சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நடத்தும் காப்பிய விழா ஒன்பதாம் ஆண்டாக செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி காலை நடைபெற்றது.
தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாண்டுக்கான இளங்கோவடிகள் விருது கவிமாலை அமைப்பின் காப்பாளர் மா அன்பழகனுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா.தினகரன் அந்த விருதை வழங்கினார்.
இவ்வாண்டு நிகழ்ச்சி, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியை மையமாகக் கொண்டு இடம்பெற்றது.
முன்னதாக, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களத் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் காப்பியங்களில் உள்ள பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அடுத்த தலைமுறையினர் அறியச்செய்திட வேண்டும்; அதன் வழி தமிழ்ச் சமூக வரலாறு எழுதப்படும் என்று தமது நோக்கவுரையில் குறிப்பிட்டார்.
தலைமையுரை ஆற்றிய கவிஞர் இறை மதியழகன் பல்வேறு காப்பியங்களைப் பற்றிச் சுவைபட எடுத்துக்கூறினார்.
காப்பியங்கள் குறித்தக் கவியுரையைக் கவிஞர் தியாக இரமேஷ் வழங்கினார். புதுச்சேரி அகில இந்திய சமூகநல அமைப்பின் செயலாளர் தா கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
முனைவர் இராஜி சீனிவாசன் தலைமையில் பல்கலைக்கழக மாணவிகள் கலந்துகொண்ட ‘வளையாபதி காட்டும் தமிழ்ப் பண்பாடு’ என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காதல், குடும்பம், பொதுவாழ்வு ஆகிய தலைப்புகளில் முறையே மாணவியர் முத்து சுவேதா, வைஷ்ணவி கண்ணன், மோகன் ஹரிவர்தினி ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக புதுச்சேரி அரசின் கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளைப் பெற்றவரும் காப்பியக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவருமான அ உசேன் கலந்துகொண்டார். அவரது தலைமையில் ‘காப்பியங்கள் காட்டும் அவலச்சுவை’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் பிரபாதேவி, பாலமுருகன், லலிதா சுந்தர், ந.வீ. விசயபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி: சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்

