தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநிலையைப் பாதிக்கும் வண்ணங்கள்

2 mins read
c369f113-429f-4203-ba40-32010ac19691
மனிதர்களின் மனநிலையையும் உணர்ச்சிகளையும் ஊக்குவிக்கும் சக்தி வண்ணங்களுக்கு உண்டு. - படம்: இணையம்

“உணர்வுகளுக்கு ஏற்றவாறு முகம் மாறுவதுபோல் நிறமும் மாறும்,” என அன்றே கூறினார் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ.

மனநிலையையும் உடலியல் எதிர்வினைகளையும் பாதிப்பதோடு, குறியீடுகளைத் தெரிவிக்கும் தகவல் தொடர்புக் கருவியாகவும் நிறம் விளங்குகிறது.

ரத்த அழுத்தம், கூடுதலான வளர்சிதை மாற்றம், கண் சோர்வு ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட சில வண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

“வண்ணங்கள் நம் உணர்வுகளிலும் செயல்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் பெரிது,” என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் ரேச்சல் கோல்ட்மேன்.

நிறப்பிரிகையால் உருவாகும் நிறமாலையின் சிவப்புப் பகுதியில் உள்ள நிறங்கள், ‘வெப்பமான நிறங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இப்பிரிவில் அடங்கும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்கள் கோபத்தையும் விரோத உணர்வுகளையும் தூண்டுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நிறமாலையின் மறுபக்கத்தில் இருக்கும் வண்ணங்கள் ‘குளிர்ச்சியான நிறங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் ஆறுதல் உணர்வை வெளிப்படுத்தும் நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர்ச்சியான வண்ணங்கள், சில நேரங்களில் சோகத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

2020ஆம் ஆண்டு 30 நாடுகளைச் சேர்ந்த 4,498 மக்களின் மனநிலையை ஆராய்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகப் பெரும்பான்மையான மக்கள் உணர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

கறுப்பைச் சோகத்தோடும் வெள்ளையை நிம்மதியோடும் தொடர்புபடுத்தும் மக்கள், காதலோடு சிவப்பு நிறம், மனநிறைவோடு பச்சை நிறம், குதூகலத்தோடு மஞ்சள் நிறம், அருவருப்போடு பழுப்பு நிறம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகின்றனர் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றோர் ஆய்வில், அமெரிக்காவின் 71 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கறுப்பு, சிவப்பு, பச்சை நிறங்களிலான அடையாள எண்கள் கொடுக்கப்பட்டன.

சிவப்பு நிறத்தில் அடையாள எண்களைப் பெற்ற மாணவர்களின் தேர்ச்சியில் அந்நிறம் ஓர் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்ற மாணவர்களோடு ஒப்பிடும்போது, சிவப்பு நிறத்தைப் பெற்ற மாணவர்கள் 20 விழுக்காடு குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர்.

மருத்துவத்துறையிலும் இந்த அறிவியல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி வலி நிவாரணத்தைக் கொடுக்கும் மாத்திரைகள் வெள்ளையாகவும் தூண்டுதல் பண்புகள் கொண்ட மாத்திரைகள் சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்