காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த மர்ம நபரிடம் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டார் 80 வயது மதிக்கத்தக்க ராமசாமி.
அலுவலகத்திற்கு அருகே இருந்த அவருக்கு, தம் வங்கிக் கணக்கு ஊடுருவப்பட்டதாகக் குறுஞ்செய்தி ஒன்று கிடைத்தது. இதனைத் தடுப்பதற்கு இணைப்பு ஒன்றைச் சொடுக்கும்படி அந்தக் குறுஞ்செய்தி கேட்டிருந்தது.
இணைப்பைச் சொடுக்கிய திரு ராமசாமி, திடீரென காணொளி இணைப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டார்.
காணொளித் தொடர்பின்போது திரு ராமசாமியிடம் பேசிய மோசடிக்காரர், காவல்துறை சீருடை போன்ற ஆடையைத் தரித்திருந்தார்.
மோசடிக்காரருக்குப் பின்னால் சிங்கப்பூர் காவல்துறையின் சின்னங்களைக் கொண்ட பின்சுவர் இருந்தது.
மோசடிக்காரரை உண்மையான காவல் அதிகாரி என நம்பிய திரு ராமசாமி, அவர் கேட்ட தனிப்பட்ட விவரங்களை வழங்கினார்.
அப்போது அந்த வழியாக வந்த நான், திரு ராமசாமி தெரிந்தவர் என்பதால் அவரிடம் பேச முற்பட்டேன்.
காணொளி அழைப்பில் இணைந்திருந்த திரு ராமசாமி, காவல் அதிகாரியைப்போல இருந்தவரிடம் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“காவல்துறை அதிகாரிக்குப் பலமான ஃபிலிப்பினோ பேச்சுத் தொனி இருப்பதைக் கேட்டு எனக்குச் சந்தேகம் எழுந்தது. எந்த நிலையத்திலிருந்து அழைக்கிறீர்கள்?” என்று நான் கேட்ட மறுநொடி, தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அந்நேரத்தில் பதற்றம் அடைந்த திரு ராமசாமியைச் சமாதானப்படுத்தி, அவரது வங்கியைத் தொடர்புகொண்டேன். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையால் தவறு ஏதும் நடக்கவில்லை.
மற்றொரு சம்பவத்தில், இணைய நச்சுநிரல் விளம்பரம் ஒன்றைச் சொடுக்கியதை அடுத்து, தம் மின்னஞ்சல் ஊடுருவப்பட்டதாகக் குறிப்பிடும் குறுஞ்செய்தி ஒன்று கிடைத்ததாகத் திரு ராமசாமி குறிப்பிட்டார்.
“இதனால் நான் கைப்பேசிக் கடைக்குச் சென்று எல்லாத் தரவுகளையுமே அகற்றும்படி கேட்டுக்கொண்டேன்,” என்றும் அவர் கூறினார்.
மோசடிகளும் இணையக் குற்றங்களும் சிங்கப்பூரில் கவலைக்குரிய பிரச்சினையாக உள்ளது
திரு ராமசாமியை புத்திக்கூர்மையானவர், எளிதாக ஏமாறுபவர் அல்லர் என்ற நிலையில் அவருக்கே இப்படி ஆகிவிட்டது என்று அவருக்குத் தெரிந்தவர்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.
இருந்தபோதும் தொழில்நுட்பத்தால் மோசடி உத்திகள் மேலும் நுட்பமடைந்துவிட்டதை உணர்வதால் தாம் வருத்தத்தில் உழலப்போவதில்லை என்று அவர் உறுதியுடன் கூறினார்.
2024ஆம் ஆண்டில் மோசடி மற்றும் இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 10.8 விழுக்காடாக உயர்ந்து 55,810ஆகப் பதிவாகியுள்ளது. 2023ல் இந்த எண்ணிக்கை 50,376ஆக இருந்தது.
கடந்த ஆண்டின்போது 182 மில்லியனுக்கும் அதிகமான மோசடித் தொகையை மோசடிக்கு எதிரான தளபத்தியம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. இத்தகைய மோசடிகளால் ஏறத்தாழ $930 மில்லியன் வெள்ளப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.
மோசடி இழப்புகளின் பெரும்பகுதி மின்னிலக்க நாணயத்தால் ஏற்படுபவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழிப்புடன் ஆராயும் மனநிலை தேவை
மோசடிகளுக்குக் கணிசமானோர் இலக்காவதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காண்பிக்கும்போது இவ்வாறு தங்களுக்கு நேராது என்று பலர் எண்ணுகின்றனர்.
ஆனால் மோசடி செய்ய முற்படுபவர்கள், தாங்கள் குறிவைக்கும் நபர்களின் சூழ்நிலையை நன்கு கவனித்தே செயல்படுவர்.
மோசடிக்காரர்கள் உங்களிடம் ஆசையை மூட்டி அல்லது பயமுறுத்தி உங்களது உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்வர் என்று இம்பார்ட் நிறுவனத்தின் தலைவர் நரசிம்மன் திவாசிகமணி தெரிவித்தார்.
ஆத்மன் மனநல ஆலோசனை மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் நிறுவனர் கணேசன் இதனுடன் இசைகிறார்.
ஏதேனும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி மோசடிக்காரர்கள் உங்களை வசப்படுத்த நினைப்பர். முதிய தம்பதியரிடம் மோசடிக்காரர் ஒருவர், அவர்களது மகள் விபத்திற்குள்ளாகிவிட்டதாகப் பொய்யுரைத்த சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. வேறு சிலருக்கு லாட்டரிப் பணம் இப்படியாக ஒரு மனிதன் உணரும் பதற்றத்தையும் பேராசையையும் ஏமாற்றுக்காரர்கள் தங்களைச் சாதகமாக்கிக்கொள்கின்றனர் என்று திரு கணேசன் கூறினார்.
தொலைபேசி அல்லது மின்னஞ்சலின் நம்பகத்தன்மையைச் சோதிக்காமல் அவற்றை எளிதில் நம்பும் போக்கு உள்ளது. எனவே, கவனத்துடன் இருப்பது முக்கியம். அவசரத்தை விடுத்து அன்புக்குரியவர்களின் ஆலோசனையை நாடுவது நல்லது என்று திரு நரசிம்மன் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய உற்றாருடன் இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று சிங்கப்பூர் சமூக, மானுடவியல் பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான பொறுப்பாளரான இணைப் பேராசிரியர் ரஸ்வானா பேகம் தெரிவித்தார்.
நல்ல உறவுகள் பாதுகாப்பு அரண்கள்
தவறான முடிவை எடுத்துவிட்டோமே என்ற திகைப்பு, திரு ராமசாமியைப்போல சிலருக்கு உடனடியாக ஏற்படலாம். தனிப்பட்ட தகவல்களை அளித்துவிட்ட நிலையில் இழப்புகளை இயன்றவரை தவிர்ப்பது முக்கியம்.
பதற்றமும் பீதியும் முடிவெடுக்கும் திறனைப் பாதிப்பதால் இக்கட்டான சூழலிலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்று திரு நரசிம்மன் வலியுறுத்தினார்.
“நிதானத்துடன் விரைவாகச் செயல்படுங்கள். வங்கியைத் தொடர்புகொண்டு உங்கள் வங்கிக் கணக்கை முடக்குவது முக்கியம். மறைச்சொல்லை மாற்றுங்கள்,” என்று அவர் கூறினார்.
மோசடிகளைப் பற்றிய செய்திகளைப் படித்து எச்சரிக்கைகளை நினைவில் கொள்வதும் முக்கியம் என்று திரு நரசிம்மன் கூறினார். எம்பவர் ஏஜிங் போன்ற அமைப்புகள், இது குறித்து வகுப்புகளையும் நடத்துகின்றன. மோசடிகளைப் பற்றிப் பிறருடன் பேசும்போது விழிப்புணர்வு கூடுகிறது, என்றார் திரு நரசிம்மன்.
மோசடி செய்யப்பட்டாலும் இதனால் அவமானம் ஏற்பட்டதாக நினைக்க வேண்டாம் என்றும் திரு கணேசன் கூறுகிறார். தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வருவதால் மோசடிகள் மிகவும் நுட்பமாக, எளிதில் கண்டுப்பிடிக்கப்படாத அளவுக்கு உருவெடுத்துள்ளன. பிள்ளைகளிடம் சொல்லி அவமானப்படவேண்டாமே என எண்ணுவோரிடம், அந்த யோசனையை மாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்று திரு கணேசன் கூறினார்.
பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் பங்கிற்கு, அவர்களுமே நிதானம் காத்து இத்தகைய சம்பவங்களைப் பக்குவத்துடனும் புரிந்துணர்வுடனும் அணுகவேண்டும் என்று திரு நரசிம்மன் கூறினார்.
மூத்தோர் தைரியமாகப் பேசுவதற்கான சூழலை அமைத்துத்தருவது அன்புக்குரியவர்களின் கடமையாகும். ஏமாற்றப்பட்டவர்களின் மீது கோபம் காட்டுவதையும் தவிர்க்கவேண்டும் என்றார் திரு நரசிம்மன்.