அழிந்து வரும் தமிழர் பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் விதமாக, ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ எனும் கலைத் திருவிழா நடைபெற உள்ளது.
வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் ‘எஸ்பிளனேடு அரங்கத்தில்’ நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர், இந்தியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, கும்மி, பொய்க்கால் குதிரை, பின்னல் கோலாட்டம் உள்ளிட்ட பலவற்றைக் கலைஞர்கள்மேடையில் அரங்கேற்ற உள்ளனர்.
ஆனந்தா மரபுக் கலைகள் கூடம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ‘வாழ்வின் இதயத் துடிப்பு’ (Heartbeat of life) எனும் கருப்பொருளில் அமைந்த தமிழ் மரபுக் கலைகளும், அதே பாணியில் அமைந்த பிற இந்திய, மலாய், சீனக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
‘இயற்கையின் தாளம்’ (Nature’s Rhythm) எனும் கருப்பொருளில் இந்திய பாரம்பரியக் கலைகள் அரங்கேற்றப்படும்.
கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட சமய நிகழ்வுகளில் பெரும்பாலும் வாசிக்கப்படும் தவில், நாதசுவர இசையுடன் இணைந்து இசைக்கப்படும் பம்பை, தானியங்கள் சேமித்து வைக்கப் பயன்படும் பெரிய கொள்கலனை விலங்குத்தோல் கொண்டு மூடி, விலங்குகளை விரட்ட மிகச் சத்தமாக வாசிக்கப்படும் துடும்பு, உழவர்களின் களைப்பைப் போக்கும் ஆட்டமான சக்கைக்குச்சி உள்ளிட்ட மறைந்து வரும் கலைகளை இந்நிகழ்வில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இளையர்கள் பலர் பங்களிக்க உள்ளது பெருமைக்குரியது,” என்று சொன்னார் இந்நிகழ்ச்சியின் படைப்பு இயக்குநர் கார்த்திகேயன் சோமசுந்தரம்.
பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலான பல முக்கிய தருணங்களை இசையுடன் சேர்த்துக் கொண்டாடுவதே தமிழர் மரபு என்று சொன்ன அவர், சமூக ஒன்றிணைவுக் கருவியாக இசை விளங்கியதையும் சுட்டிக்காட்டினார். அவற்றை இன்றைய இளையர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்துக் கலைகளையும் ஒரே மேடையில் நிகழ்த்துவது இதுவே முதன்முறை என்று சொன்ன திரு கார்த்திகேயன், பாடல், இசைக் கருவிகள் வாசிப்பு, நடனம் என அனைத்தும், எவ்விதப் பதிவுகளும் இன்றி நேரடியாக அரங்கேற்றப்பட உள்ளதாகவும் சொன்னார்.
இரண்டு நாள்களும் இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இந்திய சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மரபுக் கலைகளைக் காக்கவும், விரிவுபடுத்தவும், பலருக்கு எடுத்துச்செல்லவும் தொடர்ந்து ஆனந்தா மரபுக் கலைகள் கூடம் உழைத்து வருவதாகக் கூறினார் இந்நிகழ்ச்சியின் விழா மேலாளர் சுப்பு அடைக்கலவன். பங்கேற்பாளர்களுக்கு அறிய நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க இந்நிகழ்வு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் சொன்னார்.
குறிப்பாக, 31ஆம் தேதியன்று மாணவர்களுக்கான 45 நிமிடச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.