தேவையற்ற சிந்தனை, பயம், பதற்றம் அதனால் ஏற்படும் மன அழுத்தம், கற்பனை ஆகியவற்றை எதிர்கொள்ள ‘உணர்ச்சி இடைவெளி’ எனும் முறை பரிந்துரைக்கப்படுகிறது.
இம்முறை, வெளிப்புறச் சூழலுக்கும் சிந்தனைக்கும் இடையிலான எல்லைகளை வரையறுப்பதன் மூலம் அதீத சிந்தனை ஓட்டத்தை முறியடிக்கிறது.
இந்த உணர்ச்சி இடைவெளி இருவகையாக வகைப்படுத்தப்படலாம். குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாக்கும் மனிதர்களிடமிருந்தும் சூழல்களிடமிருந்தும் சற்று விலகியிருப்பது ஒன்று. ஒரு சிந்தனை எழுவதற்கும், அதற்குத் தகுந்தபடி எதிர்வினையாற்றுவதற்கும் மத்தியிலான கால இடைவெளி மற்றொன்று.
எல்லை தாண்டும் சிந்தனைகளின் அறிவியல்
சிந்தனை, கற்பனை, பயம் ஆகிய உணர்ச்சிகள் எல்லை மீறும்போது, மூளையின் ‘அமிக்டலா’ (amygdala) எனும் உணர்ச்சிக்குப் பொறுப்பேற்றுள்ள லிம்பிக் அமைப்பின் பகுதி மூளைக்கு அபாய எச்சரிக்கை செய்து ‘கார்டிசால்’ உள்ளிட்ட மன அழுத்தச் சுரப்பிகளை வெளியிடுகிறது. இதயத் துடிப்பு அதிகரிப்பு, தசை இறுக்கம் ஆகியவையும் ஏற்படுகிறது.
இது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், நரம்பு மண்டலத்தின் எதிர்வினையாகவும் மாறுகிறது.
இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான இடைவெளியை உருவாக்கச் சில வழிமுறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆரோக்கியமான எல்லைகளை, வரம்புகளை வகுப்பது, சரியான இடத்தில் ‘வேண்டாம்’ என்பதைத் தெளிவாகச் சொல்வது ஆகியவை மூளையில் நல்ல அமிலங்களைச் சுரக்கச் செய்கிறது. ‘டோப்பமைன்’ சுரப்பியின் அளவு அதிகரித்து மூளையின் உணர்ச்சி மண்டலம் குளிர்ச்சியடைகிறது. இதனால் சிந்தனை தெளிவடைகிறது.
எதிர்வினையைத் தடுக்கும் ‘மூன்று நொடி’ அணுகுமுறை
இந்த உணர்ச்சி இடைவெளியை ஏற்படுத்துவதற்கான எளிய அணுகுமுறை, மூன்று நொடி இடைநிறுத்தம்.
தொடர்புடைய செய்திகள்
ஓர் இக்கட்டான, உணர்ச்சிபூர்வமான சூழலை எதிர்கொள்ளும்போது, 3 நொடிகள் சிந்தனை ஓட்டத்தைத் தடைசெய்வது, மூளையின் நினைவகம், தர்க்கச் சிந்தனைகளுக்குப் பொறுப்பேற்றுள்ள ‘ஃபிரீ ஃபிரன்டல் கோர்டெக்ஸ்’ எனும் பகுதி இயங்க வழிவகுக்கிறது. உடனடி எதிர்வினைக்கும் சிந்தனைமிக்க எதிர்வினைக்கும் உள்ள பெரிய வேறுபாட்டை அடைய இந்தச் சிறு இடைவெளி போதுமானதாக இருக்கிறது.
இதனைச் செய்வதற்கான அடிப்படை உத்தி, மூச்சுப் பயிற்சி. எந்தவோர் உணர்ச்சிக்கும் எதிர் கருத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு ஆழமாக மூச்சு எடுப்பது மொத்த நரம்பியல் மண்டலத்தையும் தளர்த்தி சிந்தனையைச் சீராக்குகிறது.
அடுத்த உத்தியாக, அந்த இடைவெளிக்கு ஒரு பெயர் கொடுக்கலாம். பதில் வினைக்கு முன்பாக, மனதிற்குள் அந்தப் பெயரை மூன்று முறை கூறுவது மூளைக்கு நினைவூட்டி, தெளிவுப் பாதையில் செல்ல உதவும். சிலர் இதனைச் ‘சாய்ஸ் பாயிண்ட்’ என்றும், வேறுசிலர் ‘விஸ்டம் கேப்’ என்றும் அழைக்கின்றனர்.
அடுத்த முக்கிய உத்தி உடல் விழிப்புணர்வு. எந்தவொரு தீவிர உணர்ச்சி ஏற்படும்போதும் உடலைக் கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை மேற்கொள்ளலாம். குறிப்பாகத் தாடைப்பகுதி, தோள்கள் ஆகியவற்றைக் கவனிக்கத் தொடங்குவது இயல்பான இடைநிறுத்தத்தை உண்டாக்கி உணர்ச்சி நிலை குறித்த உண்மையான பார்வையை வழங்குகிறது.

