இளையர்களுக்கு ஈடுகொடுக்கும் துடிப்புமிக்க மூத்தோர்

2 mins read
f9335cb5-199a-4268-8ddc-51b84bf1503e
சிக்லாப் சமூக மன்ற உருட்டுபந்து ஆர்வலர் குழுவுடன் ரெங்கசாமி மனோகரன் (இடது). - படம்: சிக்லாப் சமூக மன்றம்

உடலை உறுதியாக வைத்திருப்பதுடன் இளையர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வதும் ஒன்றுகூடல்களில் பங்கேற்பதும் தம்மை மனத்தளவில் இளமையாக வைத்திருப்பதாக நம்புகிறார் திரு ரெங்கசாமி மனோகரன், 70.

சிறுவயதிலிருந்தே பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள இவர், தற்போது சிக்லாப் சமூக மன்ற உருட்டுபந்து ஆர்வலர் குழுவுடன் இணைந்து பயிற்சியிலும் போட்டிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.

இவ்வாண்டு குறைந்தது நான்கு முதல் ஐந்து போட்டிகளில் பங்கேற்றதாகக் கூறிய அவர், ‘சமூக சாம்பியன்‌ஷிப் - உருட்டுபந்து’ (Community Championship) போட்டியிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

“போட்டியில் பங்கேற்பதும் வெற்றிக் கோப்பையை ஏந்துவதையும்விட, காலத்தால் அழியாத நட்புறவுடன் நானும் இச்சமூகத்தின் முக்கிய அங்கம் எனும் உணர்வே அர்த்தமுள்ள வெகுமதி,” என்கிறார் திரு மனோ.

கடந்த 58 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையில் சேவைசெய்த அவர், தொடர்ந்து இப்போதும் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

“குறிப்பிட்ட காலம்வரை தேவைகளுக்காகத் தொடர்ந்து உழைத்தேன். தற்போது இரு பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர். மனைவியும் பணிக்குச் செல்கிறார். நான் வீட்டிலேயே முடங்கிவிட்டால் எனது உடல், மனநலன் மோசமடையும் என நினைக்கிறேன்,” என்றார் திரு மனோ.

வாரந்தோறும் நடைபெறும் உருட்டுபந்துப் பயிற்சிகளில் தவறாது கலந்துகொள்வது, போட்டிகள் நடைபெறும்போது கூடுதலாக ஆயத்தமாவது என இவர் தம்மைத் துடிப்புடன் வைத்துக்கொள்கிறார்.

“என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் பார்த்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறேன். வயது வேறுபாடின்றி அனைவருடனும் போட்டி போடுவதால், என் ஆற்றல் வெளிப்படுகிறது. அது புத்துணர்வையும் மனத்திற்குத் தெம்பையும் அளிக்கிறது,” என்று திரு மனோ கூறினார்.

“எனக்கு மெதுவாக நடக்கவே பிடிக்காது. எப்போதும் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வயது தடையே இல்லை,” என்கிறார் என்றும் இளமையாக உணரும் திரு மனோ.

குறிப்புச் சொற்கள்