திரு ரிட்ஜல் நூருக்குத் தான் தொழில்முனைவராக வேண்டும் என்ற எண்ணம் முன்பு இருந்ததில்லை. எல்லாரையும்போல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்.
பிற்பகல் வேளையில் உணவு உட்கொண்டவாறே, தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஏன் தன்னால் அவர்களைப்போல் இருக்கமுடியவில்லையென அவர் சிந்தித்ததுண்டு.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர் தன் சொந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுத்தார். வேலையை விட்டுவிட்டு, pullupstand.com எனும் பதாகை அச்சிடும் நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
அவரது வீட்டிலிருந்தே செயல்பட்ட அந்த நிறுவனத்துக்குத் தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. தாம் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
அதையெல்லாம் கடந்துவந்து, தற்போது 18 ஆண்டுகளாக வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார் திரு ரிட்ஜல். உலகம் முழுவதுமிருந்து 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது அவரது நிறுவனம். வர்த்தகம் தொடர்பான பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
தம் வெற்றிக் கதையைத் திரு ரிட்ஜல் அக்டோபர் 8ஆம் தேதி ‘த பிக் பிவட்’ சமூக முயற்சி ஏற்பாடுசெய்த ‘பிசினஸ் ஆஃப் ஃபெய்லியர்’ நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.
நிலையற்ற வேலையிட, வர்த்தகச் சூழலை எதிர்கொள்ள ‘த பிக் பிவட்’ முயற்சியை ‘ரைஸ் மீடியா’ நிர்வாக இயக்குநர் காய் அஷ்ரஃப் தொடங்கினார். இதற்குமுன் இத்தகைய நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்றும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
பிறர் நம்பிக்கை வைக்காவிட்டாலும், நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; சிறு வெற்றிகள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று திரு ரிட்ஜல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன், மற்ற தொழில்முனைவர்களும் தம் பயணங்கள்பற்றிப் பேசினர்.
கூகல், மைக்ரோசாஃப்ட், டேட்டாபிரிக்ஸ் எனப் பெரிய நிறுவனங்களில் பணியாற்றியிருந்தாலும் பல சவால்களையும் சந்தித்துள்ள ஃபாரா சிட்டெக், குறிக்கோளிலிருந்து விலகாமலிருக்க உதவும் உத்திகளைப் பகிர்ந்தார்.
100 விழுக்காடு சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தம் முதல் வர்த்தகத்தை மெதுவடையச் செய்ததாகக் கூறிய ‘ஜியோ குரோத்’ நிறுவனர் ஹாட்டா அஸீஸ், ‘பத்துக்குப் பத்து என்பது மட்டுமன்றிப் பத்துக்கு ஏழு என்பதுகூடச் சிறந்ததே’ என்னும் நடைமுறையை இப்போது பின்பற்றுகிறார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் மூடிய ‘ஃப்லஃப் பேக்கரி’யின் நிறுவனர் அஷ்ரஃப் அலாமியின் பகிர்வு தம்மைக் கவர்ந்ததாகக் கூறினார், பார்வையாளரான ‘பீட்டிக்ஸ்’ நிறுவனத்தின் மூத்த வர்த்தக மேம்பாட்டு மேலாளர் நிக்கலஸ் ஜெரார்ட், 39.
“தம் கடையை மூடவுள்ளதாக அறிவித்துச் சில வாரங்களிலேயே திரு அஷ்ரஃப் தன் தொழில்முனைப்புப் பயணத்தைப் பகிர்ந்தது பாராட்டத்தக்கது. அதன்மூலம், கேட்பவர்களுக்கும் ஓர் ஆறுதல் கிடைத்தது; தாங்கள் மட்டும்தான் வர்த்தகத்தில் சிரமங்களை எதிர்நோக்குகிறோம் என்றில்லை என்பதைப் புரிந்துகொண்டனர்,” என்றார் திரு ஜெரார்ட்.
“தற்போதைய பொருளியல் நிலைமை, நிலையற்ற வேலையிடச் சூழலில், இவை நாம் மேற்கொள்ளவேண்டிய முக்கியக் கலந்துரையாடல்கள். மக்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன்,” என்றார் திரு ஜெரார்ட்.
திரு அஷ்ரஃப்பின் பகிர்விலிருந்து வர்த்தகப் பங்காளிகளிடையேயுள்ள கருத்து வேற்றுமைகளைச் சமாளிப்பது குறித்தும் தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார் திரு ஜெரார்ட்.
திரு அஷ்ரஃப்பின் இலக்கு, வர்த்தகத்தைப் பல நாடுகளுக்கு விரிவாக்குவது. ஆனால் அவரது மனைவியோ, ஒரே ஓர் இடத்தில் மட்டும் வர்த்தகத்தை நடத்தி மக்களை ஈர்க்க விரும்பினார்.
தமது வர்த்தகம் மலேசியாவிற்கு விரிவடைந்த அனுபவத்தை எடுத்துக்காட்டாகச் சுட்டிய திரு அஷ்ரஃப், பங்காளிகளுக்கிடையே எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் எதிர்பார்ப்புகளைத் தெளிவாகப் பேசிக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

