முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் அரங்கேறிய புனைவு நாடகம்

2 mins read
c5a11534-8a04-4b29-8ffc-477ac83ce0c7
‘மி‌ஷன் மல்லிகப்பூ’ நாடகத்தின் காட்சி. - படம்: அகம் நாடகக் குழு

ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சீனரைப் பல இனங்களைச் சேர்ந்த மூத்தோர் அறுவர் சேர்ந்து காப்பாற்றுவதாக அமைந்த தமிழ் நாடகம் அண்மையில் அரங்கேறியது.

எஸ்பிளனேட் சிங்டெல் நீர்முனை அரங்கில் அரங்கேறிய முதல் தமிழ் நாடகமான ‘மி‌ஷன் மல்லிகப்பூ’, 2025 கலா உத்சவத்தின் ஓர் அங்கமாக நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் இடம்பெற்றது.

‘அகம்’ நாடகக் குழு அரங்கேற்றிய இந்நாடகம் சாதாரண நாடகமாக இல்லாமல், முப்பரிமாண ஒளிப்படவியல் (‘ஹாலோகிராபிக் புரொஜெக்‌‌ஷன்’) தொழில்நுட்பத்துடன் நவீனகால நாடகமாக அரங்கேறியது.

ஒரு காட்சிக்கு 600 பேர் என இரு அரங்கம் நிறைந்த காட்சிகளை வெற்றிகரமாக அரங்கேற்றியபின், இயக்குநர்கள் சுப்பிரமணியன் கணே‌ஷ், கார்த்திகேயன் சோமசுந்தரம் ஆகியோர் தங்களது அனுபவங்களைத் தமிழ் முரசிடம் பகிர்ந்தனர்.

ஓர் உணர்திறன்மிக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்ட கதை இது. இதனைத் தொடங்கியதில் பதற்றம் இருந்தது என்ற கார்த்திகேயன், “அதற்குரிய ஆய்வுகளை மேற்கொண்டு, நல்ல செய்திகளை ரசிக்கும் வண்ணமாகப் படைத்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

நவீனத் தொழில்நுட்பத்துடன் மேடையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஓர் காட்சி.
நவீனத் தொழில்நுட்பத்துடன் மேடையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஓர் காட்சி. - படம்: அகம் நாடகக் குழு

2015ஆம் ஆண்டு ஒருவரிக் கதையாக இந்நாடகத்தின் கதை கருக்கொண்டதைச் சுட்டிய அவர், பத்தாண்டுகாலப் பயணத்தைத் தொடர்ந்து, புதுத் தகவல்கள், கண்ணோட்டம், நவீனத்துவம் ஆகியவற்றைப் புகுத்தி மேடையாக்கம் செய்ததாகக் கூறினார்.

ஆங்கில வசன வரிகளுடன் இந்தத் தமிழ் நாடகத்தை அமைத்ததாகவும் சொன்னார்.

இருபுறமும் முப்பரிமாண ஒளிக்காட்சி, அதற்கேற்ற ஒலி வடிவமைப்பு என மாறுபட்ட அம்சங்களுடன் இந்நாடகத்தைப் படைக்க நடிகர்கள், குழுவினர் எனக் குறைந்தது 50 பேர் பணியாற்றியதாகச் சொன்னார் கணே‌ஷ்.

“இந்நாடகத்தின் வெற்றி, குழுவின் கூட்டுமுயற்சிக்குக் கிடைத்த பலன்,” என்ற அவர், குழுவினரின் ஆய்வும் அர்ப்பணிப்பும் மேடை முதல், ஆடை வரை வெளிப்பட்டதைச் சுட்டினார்.

சமூகத்தின் தற்போதைய நிலைக்குக் காரணமாக அமைந்த தியாகம், வரலாறு குறித்த ஆக்ககரமான விவாதத்தைத் தூண்டும் நோக்கில் இதனைப் படைத்ததாகக் கூறிய அவர், நாடகம் முடிவடைந்த பின் தமது மகன் ஜப்பானிய ஆட்சிக்காலம் குறித்து ஆழமாகப் படிக்கத் தொடங்கியதாகவும் தமது ‘ஜர்னல்’ புத்தகத்தில் எழுதத் தொடங்கியதாகவும் சொன்னார்.

இதுவே வெற்றிதான்,” என்றார் கணே‌ஷ்.

பல இளையர்கள் நாடகத்துக்குத் திரண்டு வந்ததைச் சுட்டிய அவர், “நாடகக் கலை காலங்கடந்து பேசப்படக்கூடியது. அதுகுறித்த புரிதல் உருவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படைப்புகளுக்கு ஆதரவு தருவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

இந்த நாடகம் முப்புள்ளி, நான்கு புள்ளி ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அதனைப் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்