இளையர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம்

2 mins read
141eff70-97cb-4d07-8a70-f1bac783d254
யூனிக்லோ நிறுவனமும் கிரீன் நட்ஜ் சமூக நிறுவனமும் இணைந்து இளையர்களுக்காக உருவாக்கியுள்ள புதிய திட்டம் ‘பிளானட் போவ்’.  - படம்: யூனிக்லோ நிறுவனம்
multi-img1 of 2

பருவநிலை மாற்றம் குறித்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகைப் பாதுகாப்பதில் இளையர்கள் தங்கள் பங்கை ஆற்ற கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

யூனிக்லோ நிறுவனமும் கிரீன் நட்ஜ் எனும் உள்ளூர் சமூக நிறுவனமும் இணைந்து இளையர்களுக்காக உருவாக்கியுள்ள திட்டம் ‘பிளானட் பாய்ண்ட் ஆஃப் வியூ (போவ்) - உன் கண்ணோட்டம், உன் முயற்சிகள்’.

இத்திட்டத்தில் பதிவுசெய்துகொண்ட மாணவர்கள் நேரடியாகப் பயிற்சிப் பட்டறைகள், உரையாடல்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில்  கலந்துகொள்வர்.

நெகிழிக் கழிவுகள் குறைப்பு, கடல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய கற்றல் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு, குறைந்தபட்சம் 1,000 மணி நேர பங்கேற்பு என்பது இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கு.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ‘பிளானட் போவ்’ திட்டத்திற்கு முன்பு ‘கிட்ஸ் இன் ஏக்சன் ’ எனும் திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கச் செயல்படுத்தப்பட்டது.

இளையர்கள் தங்களின் வீடுகள், வகுப்பறைகளைவிட்டு வெளியே வந்து, உலகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான தளத்தை இத்திட்டம் ஏற்படுத்த முனைகிறது.

சிங்கப்பூர்ச் சூழலுக்கு ஏதுவான கல்வித் திட்டம் மூலம் இளையர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இளையர்களிடமும் கல்வியாளர்களிடமும் பெறப்பட்ட கருத்துகளைக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரீன் நட்ஜ் சமூக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெங் லி செங், 36, மாணவர்கள் தங்களின் பள்ளிப் படைப்புகளைத் தாண்டி, இத்திட்டத்தின் மூலம் கற்றுக்கொள்வதைத் தங்கள் வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம் என்றார். 

“இத்திட்டத்தின் புதுமையே, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளை வடிவமைப்பதுதான்.

“இத்திட்டம் பள்ளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்கள் சிங்கப்பூரின் சுற்றுப்புறத் தூய்மைக்குப் பங்காற்ற மிகவும் ஆர்வமாக உள்ளனர். எடுத்துக்காட்டாக, துணிகளை வீணாக்காமல் அவற்றை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்று நாங்கள் கற்றுக்கொடுப்போம்,” என்று திரு ஹெங் விளக்கினார்.

யூனிக்லோ நிறுவனத்தின் நிலைத்தன்மைப் பிரிவு மூத்த நிபுணரான திருவாட்டி ஹவீ லீ, 57, “ஆடைகள் என்பவை ஒருமுறை அணிந்தபின் தூக்கி வீசக்கூடிய பொருள்கள் அல்ல என்பதை மாணவர்களுக்குப் புரிய வைக்க விரும்புகின்றோம், அது மட்டுமல்லாமல், நாங்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள் மூலம், மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.

“உங்கள் உலகம், உங்கள் செயல்கள், உங்கள் இடம் என்பதை உணரச்செய்து, சுற்றுச்சூழல் மீதான அக்கறையை அதிகப்படுத்த விரும்புகின்றோம்,” என்று சொன்னார். 

குறிப்புச் சொற்கள்
இளையர்பாதுகாப்புசுற்றுச்சூழல்