'13ஆம் தேதி வெள்ளிக்கிழமை' - மூடநம்பிக்கைகளும் அச்சமும்

'13ஆம் தேதி வெள்ளிக்கிழமை' - மூடநம்பிக்கைகளும் அச்சமும்

2 mins read
6f58a762-3e31-4b00-b927-139d3ecee4a8
வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அந்த நாளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழுமோ என்று ஒருசிலர் அஞ்சக்கூடும். படம்: ஊடகம் -

ரச்சனா வேலாயுதம்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஓர் அச்சம் இருக்கும். அது பொருளைக் கண்டாலோ, குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ள நேர்ந்தாலோ ஒருவித அச்சம் தோன்றலாம்.

அவ்வகையில், மாதத்தின் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்தாலும் சிலர் அஞ்சுவதுண்டு.

அந்த நாளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழுமோ என்று ஒருசிலர் அஞ்சக்கூடும். வேறு சிலர் இந்த நாளை அதிர்ஷ்டம் இல்லாத நாளாகக் கருதவும் கூடும்.

அப்படி, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமைகள் தனக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளதாக நினைவுகூர்ந்தார் திரு சி.கிரண், 27.

ஒரு பள்ளிப்பாடத்திற்காக மூன்று மாதங்களாகக் கடுமையாக உழைத்த அவர், 13ஆம் தேதியில் வந்த ஒரு வெள்ளிக்கிழமையன்று அவரது கணினியில் சேமித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் அழிந்துபோயின.

'13' என்ற எண் தீமையை விளைவிக்கும் என்று பல சமயங்களிலும் சமுதாயங்களிலும் நம்பப்படுகிறது. அதனை வெறும் மூடநம்பிக்கை என்று பலர் கூறினாலும், ஒரு சிலர் அதனை முழுமையாக நம்புகின்றனர்.

மூடநம்பிக்கைகள் என்று பொதுவாக ஒதுக்கிவிடாமல் சிலவற்றை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறார் குமாரி இந்திரா தேவி, 21.

"கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது சில மூடநம்பிக்கைகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது," என்றார் அவர்.

"செவ்வாய்க்கிழமை முடிவெட்டினால் லட்சுமி தேவிக்கு அவமரியாதை என்று என் தாயார் கூறியும் நான் கேட்கவில்லை. இதனால் முடி சேதமடைந்ததோடு முடியைக் காய வைக்கும் இயந்திரம் தலையில் விழுந்து காயமும் ஏற்பட்டது," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அதேபோல, ஊக்கை கையில் கொடுத்தால் இருவர் இடையே உள்ள உறவு முறிந்துவிடும் என்று தன் தாயார் சொன்னதையடுத்து, குமாரி ரூபி மோகனும் அதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்.

"சேலை கட்ட ஒருவருக்கு ஊக்கு கொடுப்பதாக இருந்தால், அதனைக் கையில் தராமல் தரையில் வீசி எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்," என்றார் 23 வயதான குமாரி ரூபி.

இதுபோன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் குறித்து தமிழ் முரசு நாளிதழ் தனது இன்ஸ்டகிராம் பக்கம் வழியாக இம்மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமை கருத்துத்திரட்டு ஒன்றை நடத்தியது.

அதன்வழியாகப் பலரும் தாங்கள் நம்பும் அல்லது தங்களுக்குத் தெரிந்த மூடநம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இரவில் நகம் வெட்டினால் பேய் வரும், வெளியே செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுனம், கண்ணாடி உடைந்தால் ஏழாண்டுகளுக்கு துரதிர்ஷ்டம் என்பன அவற்றில் சில.

ஆண்களுக்கு இடது கண் துடித்தால் தீங்கு விளையும், வீட்டிற்குள் குடை விரித்தால் வீட்டாருக்குக் கெடுதல் ஏற்படும், ஆந்தையைக் கண்டால் மரணம் நெருங்கும், பொழுது சாய்ந்தபின் வீட்டைப் பெருக்கினால் வீட்டில் பணம் நிலைக்காது என்பன போன்ற நம்பிக்கைகளும் பகிரப்பட்டன.

rachv@sph.com.sg