தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலங்குகளின் ‘வண்ண’ உலகம்

2 mins read
f20ec1eb-6dba-444b-bdcc-51a69b3ba8f7
மனிதர்களின் பல கூறுகளுடன் ஒத்துப்போகும் குரங்குகளில் பலவகை குரங்குகளுக்கு நம்மைப்போல ‘டிரைகுரோமேடிக்’ பார்வை உண்டு. - படம்: பிக்சாபே
multi-img1 of 2

சிவப்பு நிற உடையைப் பார்த்து மாடு மிரளுவதாக அமைந்த திரைப்படக் காட்சி மிகப் பிரபலம். உண்மையில் மாடுகளுக்கு சிவப்பு நிறம் தெரியாது. அவை பெரும்பாலும் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

மற்ற விலங்குகளுக்கு நிறங்கள் தெரியுமா எனும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.

பெரும்பாலான உயிரினங்கள் மனிதர்களைப்போல பார்ப்பதில்லை. அவற்றின் பார்வைத் திறன், நிறம் பார்க்கும் திறன் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன.

நாய்களால் இவ்வுலகை நீல, மஞ்சள் நிற அடிப்படையில் மட்டுமே பார்க்க முடிகிறது. ‘டைகுரோமாடிக்’ எனும் இருநிறப்பார்வை கொண்ட அவற்றால் சிவப்பு, பச்சை நிறங்களை அடையாளம் காண முடிவதில்லை.

பூனைகளும் இருநிறப்பார்வை கொண்டவையே. ஆனால் அவற்றால் நீல, பச்சைக் குடும்ப நிறங்களைப் பார்க்க இயலும். இவை நிறங்களைவிட ஒளியையும் அசைவையும் உணரும் திறன் கொண்டவை.

திமிங்கலங்களால் கிட்டத்தட்ட எந்த நிறத்தையும் பார்க்க முடிவதில்லை. அவற்றின் கண்களில் ஒரே ஒரு கூம்பு உயிரணு மட்டுமே இருப்பதால், அவற்றால் சாம்பல், மங்கலான நீல நிறத்தில் மட்டுமே அனைத்தையும் பார்க்க முடியும்.

டால்ஃபின்கள் ‘மோனோகுரோமாட்டிக்’ எனும் ஒருநிறப் பார்வை கொண்டவை. இவற்றால் நிறங்களைப் பார்க்க முடிவதில்லை. இவை ‘எக்கோ லொகே‌‌ஷன்’ எனும் எதிரொலியை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புறத்தை உணரும் தன்மை கொண்டவை.

சுறாமீன்களாலும் முற்றிலும் நிறங்களைப் பார்க்க இயலாது. இவை அசைவைக் கொண்டும் நிறமுரண்களை உணர்ந்தும் செயல்படுகின்றன.

எலிகளால் பச்சை, நீல வண்ணங்களைத் தெளிவாகவும் சிவப்பு நிறத்தைச் சற்றே சிரமத்துடனும் அடையாளம் காண முடியும்.

பாம்புகளுக்கும் நிறம் தெரியாது. இவை ‘இன்ஃபிராரெட்’ எனும் அகச்சிவப்புக் கதிர்களையும் வெப்பக் கடத்தலையும் மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்