பிந்து - உணர்வுபூர்வமான நடனப் படைப்பு

பிந்து - உணர்வுபூர்வமான நடனப் படைப்பு

2 mins read
5b5f8eb1-2ca5-4183-b8b6-93dc0058554d
‘பிந்து’ நிகழ்ச்சிக்குத் தயாராகும் நடனமணிகள். - படம்: காமினி ஹஷ்வின் 

அசைவுகள்மூலம் ஆழமான தத்துவங்களை ஆராயும் ஒரு சவாலான, புதிய பாரம்பரிய நடனப் படைப்பாக, ஓராண்டுகாலக் கடுமையான உழைப்பிற்குப்பின் ஸ்டாம்ஃபர்ட் கலைகள் நிலையத்தில் நவம்பர் 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அரங்கேறவிருக்கிறது ‘பிந்து’.

இந்த நிகழ்ச்சி வெறும் நடன அமைப்பையும் தாண்டி, கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்ச்சிமிகு, அறிவுசார் புரிதலில் கவனம் செலுத்த முனைகிறது. 

லசால் கலைக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளரும் 25 ஆண்டு நடன அனுபவம் கொண்டவருமான நடன ஆசிரியர் துர்கா மணிமாறன், 46, தம் மாணவர்களுக்கான கல்விப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“நான் ஒன்றை வெறுமனே திரும்பச் சொல்வதில் ஆர்வம் காட்டவில்லை.  இது அவர்களுக்கு ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கலைஞர்களாக நாம் நடனமாடும்போது, ஆசிரியர், மாணவர் என்று வேற்றுமை பாராமல்  நாம் அனைவரும் இங்குக் கலைஞர்கள் மட்டுமே என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கியிருக்கும்,” என்கிறார் திருவாட்டி துர்கா. 

இந்தப் படைப்பானது, பிந்து, காளி போன்ற சிக்கலான கருப்பொருள்களை வெளிப்படுத்த நடனக் கலைஞர்களிடமிருந்து மேம்பட்ட சகிப்புத்தன்மையையும் ஒருமுகப்பட்ட மனத்தையும் கோருகிறது.

தம் நான்கு மாணவர்களுடன் சேர்ந்து இந்த நடன நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கிறார் திருவாட்டி துர்கா.

அண்மையில் தமது பட்டயப் படிப்பை நிறைவுசெய்த சிவதாஷினி கருணாமூர்த்தி, 20, நடைமுறைச் சவால்களை விவரித்தார்.

“ஆயத்தமாவது கடினமானது, சோர்வானது. எங்களில் சிலர் வேலை செய்வதாலும் சிலர் பள்ளியில் இருப்பதாலும், அனைவரின் நேரத்திற்கு ஏற்ப பயற்சி நேரத்தைத் திட்டமிட வேண்டும். ஆயினும், நான் நடனமாட ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என்றார் சிவதாஷினி.

“இந்த ஆயத்தம் ஓராண்டுகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இது உடலளவில் சவால் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள முயல்கிறேன்,” என்றார் எம்டிஐஎஸ் பல்கலைக்கழக மாணவியான கமலவர்ஷினி கோபிநாதன், 21.

ஆடிக்காட்டுவது மட்டும் நடனமாகிவிடாது என்றும் அதற்கு ஆய்வும் தேவை என்றும் சொல்கிறார் சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தைச் (எஸ்ஐஎம்) சேர்ந்த வசந்தகுமார் இலக்கியா, 20. 

“முக்கியமாக நாம் நிறைய படிக்க வேண்டும். அதன்மூலம் கருத்தாக்கம் செய்து, எங்கள் நடனத்தில் கொண்டுவர முடியும்,” என ஒரு தொழில்முறை நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார். 

அப்யாசா பாரம்பரிய நடனக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உமையாள் சிதம்பரம், 19, இதனை ஒரு கற்றல் சவால் எனக் குறிப்பிட்டார்.

“எனக்கு இது முதல் படைப்பு. செயல்முறைமூலம் படிப்படியாகச் செல்லும்போது, ஒவ்வொன்றையும் எவ்வாறு புரிந்துகொள்கிறேன் என்பது முக்கியம்,” என்கிறார் அந்த மாணவி.

இந்த நடன நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டை வாங்கவும் https://bookmyshow.sg/en/events/BINDUS60 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்