உணர்வுகளைப் புரிந்து வழிநடத்துவோர்க்கே வெற்றி

3 mins read
a180b91d-2049-45fa-99e2-871075c83c55
வேலையிடத்தில் நல்ல திறனாளர்களை ஈர்த்து அவர்களை உயர்த்தி, பிறரையும் உயர வைக்கத் திறம்படைத்த தலைமைத்துவத்திற்கு உணர்வுகளை நுட்பமாகப் புரியும் ஆற்றல், பெரும் பலமாக இருக்கும். - படம்: இணையம்

பிறர் உணர்வுகளைப் புரிந்து சரியாக நடந்துகொள்கிறோம் என பலர் தங்களைப் பற்றி நினைத்துக்கொள்கின்றனர். வேலையிட தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

மின்னிலக்கத் தொழில்நுட்ப மாற்றத்தால் அடிக்கடி மாறும் துடிப்புமிக்க வேலையிடத்தில் தாக்குப்பிடிக்க வேண்டிய தலைவர்கள், மனிதர்களைப் புரிந்துகொண்டு அவர்களது ஆற்றலை ஆக்ககரமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வேலையிடத்தில் நல்ல திறனாளர்களை ஈர்த்து அவர்களை உயர்த்தி, பிறரையும் உயர்த்த வைக்கத் திறம்படைத்த தலைமைத்துவத்திற்கு உணர்வுகளை நுட்பமாகப் புரியும் ஆற்றல், பெரும் பலமாக இருக்கும்.

வர்த்தகத் தலைவர்கள் ஐந்து பேரில் நால்வர், தங்களுக்கு உணர்வுகள் பற்றிய அறிவு இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால், பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், தங்களது வேலையிடத் தலைவர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை என்று கருதுகின்றனர்.

ஊழியர்களைப் புரிந்துகொள்ளும் திறனே முதலாளிகளுக்கு அதிகம் தேவைப்படுவதாக ஊழியர்கள் கூறியிருப்பதை என்டியுசி கற்றல் மையம், பயிற்றுவிப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.

வர்த்தகத் தலைவர்கள் 150 பேரையும் 300 முழுநேர நிபுணர்களையும் உள்ளடக்கிய அந்தக் கருத்துக்கணிப்பு, ஊழியர்களின் உணர்வுகளுக்கு முக்கியம் தரும் அணுகுமுறையைக் கையாண்டு சிறப்பாகப் பணியாற்றக்கூடிய பணிக்குழுக்களை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து ஆராய்கிறது.

திறம்படச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்வது, முடிவுகளைச் சரியாக எடுப்பது, நீக்குப்போக்குடன் இருந்து மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொள்வது, ஊழியர்களுடனான வலுவான உறவுகளை வளர்ப்பது, அவர்களுக்கு ஊக்கம் தருவது ஆகியவற்றால் தலைவர்களுக்கு உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் முடிக்கியம் என்பது தலைவர்களின் பார்வையாகும்.

தலைவர்களது கருத்துகளுக்குப் பணியாளர்கள் ஒத்துப்போனாலும் சவால்மிக்க சூழலிலும் நிதானம் காப்பது, பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பது போன்றவற்றையும் வலியுறுத்துகின்றனர்.

சுயத்தை ஆராய்வது முக்கியம்

தலைவர்கள் பலர், நல்ல எண்ணத்துடன் செயல்பட்டாலும் தங்களைப் பற்றிய அறியாமையின் காரணமாக நல்ல எண்ணங்கள் எல்லா நேரமும் நல்ல முடிவுகளை விளைவிப்பதில்லை என்று ‘தி எலிவேட் குரூப்’ அமைப்பின் நிறுவனர் உமா தனபாலசிங்கம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“பெரும் குழுக்களை வழிநடத்தி இப்போது அனைத்துலக அளவில் பயிற்சியளிப்பவர் என்ற முறையில் சொல்கிறேன். எண்ணங்களுக்கும் நடைமுறைச் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை நன்கு அறிவேன்,” என்று அவர் கூறினார்.

சொற்கள் வழியாக அரவணைப்பை வெளிப்படுத்த தலைவர்கள் முயன்றபோதும் அவர்களது குரலின் தொனி, உடல் அசைவு அல்லது அவர்கள் எடுக்கும் முடிவுகள் முரண்படலாம்.

விரைவில் வேலையை முடிக்கவேண்டிய கட்டாயம், வேலை சரியான முறையில் நிகழ்வதை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு, பல்வேறு தளங்கள் வழியாக பலரரைத் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஆகியவற்றையும் தலைவர்கள் எதிர்நோக்குவதை அவர் சுட்டினார்.

பணியாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றால் அவர்கள் மனதில் ஒன்று நினைத்து வாயால் வேறொன்று பேசலாம், அல்லது பேசுவதைத் தவிர்க்கலாம் என்றும் திருவாட்டி உமா கூறினார்.

தலைவர்கள் சுய ஆய்வுக்கான 360 டிகிரி கருத்துப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

பணியாளர்களிடம் அடிக்கடி கேட்டு தங்கள் ஐயங்களைப் பகிர்வதன்வழி தலைவர்கள் நல்ல எடுத்துக்காட்டாகத் திகழலாம் என்றும் திருவாட்டி உமா கூறினார்.

ஐயங்களைப் பகிர்வதன்வழி பணியாளர்கள் திறன்களைக் கற்கின்றனர். அத்துடன், அவர்களால் தவறுகளைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.

பணியாளர்கள் தலைவர்களைப் பற்றியோ சக பணியாளர்களைப் பற்றியோ கருத்து தெரிவிக்க விரும்பினால் “இன்னார் இப்படிச் செய்தார்” எனப் பெயர் குறிப்பிடாமல், நடத்தையைப் பற்றி மட்டும் சொல்வதை திருவாட்டி உமா உத்தியாகக் கருதுகிறார்.

கருத்தை இப்படிப்பட்ட பாங்குடன் தெரிவித்தால் தலைவர்கள் அதனை மிரட்டலாகக் கருதமாட்டார்கள். அதே நேரத்தில் இது தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்