மின்னஞ்சல் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
ஒரு முக்கிய அலுவல் தொடர்பான மின்னஞ்சல் அனுப்பியவுடன் நிம்மதி பெருமூச்சு விடுவதையும் ஒருவித அழுத்தம் குறைவதையும் பலர் உணர்ந்திருக்கலாம்.
ஆனால், அதுவரை இருந்த இறுக்கத்தையும் மூச்சுத்திணறலையும் பலர் கவனிப்பதில்லை. இதனை ‘ஈமெயில் ஆப்னியா’ (Email Apnea) எனும் ‘மின்னஞ்சல் மூச்சுத்திணறல்’ என்று விவரிக்கின்றனர் நிபுணர்கள்.
மாறிவரும் பணிச்சூழலில் வாட்ஸ்அப், மின்னஞ்சல், ‘ஸ்லேக்’, ‘கூகல் சாட்’ என இருக்கும் அனைத்து செயலிகளிலும் வேலை தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
நம்மில் பலரும் திறன்பேசியில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் வரும் ஒரு தகவல், பதில் அனுப்ப வேண்டிய முக்கிய மின்னஞ்சல், ‘ஸ்லேக்கில்’ வரும் கேள்விகள் என அனைத்துக்கும் அடுத்தடுத்து பதில் அனுப்பும் சூழலுக்கு ஆளாகியிருப்போம்.
அத்தகவல்களுக்கு பதிலளிக்கும்போது ஏறத்தாழ 80 விழுக்காட்டினரின் சுவாச நிலை குறுகியதாகவும் ஆழமற்றதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிலர் பதிலைத் தட்டச்சு செய்யும் வரை மூச்சை முழுவதுமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மின்னஞ்சல் மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் சிரமங்கள்
மூச்சை அடக்கி வைப்பது மனச்சோர்வு, மன அழுத்தம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். மேலும், அது உடலின் ‘ஆக்ஸிஜன்’ எனப்படும் பிராணவாயு, கார்பன் டைஆக்சைட், நைட்ரிக் ஆக்சைட் உள்ளிட்ட வேதிப்பொருள்களின் சமநிலையை சீர்குலைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும் வாய்ப்புள்ளது.
ஆழமற்ற மேலோட்டமான மூச்சுவிடும் முறையால் நாளடைவில் நரம்பு மண்டலம் வலுவிழந்து தூக்கம், நினைவாற்றல், கற்றல் தொடர்பான ஆற்றலையும் குறைக்கும் அபாயம் உள்ளது.
இது, இதயத் துடிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். கவனச்சிதறல் ஏற்பட்டு, அதன் காரணமாக உற்பத்தித் திறனும் நாளடைவில் குறையக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
மின்னஞ்சல் மூச்சுத்திணறலை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பிரச்சினையைச் சமாளிப்பதற்கும் அதிலிருந்து மீண்டெழுவதற்கும் முதற்படி பிரச்சினையை ஒப்புக்கொள்வது.
முதலில் அவ்வப்போது மூச்சு விடும் முறையைத் தீவிரமாக கவனிக்க வேண்டும். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை கவனிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
நாள் முழுவதும் மின்னஞ்சலைக் கவனிக்காமல் சிறு இடைவெளிகள் எடுப்பது அவசியம். பணிச்சூழல் அனுமதித்தால் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை மட்டும் மின்னஞ்சலைப் படித்து பதிலளிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். நேர வரம்புகளை ஏற்படுத்திக்கொள்வது பதற்றத்தைச் சற்று குறைக்கும்.
மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கும் பதற்றத்தைக் குறைக்க, வேண்டிய தொழில்நுட்ப உதவியை நாடலாம். எடுத்துக்காட்டாக, இலக்கணப் பிழை குறித்த கவலையைக் குறைக்க, அதற்குரிய நிரலைப் (Extensions) பயன்படுத்தலாம்.
மின்னஞ்சல் பெட்டிகளை ஒழுங்காகப் பராமரிப்பது உதவி செய்யலாம். பல்வேறு வகையான மின்னஞ்சல்களுக்கு வெவ்வேறு மின்கோப்புகளை (email ribbons) உருவாக்குதல் அதற்கு உதவும். சில முக்கிய சொற்கள், அனுப்புனர் அஞ்சலிலிருந்து வரும் தகவல்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவையற்ற மின்னஞ்சல்களைத் தானாக வேறு மின்கோப்புகளுக்கு மாற்றும்படி அமைத்துக் கொள்ளலாம்.
அதோடு, 4-7-8 எனப்படும் 4 மணித்துளிகள் மூச்சை உள்ளிழுத்து, 7 மணித்துளிகள் அடக்கிவைத்து, 8 மணித்துளிகள் வெளிவிட்டுப் பயிற்சி செய்யலாம். இது ஒட்டுமொத்த மனநலனுக்கும் நன்மை விளைவிக்கும்.