தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தூறலுக்கிடையே துள்ளல், பல்லினங்களுக்கிடையே பொங்கல்

3 mins read
மழையையும் மக்களையும் அரவணைத்த புக்கிட் பாஞ்சாங் பொங்கல்
e2a7e209-c125-4be9-b04c-575315c46edf
பொங்கல் வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லியாங் எங் ஹுவா, எட்வர்ட் சியா. அவர்களுடன் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பெருமாள் மூர்த்தி PBM, செயற்குழு உறுப்பினர் கங்கா பாஸ்கரன். - படம்: த. கவி

காலையில் மக்களை வரவேற்ற மாடுகள், நவதானியங்களிலிருந்து பானையில் முளைத்து நிமிர்ந்து நின்ற முளைப்பாரி, உயர நின்ற கும்பம், ‘பாடும் வானம்பாடிகள்’ செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணையரின் மக்களிசை, நிகழ்ச்சி நெறியாளர் ஜி டி மணியின் பொங்கல்சார் தகவல்கள் என புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தையே குதூகலமாக மாற்றியது, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை நடந்த பொங்கல் கொண்டாட்டம்.

ஏறக்குறைய 2,500 பேர் கூடி இக்கொண்டாட்டத்தைச் சிறப்பித்தனர்.

புக்கிட் பாஞ்சாங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் (சிசிசி) புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் ஒருங்கிணைப்புக் குழுவும் (ஐஎன்சி) இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் இக்கொண்டாட்டம், இவ்வாண்டு 18வது முறையாக நடைபெற்றது. வழக்கம்போல் அதே தினத்தில் ரத்த தான முகாமும் புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

‘மாயச் சுடரொளி’ உருமிமேள இசைக்கு மணிமாறன் நடனக்குழுவின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கைகளில் முளைப்பாரி ஆகியவற்றோடு புக்கிட் பாஞ்சாங் ‘டான்ஸ்ஃபிட்’ சீன நடனமணிகள் சிறப்பு விருந்தினர்களின் வருகையை அறிவித்தனர்.

ஜனவரி மாதத்தில் பிறந்தோரின் பிறந்தநாளைக் கொண்டாட, அவர்களுடன் இணைந்து பொங்கல்பானை வடிவிலான கேக்கைத் திரு லியாங் எங் ஹுவா வெட்டினார்.
ஜனவரி மாதத்தில் பிறந்தோரின் பிறந்தநாளைக் கொண்டாட, அவர்களுடன் இணைந்து பொங்கல்பானை வடிவிலான கேக்கைத் திரு லியாங் எங் ஹுவா வெட்டினார். - படம்: த. கவி

சிறப்பு விருந்தினர்களாக ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவா இருவரும் வேட்டிச் சட்டையணிந்து உற்சாகத்தோடு பொங்கல் நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு வந்திருந்த வெளியுறவு அமைச்சரும் ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விவியன் பாலகிரு‌ஷ்ணன், இவ்வாண்டு ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பினால் வர இயலவில்லை.

“நாம் எவ்வாறு பொங்கல் அறுவடையைக் கொண்டாடுகிறோமோ, அதுபோல் புக்கிட் பாஞ்சாங்கிலும் நம் திட்டங்கள் அறுவடை கண்டுள்ளன. அடுத்த அறுவடையாக, குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க, ‘வரவுசெலவுத்திட்டம் 2025’ உதவும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்,” என்றார் திரு லியாங்.

“60வது ஆண்டைக் கொண்டாடும் நாம், சிங்கப்பூரை இந்நிலைக்குக் கொண்டுவந்த நம் மூத்தோரின் உழைப்பையும் தியாகங்களையும் பாராட்டவேண்டும்,” என்றார் திரு சியா.

முனைவர் இரத்தின வெங்கடேசன், கவிஞர் மா.அன்பழகன் ஆகியோர் வழங்கிய உறியடித்தல் சாவடியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட திரு எட்வர்ட் சியா.
முனைவர் இரத்தின வெங்கடேசன், கவிஞர் மா.அன்பழகன் ஆகியோர் வழங்கிய உறியடித்தல் சாவடியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட திரு எட்வர்ட் சியா. - படம்: த.கவி

சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி, சுவா சூ காங் மொழி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்லின மாணவர்களின் பொங்கல், பாரம்பரிய விளையாட்டுச் சாவடிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.

சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி, சுவா சூ காங் மொழி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்லின மாணவர்களின் பொங்கல், பாரம்பரிய விளையாட்டுச் சாவடிகள்.
சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி, சுவா சூ காங் மொழி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்லின மாணவர்களின் பொங்கல், பாரம்பரிய விளையாட்டுச் சாவடிகள். - படம்: த.கவி

“நம் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றிப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது நாமும் பயனடைகிறோம். பள்ளி வாய்மொழித் தேர்வுகளிலும் இந்த அறிவு உதவுகிறது,” என்றார் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர் ‌‌‌ஷாரோன், 16.

பல்லினச் சமூகத்தின் அடையாளம்

“இவ்வாண்டு புத்தாக்க வகையில் நாங்கள் சிங்கப்பூரின் பல்லின அடையாளத்தைப் பிரதிபலிக்கிறோம். சீனர்கள் உண்ணப் பயன்படுத்தும் குச்சிகளைக் (Chopsticks) கொண்டு இந்தியர்கள் வேர்கடலைகள் உண்டனர். சீனர்கள் முறுக்குகளைப் பிழிந்தனர்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.

“இந்தியாவில்கூட ஒட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டி பிரபலமாகியுள்ள நிலையில், சிங்கப்பூரில் மற்ற இனத்தார்கூட வேட்டியைச் சரிவரக் கட்டி இந்தியப் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதைப் பார்க்கும்போது பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றனர் ஈராண்டுகளுக்குப் பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி.

ஐம்புலன்களுக்கும் விருந்து

சிறுவர்களையும் பொதுமக்களையும் பொங்கல் பாடல்கள்மூலம் உற்சாகப்படுத்திய செந்தில் கணே‌ஷ்-ராஜலட்சுமி இணையர், இந்நிகழ்ச்சிக்காகவே இந்தியாவிலிருந்து வந்திருந்தனர்.
சிறுவர்களையும் பொதுமக்களையும் பொங்கல் பாடல்கள்மூலம் உற்சாகப்படுத்திய செந்தில் கணே‌ஷ்-ராஜலட்சுமி இணையர், இந்நிகழ்ச்சிக்காகவே இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். - படம்: த.கவி

நுழைவாயிலிலேயே வண்ணமயமான பெரிய கோலம் தென்பட்டது. அதன்மீது, வெல்லம், மஞ்சள்கொத்து, வெற்றிலைப் பாக்கு, தேங்காய், கரும்பு எனப் பொங்கலுக்குப் பயன்படும் மூலப்பொருள்கள் கொண்ட 18 மண்பானைகள் வைக்கப்பட்டிருந்தன.

“முந்திய தினம் பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை கோலத்தைப் போட்டோம். மூன்று வாரங்களுக்கு முன்பே இதைத் திட்டமிட்டோம்,” என்றனர் கோலமிட்ட குழுவைச் சேர்ந்த இந்திரா, ஜீவனா, திவ்யா ஆகியோர்.

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவில், ஆண்டுதோறும் வழங்குவதுபோல் இவ்வாண்டும் 2,000 வடைகளைச் சுட்டு, காய்கறி சூப்புடன் மக்களுக்குச் சுடச்சுட வழங்கியது.

சுவையான மதிய உணவு நிகழ்ச்சியை நிறைவுசெய்தது.

வண்ணமயமான கோலத்தைப் பார்வையிடும் சீனர்கள், வண்ணச் சேலைகளில் வந்து நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தனர்.
வண்ணமயமான கோலத்தைப் பார்வையிடும் சீனர்கள், வண்ணச் சேலைகளில் வந்து நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தனர். - படம்: த.கவி
புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி நடனமணிகள்.
புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி நடனமணிகள். - படம்: த.கவி
ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவில், ஆண்டுதோறும் வழங்குவதுபோல் இவ்வாண்டும் 2,000 வடைகளைச் சுட்டு, காய்கறி சூப்புடன் மக்களுக்குச் சுடச்சுட வழங்கியது. 
ஸ்ரீ அரசகேசரி சிவன் கோவில், ஆண்டுதோறும் வழங்குவதுபோல் இவ்வாண்டும் 2,000 வடைகளைச் சுட்டு, காய்கறி சூப்புடன் மக்களுக்குச் சுடச்சுட வழங்கியது.  - படம்: த.கவி
குறிப்புச் சொற்கள்