, ஒருவரின் இதயத் தசையின் வலிமை குறைவாக இருந்தால் வேறு தீவிர சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படும் என்றார் டாக்டர் லெஸ்லி.

சிகிச்சைக்குப் பிறகு நலம்பெற்றுள்ள பதக் தற்போது ஓடுவதில் கவனம் செலுத்துகிறார். இனிப்பு, எண்ணெய் அதிகம் கொண்ட உணவு வகைகளை இவர் உட்கொள்வதில்லை.

வாழ்நாள் முழுவதும் இதய நலனைக் காப்பதற்கு மருந்து உட்கொள்ளும் நிலையில் உள்ள பதக், தனது அனுபவ அடிப்படையில் அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளை சீரான இடைவெளியில் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்