கலைகளையும் மரபையும் கொண்டாடும் குடும்ப விழா

1 mins read
872bb20d-9c95-4c71-8320-24f2d68a0a20
விஸ்மா கேலாங் சிராயின் குடும்ப விழாவில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற கலை நிகழ்ச்சிகளும் கச்சேரிகளும் இடம்பெறவுள்ளன. - படம்: விஸ்மா கேலாங் சிராய்

பள்ளி விடுமுறையை முன்னிட்டு, குடும்பங்களுக்கென இசை, கலைகள், குதூகலம், ஒற்றுமை, பாரம்பரியத்தை மையப்படுத்தும் நிகழ்ச்சிகள் நிறைந்த குடும்ப விழா விஸ்மா கேலாங் சிராயின் பெர்சாடா புதாயா (Persada Budaya) அரங்கில் நடைபெறுகிறது.

ஜூன் 22ஆம் தேதிவரை சிறுவர்களுக்கான இருவழித் தொடர்புடைய நடவடிக்கைகளும் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன.

பள்ளி விடுமுறையின்போது பெற்றோரும் பிள்ளைகளும் குடும்பமாக ஒன்றிணைந்து மதிப்புமிக்க அனுபவங்களைப் பெறும் வகையிலும் படைப்பாற்றல் நிறைந்த விளையாட்டையும் சமூக ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையிலும் பல நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கென்று அமைக்கப்பட்டுள்ள பலூன் கோட்டைகளும் ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதிவரை, காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் திரைப்படங்களும் திரையிடப்படும்.

வார இறுதி நாள்களில் அமைக்கப்படும் கைவினை, சிற்றுண்டிச் சாவடிகளில் பங்கேற்க முடிவதோடு, அரங்கேறவிருக்கும் சிறப்பு நேரடி நிகழ்ச்சிகளிலும் குடும்பங்கள் கலந்துகொள்ளலாம்.

ஜூன் 15ஆம் தேதியன்று வண்ணம் தீட்டும் போட்டியோடு மாயவித்தை நிகழ்ச்சியும் (Magic Show) இடம்பெறவுள்ளது.

ஜூன் 18ஆம் தேதியிலிருந்து ஜூன் 22ஆம் தேதிவரை இடம்பெறும் கேலாங் சிராய் வணிகச் சங்கத்தின் சந்தை இவ்விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.

காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இடம்பெறும் சந்தையில் பாரம்பரிய ஆடைகள், கைவினைப் பொருள்கள், தின்பண்டங்கள் எனப் பலதரப்பட்ட பொருள்களை வாங்கலாம்.

அத்துடன், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கலை நிகழ்ச்சிகளும் கச்சேரிகளும் இடம்பெறவுள்ளன.

மேல்விவரங்களுக்கு விஸ்மா கேலாங் சிராயின் சமூக ஊடகப் பக்கங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்