புத்தாண்டின் தொடக்கத்தில், பூமி சூரியனைச் சுற்றும் தனது பாதையில் முக்கியமான ஓரிடத்தை அடையவிருக்கிறது. அதாவது, சூரியனுக்கு மிக அருகே செல்லவிருக்கிறது.
இந்தப் புள்ளிக்குப் ‘பெரிஹீலியன்’ (Perihelion) என்று பெயர்.
ஒவ்வோர் ஆண்டும் நிகழும் வழக்கமான வானியல் நிகழ்வு இது. இந்த ஆண்டு (2026) ஜனவரி 3ஆம் தேதி பிற்பகல் 12.15 (Eastern Standard Time) மணிக்கு (சிங்கப்பூரில் ஜனவரி 4ஆம் தேதி காலை 1.15 மணி) ‘பெரிஹீலியன்’ புள்ளியை அடையவிருக்கிறது பூமி.
ஜனவரி மாதத்தில் பூமி, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்பது பலருக்கும் வியப்பளிக்கக்கூடும். ஏனெனில் பூமியின் வடக்குப் பாதியின் பெரும்பகுதி குளிரில் வாடும் காலம் இது.
பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு வெகு தொலைவே அமைந்திருக்கும் புள்ளி ‘அஃபீலியன்’ (Aphelion) எனப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் பூமி இந்தப் புள்ளியை எட்டும்.
‘பெரிஹீலியன்’ புள்ளியில் பூமி சூரியனிலிருந்து ஏறத்தாழ 91.4 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும். ‘அஃபீலியன்’ புள்ளியில் அந்தத் தொலைவு ஏறக்குறைய 94.5 மில்லியன் மைல் என்று கூறப்படுகிறது.
பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பருவங்கள், சூரியனுக்கும் அதற்கும் இடையிலான தொலைவைப் பொறுத்து அமைவதில்லை. மாறாக, அது சுழலும் அச்சின் சாய்வுக் கோணத்தைப் பொறுத்தே அமைகிறது.


