இந்தியாவின் சிறப்புகளைக் கொண்டாடும் சாலையோர உணவு விழா

இந்தியாவின் சிறப்புகளைக் கொண்டாடும் சாலையோர உணவு விழா

2 mins read
இந்திய சாலையோர உணவுகளை சிங்கப்பூரிலேயே சுவைக்க ஓர் அரிய வாய்ப்பு
97825570-0b45-40e9-9f15-97b0e355244b
இந்தியாவில் சாலையோரங்களில் விற்கப்படும் விதவிதமான அறுசுவை உணவுகளை சிங்கப்பூரிலேயே சுவைக்க இது ஓர் அரிய வாய்ப்பு. - படம்: ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூர்
Google News Preferred Icon

இந்தியாவில் பரபரப்பான சாலையோரங்களில் கிடைக்கும் அறுசுவை உணவுகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வருகிறார் விருதுபெற்ற சமையல் நிபுணர் குல்டீப் நெகி.

ஜூலை 1 முதல் 14 வரை ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரிலுள்ள ‘டிஃபன் ரூம்’ உணவகத்தில் நடைபெறும் ‘சாலையோர உணவு விழா’வில் அவ்வுணவுகளைச் சுவைக்கலாம்.

இந்தியா முழுவதும் பயணம் செய்ததில் தாம் கண்ட பல்வேறு தனித்துவ உணவுகளோடு தம் சொந்த புத்தாக்கத்தையும் புகுத்தி, கலா ரசனைமிகுந்த நாவிற்கினிய உணவுகளை வழங்கவுள்ளார் குல்டீப்.

மும்பையின் இனிப்பும் காரமும் மிகுந்த ‘தஹி பூரி’யுடன் (தயிர் பூரி) விருந்து உபசரிப்பைத் தொடங்குகிறார் குல்டீப்.

‘டிஃபன் ரூம்’ உணவகத்தின் விருதுபெற்ற சமையல் நிபுணர் குல்டீப் நெகி. 
‘டிஃபன் ரூம்’ உணவகத்தின் விருதுபெற்ற சமையல் நிபுணர் குல்டீப் நெகி.  - படம்: ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூர்

அடுத்ததாக வருவது தக்காளித் தேங்காய் சட்னி, பொரித்த நண்டுகளோடு தயாரிக்கப்பட்ட கர்நாடகாவின் தனித்துவமான அரிசி மாவு ‘அக்கி ரொட்டி’. சைவத்தை நாடுவோருக்கு, நண்டுகளுக்குப் பதிலாக பன்னீர் இருக்கும்.

மகாராஷ்டிரா வகை ஆட்டுக்கறியுடன் வெங்காயம், மிளகாய், பூண்டுச் சட்னி நிரம்பிய மும்பை சிறப்பு ‘கீமா பாவ்’ ரொட்டிகள் அசைவப் பிரியர்களுக்கும், மகாராஷ்டிரா வகை காரமான வறுத்த உருளைக்கிழங்கு அடங்கிய ‘வட பாவ்’ ரொட்டிகள் சைவம் உண்போருக்கும், அடுத்ததாகப் பரிமாறப்படும்.

அசைவத்தில், அம்ரித்சரி குல்ச்சா, கட்டி மேத்திச் சட்னியுடன் ‘முர்க் டக்கா டக்’. உருளை, வெங்காயம், மசாலா அடங்கிய பஞ்சாபி ‘குல்ச்சா நாண்’, வெங்காயம், தக்காளியுடன் டெல்லி பாணியில் தயாரிக்கப்பட்ட எலும்பில்லா கோழிக் கால் மற்றும் இனிப்பு, புளிப்புச் சட்னியுடன் வழங்கப்படும். சைவத்தில், கோழிக் காலுக்குப் பதிலாக பஞ்சாபி வகையான சன்னாக் கறி பரிமாறப்படும்.

விருந்தை இனிப்பாக முடித்து வைக்கிறது, ‘கேசரி ஜிலேபியோடு பாசுந்தி’ எனப்படும் பாரம்பரிய வடஇந்தியப் பால் பலகாரம்.

அன்றாடம் மதியம் 12 முதல் 1.30 மணி வரையும் இரவு உணவை மாலை 6.30 முதல் 9 மணி வரையும் ‘சாலையோர உணவு விழா’வில் சுவைக்கலாம்.

அசைவ உணவு $118 முதல், சைவ உணவு $108 முதல், ‘டிஃபன் ரூம்’ தனித்துவமாகத் தயாரிக்கும் மூன்று கிளாஸ் மதுபானம், ஆளுக்கு $78 முதல் என்ற விலையில் பரிமாறப்படும்.

இந்த இரு வாரங்களில் ‘டிஃபன் ரூம்’மின் குறிப்பிட்ட ‘அ லா கார்ட்’ உணவையும் உண்ணலாம். கூடுதல் தகவல்களுக்கு https://tiffinroom.com.sg/, https://www.menumodo.com/app.php/viewer/outlet/4729/36964 இணையத்தளங்களை நாடலாம்.

சிங்கப்பூரின் பழமையான வடஇந்திய உணவகங்களில் ஒன்றான ‘டிஃபன் ரூம்’, 1892லிருந்து ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரின் ஓர் அங்கமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

சிங்கப்பூரின் பழமையான வடஇந்திய உணவகங்களில் ஒன்றான ‘டிஃபன் ரூம்’, புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின்.
சிங்கப்பூரின் பழமையான வடஇந்திய உணவகங்களில் ஒன்றான ‘டிஃபன் ரூம்’, புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின். - படம்: ராஃபிள்ஸ் ஹோட்டல் சிங்கப்பூர்
குறிப்புச் சொற்கள்