பெரானாக்கான் கலாசாரத்தைக் கொண்டாடும் வண்ணமயமான ‘அர்மேனியன் தெரு விழா’ வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்கியுள்ளது.
பெரானாக்கான் அரும்பொருளகம் ஆண்டுதோறும் நடத்திவரும் இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சி ‘பெரானாக்கான் நட்சத்திரங்கள்’ (Peranakan Stars) என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு நடைபெறுகிறது.
கலை, ஆடை அலங்காரம், நடனம், இசை, பாரம்பரிய உணவு எனப் பல்வேறு அம்சங்களுடன் இவ்விழா, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) வரை அன்றாடம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம்.
இந்நிகழ்ச்சி, சிங்கப்பூரின் பெரானாக்கான் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை வெவ்வேறு பெரானாக்கான் சமூகங்களுடனும் புகழ்பெற்ற கலைஞர்களுடனும் இணைந்து கொண்டாடுகிறது.
பெரானாக்கான் கலாசாரத்தை உயிரோட்டத்துடன் கண்முன் கொண்டுவரும் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்கலாம்.
அர்மேனியன் தெருவில் அமைந்திருக்கும் ‘பெரானாக்கான் பசார்’ இரவுச் சந்தையில், லக்சா, குய் கொசுய் போன்ற பெரானாக்கான் உணவு வகைகளும் தனித்துவமான கைவினைப்பொருள்களும் விதவிதமான ஆடைகளும் விற்கப்படுகின்றன.
சிங்கப்பூர் பெரானாக்கான் சங்கம், அராப் நெட்வொர்க் @ சிங்கப்பூர், பெரானாக்கான் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கம் உள்ளிட்ட சமூகப் பங்காளிகள் வழங்கும் பாரம்பரிய உணவுகளையும் நவீன உணவு வகைகளையும் வருகையாளர்கள் சுவைத்துப் பார்க்கலாம்.
“பெரானாக்கான் சமூகங்களுடனும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து, பெரானாக்கான் பாரம்பரியத்தை அனைவரும் அறியக்கூடிய விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் பெரானாக்கான் அரும்பொருளகத்தின் மேலாளரும் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் மேலாளருமான விஜயலக்ஷ்மி பாலன்கிருஷ்ணன், 37.
தொடர்புடைய செய்திகள்
மேற்கூறிய சமூகப் பங்காளிகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து மீடியாகார்ப் நிறுவனத்தின் புதிய நாடகமான ‘எமரால்ட் ஹில் – தி லிட்டில் நோன்யா ஸ்டோரி’ நடிகர்கள் பங்கேற்கும் ‘இன் த மூட் ஃபார் கெபாயா’ ஆடை அலங்கார நடையும் நடைபெறும்.
விழாவிற்கு சாரோங் கெபாயா அல்லது பத்திக் ஆடைகளை அணிந்து வருபவர்களுக்குப் ‘பத்திக் நோன்யாஸ்: மூன்று தலைமுறை கலையும் தொழிலும்’ (Batik Nyonyas: Three Generations of Art and Entrepreneurship) என்ற அரும்பொருளகத்தின் சிறப்புக் கண்காட்சிக்கு இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
இந்தக் கண்காட்சி, இந்தோனீசியாவைச் சேர்ந்த மூன்று பெரானாக்கான் பெண்களின் வாழ்க்கைக் கதைகளையும், ஜாவாவின் பெகலோங்கான் பகுதியில் அவர்கள் உருவாக்கிய அழகிய பத்திக் துணிகளின் வரலாற்றையும் காட்சிப்படுத்துகிறது.
சாரோங் கெபாயா இல்லாதவர்கள், பெரானாக்கான் ஆடை வடிவமைப்பாளரான ரேமண்ட் வோங்கின் ‘ஸ்டார் மேக்ஓவர்’ நடவடிக்கையில் கட்டணம் செலுத்தி பங்கேற்று பாரம்பரிய பெரானாக்கான் ஆடை அலங்காரத்தைப் பெறலாம்.
“வயது, பின்னணி வரம்பின்றி அனைவருக்காகவும் நடத்தப்படும் இவ்விழா ஒரு தனிப்பட்ட, மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். பெரானாக்கான் சமூகங்களின் பாரம்பரியம், கலை, வாழ்க்கைமுறைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்,” என்றார் செல்வி விஜயலக்ஷ்மி.
மேல் விவரங்களுக்கு www.peranakanmuseum.org.sg என்ற இணையத்தளத்தை நாடுங்கள்.