ஒவ்வோர் ஆண்டும் தென்கிழக்காசியாவில் வெப்பமண்டலக் காலநிலை தொடங்கும்போது டுரியான் பழத்தின் வாசனை வீசத் தொடங்கும்.
அதனையடுத்து, சிங்கப்பூரிலும் டுரியான் பழங்களை விற்கும் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும்.
பலர் நீண்ட வரிசைகளில் நின்று அப்பழத்தை வாங்க வெகுநேரம் காத்திருப்பர்.
சமூக ஊடகத் தளங்களில் சுவையான டுரியான் பழங்கள் எங்குக் கிடைக்கும் என்பதை காட்டும் காணொளிகள் பரவலாக வரத் தொடங்கும்.
சிங்கப்பூரர்கள் பலருக்கு டுரியான் வெறும் பழம் மட்டுமன்று. அது உள்ளூர்க் கலாசாரமாகவும், சமூக ஒன்றுகூடல்களில் இடம்பெறும் உணவாகவும் கருதப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவரும் முசாங் கிங் எனப்படும் பிரபல டுரியான் பழத்தைச் சுவைக்க ஒன்றுகூடுவர்.
பழத்தை விற்பவர் டுரியான் பழத்தின் முட்கள் நிறைந்த கடினமான தோலை பிளந்து அதனுள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழத்தைத் தனியாகப் பிரித்து எடுப்பதைப் பார்க்கும்போது பலருக்கு இன்பமாக இருக்கும்.
தனித்துவமான மணத்திற்கு அறியப்பட்ட இந்த டுரியான் பழம் எவ்வாறு புகழ்பெற்றது?
தொடர்புடைய செய்திகள்
அதன் மணம் மிகவும் அதிகமாக இருப்பதால் விடுதிகளிலும் பொது போக்குவரத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும், டுரியானை சுவைக்க ஆவலுடன் இருப்போர் பலர் உள்ளனர். அதன்மீது நாட்டம் கொண்டவர்கள் அப்பழத்திற்கு அடிமையானவர்கள் போல இருப்பர்.
ஆனால், அதனைப் பிடிக்காதவர்கள் அதனைக் கொஞ்சம்கூட சுவைத்துப் பார்க்க மாட்டார்கள்.
டுரியான் பழமாக உண்ணப்படுவதுடன், பல உணவுவகைகளிலும் சேர்க்கப்படுகிறது.
கேக், பனிக்கூழ், இனிப்பு வகைகள் பலவற்றில் டுரியான் மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றது. பல காப்பி வகைகளிலும் டுரியான் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டுரியான் பழங்கள் தென்கிழக்காசியாவில் வளர்ந்தாலும் காலநிலை மாற்றமும் மாறிவரும் அறுவடை முறைகளும் சில டுரியான் வகைகளைக் கண்டுபிடிப்பதை கடினமாக்கியுள்ளன.
முசாங் கிங் போன்ற வகைகள் ஒரு கிலோ $30 வரை விற்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் மிகவும் அறியப்பட்டவர்கள் டுரியான் பழங்களைப் பற்றி அதிக காணொளிகளைப் பதிவேற்றம் செய்து மக்களின் உண்ணும் ஆசையைத் தூண்டி வருகின்றனர்.
டுரியான் பழம் சிங்கப்பூரின் அடையாளமாகவும் திகழ்கிறது.
“டுரியான் பழத்தைச் சாப்பிடாத ஒருவர் சிங்கப்பூரராக இருக்க முடியுமா?” என்ற கேள்வி எழுவதும் வழக்கம்தான்!