தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலரும் நாடி அருந்தும் ‘கிரீன் டீ’

2 mins read
5e731260-1bd1-429b-ae57-ab72d825ac7b
பலராலும் விரும்பப்படும் ஒரு பானமாக ‘கிரீன் டீ’ உள்ளது.  - படம்: பிக்சாபே

பல நூற்றாண்டுகளாக ‘கிரீன் டீ’ (green tea) இலைகளின் நன்மைகளை மக்கள் அறிந்துள்ளனர்.

குறைவாகப் பதப்படுத்தப்பட்ட தேநீர் வகைகளில், இந்த ‘கிரீன் டீ’யும் ஒன்று.

கிரீன் டீ அருந்துவதால் சரும ஆரோக்கியம் மேம்படுதல், எடை குறைதல், இதய நோய் அபாயம் குறைதல் ஆகிய நன்மைகள் விளைவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

புற்றுநோய் தடுப்பு

அதிக கிரீன் டீ அருந்துவோரது நாடுகளில், ஒருசில புற்றுநோய் விகிதங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.  

கிரீன் டீயின் ‘பாலிபினால்’ (Polyphenol) அளிக்கும் நன்மைகள் பல. சாற்றை சருமத்தில் பூசுவதால் ‘யுவிபி’ (UVB) கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம் என்று 2018ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. 

மேலும், மார்பகம், பெருங்குடல், உணவுக் குழாய், நுரையீரல், ‘புரோஸ்டேட்’, கல்லீரல் போன்ற புற்றுநோய்களுக்கு கிரீன் டீ உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும், கிரீன் டீ அருந்துவதால் புற்றுநோயால் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த அபாயம் குறையும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதன் நன்மையை நிரூபிக்கக் கூடுதல் ஆராய்ச்சி அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

உடல் எடை இழப்பு

2021ஆம் ஆண்டு மதிப்பாய்வு ஒன்றில், கிரீன் டீ மற்றும் அதில் அடங்கும் ஒருவகை ‘பாலிபினால்’, உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. 

அதிக கிரீன் டீ அருந்துவதால், ஒருவரது ‘வளர்சிதை மாற்றம்’ (metabolism) மேம்படும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. 

இதய ஆரோக்கியம்

கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு (anti-inflammation) தன்மை உண்டு. உடலைச் சேதப்படுத்தும் நிலையற்ற அணுக்களை இந்தத் தன்மை தாக்கி, இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்யும்.

மேலும், கிரீன் டீயில் உள்ள ‘பாலிபினால்கள்’ ரத்த அழுத்தம், வீக்கம், அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைய உதவும். 

மேம்படுத்தப்பட்ட நினைவாற்றல்

கிரீன் டீ அருந்துவதால் சிறந்த அறிவாற்றல், மேம்படுத்தப்பட்ட நினைவாற்றல் ஆகிய பலன்கள் இருப்பதாக சீனாவில் பலரும் நம்புகின்றனர். 

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 50 வயது முதல் 63 வயது வரையிலான பத்து பெண்களுக்கு கிரீன் டீ நினைவாற்றலை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.

கிரீன் டீயில் உள்ள சில அமினோ அமிலங்கள், நினைவாற்றலை வலுப்படுத்த உதவுகின்றன.

எனவே, தினசரி கிரீன் டீ அருந்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

இதற்கிடையே, கிரீன் டீயைத் தேநீராகவோ மாத்திரையாகவோ உட்கொள்ளலாம். 

இருப்பினும், அதிக அளவில் கிரீன் டீ உட்கொள்வதால் குமட்டல், தூக்கமின்மை, கல்லீரல் பாதிப்பு, ரத்த அழுத்தம், இதய துடிப்பு துரிதமாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே, அளவோடு உண்டால் அளவில்லா நன்மைகள் சேரும்.

குறிப்புச் சொற்கள்