“நிறுத்த வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் என்னால் முடியவில்லை,” என்கிறார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர், செந்தில் குமார் கதிர், 18.
இன்றைய இளையர்கள் பலர் எதிர்கொள்ளும் நிலை இது.
உலகச் செய்திகள், சமூக ஊடகப் பதிவுகள், மீம்ஸ் போன்றவற்றைத் தொடர்ந்து பார்ப்பது அல்லது படிப்பதற்காகத் திரையை மேலும் கீழும் நகர்த்தும் (Scroll) பழக்கம் பலருக்கும் இருக்கிறது. சமூக ஊடகங்களில் துன்பச் செய்திகளைத் தேடி அதிக நேரம் தொடர்ந்து படித்தல் ஆங்கிலத்தில் ‘டூம்ஸ்க்ரோலிங்’ (Doomscrolling) எனப்படும்.
சமூக ஊடகங்களில் செய்திகளைப் படிப்பது ‘டூம்ஸ்க்ரோலிங்கிற்கு’ இட்டுச் சென்று, பின்னர் ஒருவரின் அச்ச உணர்வையும் எதிர்மறை உணர்வையும் அதிகரிக்கிறது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இளையர்க்கான ‘சைஃபர்எஸ்ஜி லிமிடெட்’ அமைப்பைச் சேர்ந்த உளவியல் வல்லுநரான டாக்டர் பிரவீன் நாயர்,“ ‘டூம்ஸ்க்ரோலிங்கை’ நிறுத்துவது கடினம். ஒவ்வொரு முறை திரையை மேலும் கீழும் நகர்த்தும்போதும் அது நிம்மதியையோ கட்டுப்பாட்டையோ தரும் என்று தோன்றினாலும், உண்மையில் மனஅழுத்தத்தையும் தொடர்ந்து திரையில் நேரம் செலவிடும் ஆர்வத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது,” என்று கூறினார்.
“தொடர்ச்சியாகப் பதற்றம் உண்டாக்கும் உள்ளடக்கங்களைக் காணும் பழக்கம், மூளையின் மனஅழுத்த அமைப்பை எப்போதும் செயல்பாட்டிலேயே வைத்திருக்கிறது. காலப்போக்கில் இது கவலை, உறக்கச் சீர்கேடு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்கிறது,” என்றும் அவர் கூறினார்.
“நீங்கள் தொடர்ந்து திரையை மேலும் கீழும் நகர்த்துவதால் மனஅழுத்தம், தூக்கச் சீர்கேடு, கவனக் குறைவு, எரிச்சல், ‘எதையும் தவறவிட்டேனோ’ எனும் உணர்வு போன்றவற்றை அனுபவித்திருந்தால், அது அபாய எச்சரிக்கை,” என்றார் அவர்.
“இதனைக் கட்டுப்படுத்த, அன்றாடம் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ (Digital Detox) எனப்படும் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தாத நேரத்தை வகுத்துக் கொள்ளவும். படுக்கைக்குச் செல்லுமுன் கைப்பேசியைப் பயன்படுத்தாமலிருத்தல், நடைப்பயிற்சி, நண்பர்களுடன் நேரடி உரையாடல்கள் போன்ற செயல்களைப் பின்பற்றலாம்,” என்று டாக்டர் பிரவீன் நாயர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி க்ரிதி ஹர்ஷினி, 18, “சமூக ஊடகங்களில் செய்திகள், புதிய தகவல்கள் இருக்கும். அவை என் ஆர்வத்தைத் தூண்டும். அதனால், என்னை அறியாமலே, கைத்தொலைப்பேசியை வெகுநேரம் பயன்படுத்துவேன்,” என்று கூறினார்.
“ ‘டூம்ஸ்க்ரோலிங்’ என் மனஅழுத்தத்தை அதிகரிப்பதைத் தவிர்க்க, தூங்குமுன் என் கைத்தொலைபேசியை வேறு அறையில் வைத்துவிடுவேன்,” என்று கூறினார் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி, சாஹிரா ஜஹான், 17.