சிகை அலங்காரத்தை மெருகூட்டும் வழிகளில் ஒன்று, முடிக்குச் சாயம் பூசுதல். ஒருவரின் தலைமுடிக்குச் சாயம் பூசும்போது முடியில் பல மாற்றங்கள் செய்யப்படும். அந்த மாற்றங்கள் சிகை அழகைக் கூட்டினாலும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும்.
முடிக்குச் சாயம் பூசுபவர்கள் அதன் ஆரோக்கியத்தைக் காக்கும் வழிகளில் சிலவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
முடிக்குச் சாயம் பூசுவதற்கு முன்னர் ஒருவர் சாயத்தில் சல்ஃபேட்ஸ், சோடியம் குளோரைட், பாராபென்ஸ் ஆகிய மூலப்பொருள்கள் கொண்ட சாயங்களைத் தவிர்க்க வேண்டும்.
இவை முடியை மேலும் உலர வைப்பதுமின்றி முடியில் இருக்கும் பசைத்தன்மையை அகற்றக்கூடிய தன்மை கொண்டவை.
முடிக்குச் அடிக்கடி சாயம் பூசுபவர்களாக இருந்தால் முடியின் ஈரத்தன்மை குறையாமல் இருக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுத்தலாம்.
அது முடியின் ஈரத்தன்மையை பாதுகாக்க ஏதுவாக இருக்கும். நியூயார்க்கைச் சேர்ந்த நட்டாலி ரோட்ஜர், வாடிக்கையாளர்களுக்குச் சிகை அலங்காரம் செய்பவர்.
ஒருமுறை சாயம் பூசினால் மீண்டும் பூசுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் இடைவெளி விடுவது சிறந்தது என்கிறார் அவர்.
சாயம் அடித்துள்ள முடிக்கு ஒரு சில ஷாம்பூக்கள் மட்டுமே பயனளிக்கும். அதை நன்கு அறிந்து பயன்படுத்துவது சிறப்பு.
தொடர்புடைய செய்திகள்
அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவதும் தவறான வழி. சாயம் பூசப்பட்ட முடியில் அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்தப்படும்போது அது முடியின் ஈரத்தன்மையை அகற்றிவிடும்.
குறிப்பிட்ட சில ஷாம்பூக்களில் சாயம் பூசப்பட்ட முடிக்கு அதைப் பயன்படுத்த உகந்தது எனும் முத்திரை இருக்கும்.
ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்தும்போது அதில் முடியை மெருகூட்டும் தன்மை உள்ளதா என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஹேர் மாஸ்க்குக்கு அப்பாற்பட்டு சில மாஸ்க் வகைகள் முடியின்மீது பூசி பல நேரம் கழித்து கழுவும்போது நன்கு பயனளிக்கும்.
முடிக்குச் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்கும் அது வழியமைக்கும். நேரம் கிடைக்கும்போது முடிக்கு எண்ணெய் பூசி வருவதும் நன்மை பயக்கும்.
அவ்வப்போது முடியை நறுக்கிச் சீராக வைப்பதும் ஒரு சிறந்த வழி. இதைச் செய்து வந்தால் முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
முடியைச் சுருட்டுவது, நேராக்குவது என பலர் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் காட்டி வருகின்றனர்.
இதைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் அதிக வெப்பத்தை வெளிப்படுத்துவதால் அது முடியைப் பாதிக்கக்கூடும்.