தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனிதர்களோடு நின்றுவிடாத பேரன்பு

7 mins read
சமூகத்தில் சுற்றித் திரியும் பூனைகள் இவர்களுடைய வீட்டு வாசலைத் தாண்டி உள்ளங்களிலும் புகுந்துள்ளன
ab3bf838-bc9a-4902-8f49-9e9598e71dc6
15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூனைகளைப் பராமரித்துவந்துள்ள ‌ஷெல்பி தோ‌ஷி - அம்ரீக் அலி இணையர், ‘லக்கி, ‘கென்ட்’ என்ற தங்களின் இரு பூனைகளுடன். - படம்: ‌ஷெல்பி தோ‌‌ஷி

சக மனிதருக்காகச் சிந்தும் அதே வியர்வையையும் கண்ணீரையும் பூனைகளுக்காகவும் சிந்துகின்றனர் ‌ஷெல்பி தோ‌ஷி - அம்ரீக் அலி இணையர்.

சமூகத்தில் கைவிடப்பட்ட பூனைகளைத் தங்கள் சொந்தச் செல்லப்பிராணிகளாக அரவணைத்து, அவற்றுக்கு மறுவாழ்வளிக்க புதிய இல்லங்கள் தேடி, அப்படிக் கிடைக்காவிடில் இவர்கள் தம் இல்லத்திலேயே அடைக்கலம் வழங்கிவந்துள்ளனர்.

அந்தப் பூனைகள் தம் இறுதிமூச்சுவரை துன்பம் என ஒன்றை அறியாதவகையில் பராமரித்து, கண்ணீருடன் உள்ளங்கனிந்து விடைகொடுக்கின்றனர். அவற்றின் பெயர்களைத் தங்கள் கைகளில் பச்சை குத்தி, தம் மனத்திலும் உடலிலும் நிரந்தர இடத்தை ஒதுக்குகின்றனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரும்பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த இணையர்.

நாளடைவில், பூனைகளை அரவணைக்கும்போது ஒவ்வாமையினால் கைகள், கண்கள் சிவந்தபோதும், தொடர்ந்து அவற்றின்மீது அன்புமழையைப் பொழிந்தனர் ‌ஷெல்பியும் அம்ரீக்கும்.

“நான் ஒவ்வாமைக்கான மருந்தை எடுத்துக்கொண்டு என் பணியைத் தொடர்கிறேன்,” என்றார் ‌ஷெல்பி.

மனத்தை உருக்கிய தருணங்கள் பல இருந்ததுண்டு.

“முன்பெல்லாம் மழை என்றால் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால், இப்போதெல்லாம் மழைச் சாரலில் நனையாமலிருக்க வாகனத்தின்கீழ் தஞ்சம் புகுந்து, குளிரில் நடுங்கும் பூனைதான் என் மனத்தில் தோன்றுகிறது,” என்கிறார் ‌ஷெல்பி.

இரு பூனைகள் கடுமையான மழையில் கால்வாயில் விழுந்து தொலைந்துபோனதை நினைவுகூர்ந்தார் ‌ஷெல்பி.

“பல நாள்கள் தேடினோம். அழாத நாள்களில்லை. சுவரொட்டிகளை ஒட்டினோம். அங்குமிங்கும் பின்னிரவு 2, 3 மணிக்கெல்லாம் அலைந்தோம். முதல் பூனை ஒரு வாரத்துக்குப் பின்னரும் இரண்டாவது பூனை ஒரு மாதத் தேடலுக்குப் பின்னருமே கிடைத்தன,” என்றார் ‌ஷெல்பி.

“தொலைந்த பூனை கிடைத்துவிட்டதாக யாரேனும் கூறும்போது மனதில் நம்பிக்கைப் பிறக்கும். ஆனால் நேரில் சென்றுபார்க்கும்போது பூனையைக் காணாமல் ஏமாந்த நாள்கள் பல இருந்துள்ளன,” என்றார் ‌அவர்.

கொவிட்-19 காலத்தில் விலங்கு மருத்துவப் பட்டயக் கல்வி படித்த ‌ஷெல்பி, தற்போது ‘தி கேட் விஸ்பரர்’ எனும் பூனை நடத்தை ஆலோசனைத் தொழிலை நடத்தி வருகிறார்.
கொவிட்-19 காலத்தில் விலங்கு மருத்துவப் பட்டயக் கல்வி படித்த ‌ஷெல்பி, தற்போது ‘தி கேட் விஸ்பரர்’ எனும் பூனை நடத்தை ஆலோசனைத் தொழிலை நடத்தி வருகிறார். - படம்: ‌ஷெல்பி தோ‌ஷி

‌ஷெல்பிமீது வைத்திருந்த அன்பு பெருக்கெடுத்து, ‌ஷெல்பி நேசிக்கும் பூனைகள்மீதும் பாசம் காட்டத் தொடங்கினார் அம்ரீக், 41. பின்னர் அவர் அசைவ உணவுகளையும் கைவிட்டார்.

திருமணத்துக்கு முன்பே அம்ரீக் தம் வீட்டில் ‘லக்கி’ எனும் தங்களின் முதல் பூனையை வளர்க்கத் தொடங்கினார்.

“என் பெற்றோருக்குச் செல்லப்பிராணிகள் பிடிக்காது. அதனால், லக்கி அம்ரீக்கின் வீட்டில் வளர்ந்தது,” என்றார் ‌ஷெல்பி.

ஒரு மாதப் பூனைக்குட்டியாக இருந்தபோது லக்கியை இருவரும் கண்டெடுத்தனர். “லக்கியின் தாயாரால் அதன் பூனைக்குட்டிகளைப் பார்த்துக்கொள்ள முடியாததால் லக்கியின் உடன்பிறப்புகள் அனைத்தும் ஏற்கெனவே இறந்துவிட்டன. லக்கியைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எங்கள் பராமரிப்பில் எடுத்துக்கொண்டோம்,” என்றார் ‌ஷெல்பி.

“இந்தப் பூனைகள் கொடுக்கும் அன்பு உண்மையானது. அதனால், எனக்கும் சமூகப் பூனைகளோடு நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அவற்றில் ஒன்று என்னுடன் மிகவும் நன்றாகப் பழகியது. பிறகுதான், அது ‘லக்கி’யின் தாயாரென நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்றார் அம்ரீக். லக்கியின் தாயார் இறுதி நாள்களைக் கழித்ததும் அவர்களின் இல்லத்தில்தான்.

முன்பு எச்எஸ்பிசி வங்கியில் பணியாற்றிவந்த ‌ஷெல்பி, பூனைக்காகத் தம் வாழ்வை அர்ப்பணிப்பாரெனக் கனவிலும் நினைத்ததில்லை.

“பூனை என்றாலே நான் முன்பு அச்சப்படுவேன். இப்பொழுது நான் இத்தனைப் பூனைகளைப் பராமரிக்கிறேன்,” எனச் சிரித்தபடிக் கூறினார் ‌ஷெல்பி.

பயத்தைத் தகர்த்து பாசப்பொழிவு

ஷெல்பி சிறுவயதிலிருந்து தம் தாத்தா - பாட்டி வீட்டிலிருந்த நாய்களுடன் பழக்கப்பட்டாரே தவிர பூனைகளுடன் அன்று.

வீட்டிற்கு வெளியே ஒரு பூனை தன்னையே முறைத்துப் பார்த்தபடி இருந்ததைக் கண்டதும் முடிந்தவரை அதைத் தவிர்க்க முயன்றார் ‌ஷெல்பி. எனினும், நாளடைவில் ‘அதனைத் தட்டிக் கொடுத்துத்தான் பார்ப்போமே’ என்ற எண்ணம் தோன்ற, இருவருக்கும் இடையே வலுவான பிணைப்பு ஏற்பட்டது.

‘டைகரெல்லா’ எனும் அப்பூனைக்கு அன்றாடம் உணவு கொடுக்கத் தொடங்கினார் ‌ஷெல்பி. “அதனால் வங்கிக்குத் தாமதமாகக்கூடச் சென்றுள்ளேன்,” என்றார் ‌‌அவர்.

ஆனால், ‘டைகரெல்லா’வுக்கு வயது ஏற ஏற, அண்டைவீட்டார் வீட்டின்முன் சிறுநீர், மலம் கழிக்கத் தொடங்கியதால் அந்த அண்டைவீட்டார் நகர மன்றத்திடம் புகாரளித்தார்.

“நான் அவருடன் பரிந்துபேச முயன்றும் அவர் செவிசாய்க்கவில்லை. டைகரெல்லாவுக்கு வழக்கமாக உணவு தருபவரிடமும், அதனை வீட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவரது வீட்டில் சம்மதிக்கவில்லை,” என்று ‌ஷெல்பி நினைவுகூர்ந்தார்.

“டைகரெல்லாவுக்கு நாட்பட்ட சளிக்காய்ச்சலும் இருந்ததால், லக்கியின் பாதுகாப்பைக் கருதி எங்கள் வீட்டிற்கும் அழைத்துவர இயலவில்லை,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

‌ஷெல்பியைப் பூனையுலகுக்கு அறிமுகப்படுத்திய ‘டைகரெல்லா’.
‌ஷெல்பியைப் பூனையுலகுக்கு அறிமுகப்படுத்திய ‘டைகரெல்லா’. - படம்: ‌ஷெல்பி தோ‌ஷி

அப்போதுதான் டைகரெல்லாவை லிம் சூ காங்கிலுள்ள பூனைப் பண்ணையில் (Cattery) விட முடிவுசெய்தார் ‌ஷெல்பி.

“அப்பண்ணையில் ஓரறையை வாடகைக்கு எடுக்க $450 மாதாமாதம் கட்டவேண்டியிருந்தது. அத்தனை நாள்கள் வெளியிலேயே சுற்றித் திரிந்த பூனை திடீரெனப் புதிய, சிறிய இடத்திற்கு வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானது. நான் அன்றாடம் அங்கு வந்து டைகரெல்லாவைப் பார்த்துவந்து சமாதானப்படுத்தினேன்,” என்று அவர் சொன்னார்.

அப்படித் தொடங்கிய ஷெல்பியின் பூனைப் பராமரிப்புப் பணி நாளடைவில் வளர்ந்து, ஒரு கட்டத்தில் 11 பூனைகளை வளர்க்கத் தொடங்கினார்.

ஒரு சிறு அறையில் தொடங்கி, பின்பு இரு சிறிய அறைகளுக்கு விரிவடைந்து‌, பிறகு தாம் வளர்த்த பூனைகளுக்கென ஒரு பெரிய இடத்தையே வாடகைக்கு எடுத்தார் ஷெல்பி.

லிம் சூ காங் பண்ணையில் பூனைகளைத் தற்காலிகமாகத் தங்கவைத்தார் ‌ஷெல்பி.
லிம் சூ காங் பண்ணையில் பூனைகளைத் தற்காலிகமாகத் தங்கவைத்தார் ‌ஷெல்பி. - படம்: ‌ஷெல்பி தோ‌ஷி

அன்பிற்கு ஏது விலைமதிப்பு

பூனைப் பண்ணையில் பெரிய இடத்திற்கான வாடகை மாதத்திற்கு $1,050. மற்றொரு பூனைப் பிரியர் மாதாமாதம் $300 கொடுத்து உதவினாலும் ‌ஷெல்பியும் கணவருமே பெரும்பாலான செலவுகளை ஏற்றனர்.

“என் கணவர் வாடகை செலுத்தினார். நான் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டேன். தொடக்கத்தில் என் சேமிப்புகளிலிருந்து ஆயிரம் ஆயிரம் வெள்ளியாகக் கரைந்தது. ஆனால், நாளடைவில் நான் நிதி திரட்டக் கற்றுக்கொண்டேன். மருத்துவரிடம் கடனாளியாக இருக்க எனக்குப் பிடிக்காது. அதனால், மருத்துவரிடம் பணம் கட்டிவிட்டு, பின்பு அதை ஈடுகட்ட மக்களிடம் நிதி திரட்டுவேன்,” என்றார் ‌ஷெல்பி.

சாலை விபத்தில் பூனை அடிபட்டபோது அதை மருத்துவமனையில் சில நாள்கள் தங்கவைத்து காலை அறுவை சிகிச்சைமூலம் அகற்ற $6,000க்கும் மேல் செலவானதாக அவர் கூறினார்.

“ஒவ்வொருவரிடமிருந்தும் நிதி திரட்டினாலும் சராசரியாக ஒருவர் $200-$300தான் தருவார்,” என்றார் ‌அவர்.

2018ல தன் செலவுக்கணக்கைக் காட்டினார் ‌ஷெல்பி. பூனைப் பண்ணையிலிருந்த ஆறு பூனைகளின் மருத்துவ, உணவுச் செலவுகளுக்கே மாதம் $1,320 செலவானது. $1,050 வாடகையோடு சேர்த்து, ஆண்டுக்கு $25,000க்கும் மேல் செலவு.

ஒருவேளை வங்கித் துறையில் தொடர்ந்திருந்தால் செலவுகளை அவர் இன்னும் எளிதாகச் சமாளித்திருக்கலாம்.

ஆனால், ‌ஷெல்பி 2010லேயே வங்கி வேலையைவிட்டுவிட்டு ‘லக்கிஸ் பெட் ஹேவன்’ (Lucky’s Pet Haven) எனும் செல்லப்பிராணி இணைய வணிகத்தைத் தொடங்கிவிட்டார். 2013 முதல், பூனை உரிமையாளர்கள் வெளியூருக்குச் செல்லும்போது அவற்றைப் பராமரிக்கும் சேவைகளையும் வழங்கினார். 2021ல் அவர் ‘தி கேட் விஸ்பரர்’ எனும் பூனை நடத்தை ஆலோசனை (cat behavior consultancy) தொழிலைத் தொடங்கினார். கொவிட்-19 காலத்தில் விலங்கு மருத்துவத்தில் பட்டயக் கல்வியையும் அவர் முடித்தார்.

இதன்மூலம் கிடைத்த வருமானத்தில் பூனையின் மருத்துவச் செலவுகளை அவர் பெரும்பாலும் ஈடுகட்டினார்.

நாளடைவில் பூனைப் பண்ணை வாடகை அதிகரிக்க, செலவைக் கருதி 2019ல் பாதி இடமாகக் குறைத்துக்கொண்டார் ‌ஷெல்பி. பூனைப் பண்ணை தெங்காவுக்கு 2022ல் இடம்பெயர்ந்ததும் பண்ணையில் தாம் வைத்திருந்த கடைசி மூன்று பூனைகளைத் தம் வீட்டிற்குக் கொண்டுவந்து இன்றுவரை அவற்றைப் பராமரித்துவருகிறார்.

கொவிட்-19 காலத்தில், பூனைப் பண்ணையிலிருந்த ‘கிரீமி’ எனும் பூனையைப் பல் மருத்துவருக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த புகைப்படம்.
கொவிட்-19 காலத்தில், பூனைப் பண்ணையிலிருந்த ‘கிரீமி’ எனும் பூனையைப் பல் மருத்துவருக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த புகைப்படம். - படம்: ‌ஷெல்பி தோ‌ஷி

தியாகம் நிறைந்த பயணம்

எச்எஸ்பிசி முதலீடுகள் (இந்தியா) குழுவில் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிவந்த ‌ஷெல்பி, சொந்தமாகச் செல்லப்பிராணி வணிகத்தைத் தொடங்க முடிவெடுத்தது அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

“எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என என் பெற்றோர் எண்ணினர்,” எனச் சிரித்தவாறே கூறினார் ‌ஷெல்பி.

“அதிலேயே இருந்திருந்தால் கூடுதலாகச் சம்பாதித்திருக்கலாம். எனக்கெனக் கூடுதல் நேரம் கிடைத்திருக்கும். ஆனால், இத்தனை பூனைகளுக்கு நான் மறுவாழ்வு அளித்திருக்கிறேன் என எண்ணிப் பார்க்கும்போது மனநிறைவடைகிறேன்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

2010 முதல் அவர் தஞ்சோங் பகாரில் வசித்தாலும் சென்ற ஆண்டுவரை வாரம் ஓரிருமுறை பிடோக் சென்று, அங்குள்ள சமூகப் பூனைகளை அவரும் கணவரும் பராமரித்துவந்தனர்.

பூனைகள் சமூகத்தில் சுற்றித் திரிவதற்குக் காரணம் யாரோ ஒருவர் அவற்றைக் கைவிட்டதால்தான். அப்போது சமூகத்தினர் நாம்தான் முன்வந்து அவற்றைப் பராமரிக்க வேண்டும்.
‘‌த கேட் விஸ்பரர்’ நிறுவனர் ஷெல்பி தோ‌ஷி

தமக்கென நேரம் ஒதுக்காமல் பூனை நலனுக்காகத் தம்மைப் பல்லாண்டுகள் அர்ப்பணித்துள்ளதால் ‌ஷெல்பியும் அம்ரீக்கும் சோர்வடைந்துள்ள தருணங்கள் இருந்ததுண்டு.

“ஆனால், நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிய பணியை விட்டுவிட்டால் அந்தப் பூனைகளுக்கு என்ன ஆகும்?” என்ற ‌ஷெல்பி, அதனால் தம்மிடம் கடைசி பூனை இருக்கும்வரை இச்சேவையைத் தொடரவுள்ளதாகக் கூறினார்.

பூனைகளின் நினைவாக…

‌ஷெல்பியின் இடக்கையில் இதுவரை 27 பூனைகளின் பெயர்கள் உள்ளன.

“என் பாட்டி, கொள்ளுப் பாட்டிக்கு மறதிநோய் வந்ததால் நானும் எதிர்காலத்தில் நான் பராமரித்த பூனைகளின் பெயர்களை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் எனக்கு வந்தது. கஜினி திரைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு இந்த யோசனை தோன்றியது,” என்றார் ‌ஷெல்பி. அவரைப்போல், அம்ரீக்கும் தம் கைகளில் தம் மனத்திற்கு நெருக்கமான இரு பூனைகளைப் பச்சை குத்தியுள்ளார்.

‘லக்கி’, ‘கென்ட்’ பூனைகளின் முகங்களைத் தம் கையில் பச்சை குத்தியுள்ள அம்ரீக் (இடது), தாம் பராமரித்த 27 பூனைகளின் பெயர்களைக் கையில் பச்சை குத்தியுள்ள ‌ஷெல்பி.
‘லக்கி’, ‘கென்ட்’ பூனைகளின் முகங்களைத் தம் கையில் பச்சை குத்தியுள்ள அம்ரீக் (இடது), தாம் பராமரித்த 27 பூனைகளின் பெயர்களைக் கையில் பச்சை குத்தியுள்ள ‌ஷெல்பி. - படம்: ‌ஷெல்பி தோ‌ஷி

‘சமூகமும் அரசாங்கமும் உதவ வேண்டும்’

“சிங்கப்பூரில் மக்களுக்கு எத்தனையோ மருத்துவச் சலுகைகள் இருந்தும் செல்லப்பிராணிகளுக்குப் பொதுவாக மருத்துவச் சலுகைகள் இல்லை. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ ‘எஸ்பிசிஏ’வுக்கு முன்பு சென்றிருந்தேன். அங்கு செல்லப்பிராணி உரிமையாளருக்கு ஏதேனும் சலுகை இருந்தால் செல்லப்பிராணிகளுக்கும் அந்த சலுகை பொருந்தும். சிங்கப்பூரில் விலங்கு மருத்துவமனையில் ஒவ்வொரு ரத்த சோதனைக்கும் செலவு சராசரியாக $100க்கு மேற்பட்டது. வயதான பூனைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்த சோதனைகள் செய்யவேண்டியிருக்கலாம். பொதுவாக, சாதாரண விலங்கு மருத்துவரிடம் வெறும் ஆலோசனைக்குச் சென்றால் குறைந்தது $40, தடுப்பூசிக்கு $60 எனக் கட்டணம் இருக்கும். ஆனால் நிபுணரிடம் ஒரு முறை சென்றாலே $200க்கும் மேலாகச் செலவாகலாம். மருந்தகமும் மருத்துவரின் அனுபவமும் பொறுத்து விலையும் அதிகரிக்கலாம். நான் விலங்கு மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் $300க்கும் மேலாகச் செலவுசெய்கிறேன்,” என்றார் ‌ஷெல்பி.

சமூகப் பூனைகளைப் பராமரிக்க சமூகமாக நாம் முயற்சி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குடியிருப்பாளர் குழுக்கள் சமூகப் பூனைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கலாம் என்று அவர் சொன்னார். “சிறுவர்கள் விளையாடும்போது பூனைகளுக்குத் தொந்தரவு கொடுக்காமலிருக்க இதன்மூலம் கற்பிக்கலாம்,” என்றார் ‌அவர்.

இங்குப் பணியாற்றும் வெளிநாட்டவர் பலரும் சிங்கப்பூரில் தாம் இருப்பது நிச்சயமன்று என்பதால் செல்லப்பிராணிகளைச் சொந்தமாக வளர்ப்பதில்லை என்றார் ‌ஷெல்பி.

“எனினும், பூனைக்கான உணவுச் செலவுகளில் ஒரு பகுதியை ஏற்பது போன்ற மற்ற வழிகளில் உதவலாம். பலரும் எஸ்பிசிஏ போன்ற அமைப்புகளில் தொண்டாற்றுகின்றனர்,” என்றார் அவர்.

“மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும். பலரும் சமூகப் பூனைகளைத் தொல்லையாகப் பார்க்கின்றனர்; உடனே புகாரளிக்கின்றனர். ஆனால், அவை அப்படித் திரிவதற்குக் காரணம், யாரோ அவற்றைக் கைவிட்டதால்தான். அதனால் சமூகமாக நாம் பூனைகளைப் புரிந்துணர்வோடு பராமரிக்க வேண்டும்,” என்றார் ‌ஷெல்பி.

பூனைப் பராமரிப்பு பற்றி ‌ஷெல்பி எழுதியுள்ள மின்னூலை https://www.thecatwhisperer.com.sg/ebook இணையத்தளம் வழியாக இலவசமாகப் படிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்