விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க ‘லெகோலேண்ட் மலேசியா’வில் புத்தம்புது அம்சம்

2 mins read
73a2a2bd-c436-4199-8297-a78e21b391c9
‘லெகோ ஹாலிடே ட்ரீ’ அலங்கார மரத்தை வெளியிடும் லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட்டின் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குநர் திலா முனுசாமி (இடது), லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட்டின் துணைத் தலைவர் சிஎஸ் லிம். - படம்: லெகோலேண்ட் மலேசியா
multi-img1 of 2

இஸ்கந்தர் புத்திரி: ஜோகூர் பாருவில் உள்ள ‘லெகோலேண்ட் மலேசியா’ பொழுதுபோக்கு பூங்காவில் சிறார்களுக்கு விடுமுறைக் காலம் பிரம்மாண்டமான முறையில் வந்துவிட்டது.

ஆண்டிறுதியில் கூடுதலான உள்ளூர்வாசிகளையும் வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்க்க இங்கு புத்தம்புது ‘லெகோ ஹாலிடே ட்ரீ’ ஒன்று நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கண்ணைப் பறிக்கும் இந்த அலங்கார கிறிஸ்துமஸ் மரம், 315,000க்கும் அதிகமான லெகோ கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்துப் பார்த்து அமைக்க கைவினைஞர்கள் 1,800 மணி நேரத்துக்குமேல் செலவிட்டுள்ளனர்.

பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட ‘லெகோ ஹாலிடே ட்ரீ’ மரம்.
பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட ‘லெகோ ஹாலிடே ட்ரீ’ மரம். - படம்: ஜேடன் சியா

‘பிரிக்டேக்யுலர் ஹாலிடேஸ் 2025’ன் தொடக்க நிகழ்வில் இந்த மரம் வெளியிடப்பட்டது. ஜோகூர் பாருவில் உள்ள சமுதாய நல்வாழ்வு அமைப்பு ஒன்றையும் ‘சில்ட்ரன்’ஸ் விஷிங் வெல்’ எனும் சிங்கப்பூரின் அறக்கொடை அமைப்பு ஒன்றையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அகமகிழ்ந்தனர்.

2026 ஜனவரி 11 வரை இடம்பெறும் இவ்வாண்டின் ‘பிரிக்டேக்யுலர் ஹாலிடேஸ்’ நிகழ்வால் லெகோலேண்ட் மலேசியா துடிப்புமிக்க, வியத்தகு இடமாக உருமாறியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு நாள் முழுக்க பல்வேறு சுவாரசிய அனுபவங்கள் காத்திருந்தன. லெகோ கற்களால் தங்களுக்குப் பிடித்தமானவற்றை அவர்கள் கட்டி அகமகிழ்ந்ததுடன், நேரடிக் கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் லெகோ விடுமுறைக் கதாபாத்திரங்களைச் சந்தித்து அவர்களுடன் படமெடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது.

‘பிரிக்டேக்யுலர் ஹாலிடேஸ்’ தொடக்க நிகழ்வில் இடம்பெறும் ஆடல், பாடல் அங்கம்.
‘பிரிக்டேக்யுலர் ஹாலிடேஸ்’ தொடக்க நிகழ்வில் இடம்பெறும் ஆடல், பாடல் அங்கம். - படம்: லெகோலேண்ட் மலேசியா

“லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட்டில், விடுமுறைக் காலத்தில் கொண்டாட்டத்தில் திளைப்பதையும் தாண்டில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. எமது சமூகப் பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்த சிறார்களை இங்கு காண்பது, மக்களை ஒன்றிணைப்பதற்கான சக்தி விளையாட்டிடம் உள்ளதை நினைவூட்டுகிறது,” என்று லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட்டின் துணைத் தலைவர் சிஎஸ் லிம் கூறினார்.

அனைவருக்கமான விழாக்காலம்

‘பிரிக்டேக்யுலர் ஹாலிடேஸ்!’ நிகழ்வையொட்டி இணையத்தில் முன்கூட்டியே முன்பதிவு செய்வோர், லெகோலேண்ட் மலேசியா செல்வதற்கான ஒருநாள் நுழைவுச்சீட்டுகளில் 20 விழுக்காடு தள்ளுபடியைப் பெறலாம்.

இன்னும் சிறந்த சலுகையைப் பெற, லெகோலேண்ட் மலேசியா ரிசார்ட் வருடாந்தர அட்டையை வாங்கலாம். இதன்மூலம் 2026ல் லெகோலேண்ட் பூங்காவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். அத்துடன், உறுப்பினர்களுக்கான பிரத்தியேக சலுகைகளையும் கட்டணக் கழிவுகளையும் பெறலாம்.

லெகோலேண்ட் மலேசியா பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் வலம்வரும் குடும்பம்.
லெகோலேண்ட் மலேசியா பொழுதுபோக்குப் பூங்காவில் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் வலம்வரும் குடும்பம். - படம்: லெகோலேண்ட் மலேசியா

இரண்டு முதல் 12 வயது வரையுடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உகந்த சுற்றுலாத் தலமாக லெகோலேண்ட் மலேசியா விளங்குகிறது. இங்கு உல்லாசமாக பல்வேறு சவாரிகளை மேற்கொள்வதோடு, நீர்விளையாட்டுப் பூங்காவில் உள்ள பல சாகச சறுக்கல்களிலும் வலம் வரலாம்.

இங்கு ஒருநாள் போதாது என நினைப்போர், லெகோலேண்ட் வளாகத்திலேயே உள்ள ஹோட்டலில் தங்கலாம். முழுக்க முழுக்க லெகோ கற்களால் வடிக்கப்பட்ட கதாபாத்திரங்களை இந்த ஹோட்டலில் எங்கும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்