பெண்மையின் சிறப்பைப் புரிய வைக்கும் ‘ஈரம்’

பெண்மையின் சிறப்பைப் புரிய வைக்கும் ‘ஈரம்’

3 mins read
aa1fa6b7-7725-4b1f-b757-3466fd4c4dfe
கல்ப விருக்‌ஷா கலைப்பள்ளியின் ஏற்பாட்டில் ‘ஈரம்’ நாட்டிய நாடகம். - படம்: கல்ப விருக்‌ஷா நுண்கலை நிறுவனம்

சமூக விவகாரங்களையும் தனிமனித அனுபவங்களையும் எடுத்துரைக்க பரதநாட்டியத்தைப் பயன்படுத்தும் அணுகுமுறை நூதனமாகத் தோன்றினாலும் வரவேற்பை மெல்ல பெறுகிறது.

பெண்களுக்கு உரித்தான தனிப்பட்ட போராட்டங்களையும் வேதனைகளையும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைப்பது எளிதன்று. 

‘ஈரம்’ என்ற தலைப்பில், கல்ப விருக்‌ஷா கலைப்பள்ளியின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நாட்டிய நாடகம், இந்தப் பணியை நிறைவேற்ற முற்படுகிறது.

‘சோட்டா’ எனப்படும் சிங்கப்பூர்க் கலைப்பள்ளி அரங்கில் இந்த நாட்டிய நாடகம், ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நாடகத்திற்கான யோசனை உதயமானதாக கல்ப விருக்‌ஷா நிறுவனரும் தலைமை ஆசிரியருமான மீரா பாலசுப்ரமணியன் தெரிவித்தார். 

“சென்னையில் அந்தப் படைப்பை மேடையேற்றியபோது, பார்வையாளர்களில் ஒரு சிலர் நெளிய ஆரம்பித்தனர். ஏன் அவ்வாறு செய்தனர். நாட்டிய நாடகத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், உங்கள் பக்கத்து வீட்டில், உங்கள் வீட்டில், ஏன் உங்களிடத்தில்கூட இவற்றை நீங்கள் கவனித்திருக்கலாம்,” என்று அவர் கூறினார். 

பெண்களின் நலனுக்குக் குரல்கொடுக்கவேண்டிய பெண்ணியம், நாளடைவில் தவறாகத் திரிக்கப்பட்டு, பெண்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டு அவர்களில் பலரும் பெட்டிக்குள் அடங்கிவிடுவதாகத் திருவாட்டி மீரா கூறினார். 

கருப்பொருள் சவாலாக இருந்தாலும் அந்தச் சவால், கலைஞர்களை வளர்த்துவிடுவதாக நடன வடிவமைப்பாளர் ஷியாம்ஜித் கிரண் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, சமூக விவகாரங்கள் பற்றிய படைப்பாக, பரதக் கலைஞர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை எடுத்துரைக்கும் ‘முடிவில் ஓர் ஆரம்பம்’ என்ற நாட்டிய நாடகத்தை திரு ஷியாம்ஜித் தயாரித்திருந்தார்.

“உணர்வுகளை உண்மையாக, அதே நேரத்தில் மேடைப் படைப்புக்கு ஏற்ற கலை நயத்துடன் அதனைக் காட்ட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது,” என்று திரு ஷியாம்ஜித் கூறினார்.

உணர்வைத் தொட்டு சிந்தனையைத் தூண்டியது

புராணக் கதைகளையொட்டிய நடனப் படைப்புகளில் ஈடுபட்டுவந்த மானஸா, முதன்முறையாகச் சமூகம் சார்ந்த நடனப் படைப்பில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

தற்காலத் தலைப்புகளைப் பாரம்பரிய நடனத்தில் புகுத்துவது புதுமையாக இருந்ததாக நடனமணிகள் கூறினர்.

“நடனக் கருப்பொருள் நடைமுறை வாழ்க்கை சார்ந்ததாக இருந்ததால் அதுபற்றி நாங்கள் கூடுதலாகப் பேசினோம். சுய கருத்துகளை நடனத்தின்வழி வெளிப்படுத்த முடிந்தது புதுமையாக இருந்தது,” என்றார் குமாரி மானஸா.

நடனத்தின் பல்வேறு கூறுகள் தம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக மற்றொரு நடனமணி வித்யா தெரிவித்தார்.

“ஆண்பிள்ளைகளுடன் சேர்ந்து பெண் பிள்ளைகள் விளையாடக் கூடாது என்று சிறு வயதில் என்னிடம் சொல்லப்பட்டதுண்டு. அது போன்ற ஓர் அம்சம் நடனத்தில் இடம்பெற்றபோது அது என் நினைவலைகளைத் தூண்டியது,” என்றார் அவர்.

பரதநாட்டிய அசைவுகளைச் சற்று மாற்றினாலும் அதனைக் கச்சிதமாகப் படைக்க வேண்டும் என்று நடனமணி பிரீத்தி கூறினார். நடனத்திறன்களை வெளிப்படுத்தும் நடன வடிவமைப்பாளர் ஷாம் நடனத்தை வடிவமைத்தார்.

நடனத்தில் கையாளப்பட்ட மாறுபட்ட கலவை இசை, தற்காலப் புதுமைப் பெண்ணின் பரிணாமத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறிய ரெனீஷா, “புதுமைப்பெண் என்ற பாரதியின் கருத்து, காலப்போக்கில் தொடர்ந்து மாறிவருவதையும் புதிய பாணியிலான இசை காட்டுகிறது,” என்றார்.

பெண்களின் உணர்வுகளை ஆழமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்த இந்தப் படைப்பு வாய்ப்பு தந்துள்ளதாக அதில் இடம்பெறும் ஒரே ஆண் கலைஞரான யுகேஷ் கண்ணன் தெரிவித்தார். 

“விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப்படைப்பில் நடிப்பது கடினம். நான் இன்னும் கற்றுக்கொள்கிறேன்,” என்றார் யுகேஷ்.

குறிப்புச் சொற்கள்