முகமது ரஃபி என்ற பெயர், சிங்கப்பூர் இந்திய இசைத்துறையில் பல ஆண்டுகளாக எதிரொலித்துவரும் ஒரு பெயராகும்.
பலதுறை இசைக்கலைஞரான அவர் ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசை வல்லவர்களின் ஒலிப்பதிவுக் கூடங்களில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த குரலுக்குச் சொந்தக்காரர்.
பகிர்ந்துகொள்ளும்போதுதான் இசை அர்த்தமுள்ளதாகிறது என்ற நம்பிக்கையால் தாம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் முரசிடம் குறிப்பிட்டார் 63 வயதான திரு ரஃபி. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாண்டு அதிபர் சவால் நிதி திரட்டுக் கலைநிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்ற திரு ரஃபி, தமது இசைப் பயணத்தில் மேலும் ஒரு மறக்கமுடியாத அத்தியாயத்தை உருவாக்கினார்.
“வழக்கமான இசைக் கச்சேரிகளிலிருந்து இந்நிகழ்ச்சி மிகவும் வேறுபட்டு இருந்தது. பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து வந்த இசைக்கலைஞர்கள், மூத்த கலைஞர்கள், இளங்கலைஞர்கள், மாற்றுத்திறனாளிக் கலைஞர்களை நான் சந்தித்தேன்.
“சிலர் பார்வையற்றவர்களாகவும், சிலர் செவித்திறன் குறைந்தவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், அனைவரும் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புடனும் மகிழ்ச்சியுடனும் நிகழ்ச்சியைப் படைத்தனர்,” என்றார் அவர்.
கலைஞர்களில், செவிப்புலன் குறைபாட்டுடன் பிறந்த இளம் பியானோ கலைஞர் பர்விந்தர்ஜீத் கவுர் என்பவரைத் திரு ரஃபி சுட்டினார். இவர் சிங்கப்பூர் பாடகர் பெஞ்சமின் கெங்கிற்குத் துணையாகப் பியானோவை இசைத்தார்.
“இசையை உருவாக்க அவர்கள் எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேறினர் என்பதைப் பார்க்கும்போது, நமது திறமைகளைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதை எனக்கு நினைவூட்டியது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு ரஃபியின் மேடை நிகழ்ச்சி ஒரு கூட்டு முயற்சியாக அமைந்தது. அவர் ஒரு லத்தீன் மொழியில் கலப்பிசை அங்கத்தை (Latin medley) வழிநடத்தினார். அதில், மற்ற பாடகர்கள், இசைக்குழுக்கள், மாற்றுத்திறனாளி இசைக்கலைஞர்களைக் கொண்ட ‘ஃபெய்த் மியூசிக்’ நிலையத்தின் (Faith Music Centre) ‘பாரா-பீட்ஸ்’ (Para-beats) குழுவினரும் இணைந்தனர்.
திரு ரஃபி தொலைக்காட்சியிலும், தேசிய நிகழ்ச்சிகளிலும் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவருடைய குழந்தைப்பருவத்திலிருந்து வீட்டில் பேசப்பட்ட மொழியாக இசை இருந்துவந்தது.
இந்தியாவைச் சேர்ந்த நாடகக் கலைஞரும், பல இசைக்கருவிகளை வாசிப்பவருமான அவரின் தந்தையாரே திரு ரஃபியின் முதல் இசை குரு. எட்டு வயதில் அவர் மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினார்.
பன்னிரண்டு வயதில் அவர் தம் தந்தையுடன் மேடையேறத் தொடங்கினார். 1970களின் தொடக்கத்தில், அவர் ‘ஆர்டிஎம்’ (Radio Television Malaysia) நிறுவனத்தின் ‘மாணவர் மேடை’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்றுவரை தம்முடன் பணியாற்றிவரும் பல இசைக்கலைஞர்களை அங்குதான் முதன்முதலில் சந்தித்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், இசைத்துறையில் அவருடைய தொடக்கக்காலப் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. முதலில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய திரு ரஃபி, அதன்பின் சிங்கப்பூரின் முதல் விசா கடனட்டைகளை அறிமுகப்படுத்திய ஒரு வங்கியிலும் பணிபுரிந்தார். பிறகு, ஒரு ‘யமஹா’ காட்சியகத்திலும் வேலைசெய்தார்.
பகலில் இப்படிப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்தாலும், இரவு நேரங்களில் தமது மனத்திற்கு விருப்பமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். மனமகிழ் மன்றங்களிலும் ஹோட்டல்களிலும் ‘பீ ஜீஸ்’ (Bee Gees) முதல் ‘மைக்கேல் ஜாக்சன்’ (Michael Jackson) வரை ஆங்கிலப் பாப் இசையை அவர் வாசித்துவந்தார்.
ஆங்கிலம், மலாய், தமிழ், இந்தி என எல்லா மொழிகளிலும் பாடியுள்ள திரு ரஃபி, “இசை எவ்வகையினதாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்,” என்கிறார்.
1990களில் அவர் இந்தியாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரியத் தொடங்கியபோது அவரது இசைப்பயணம் ஒரு முக்கியத் திருப்புமுனையை அடைந்தது. தெலுங்கு, தமிழ், இந்தித் திரைப்படங்களில் திரு ரகுமானுடன் அவர் இணைந்து செயல்பட்டார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பலரால் அறியப்பட்ட பிரபல ‘ஜும்பலக்கா’ பாடலைப் பாடவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
“ரகுமான் திடீரென்று நள்ளிரவில் என்னை அழைத்து, ‘இப்போ ஃபிரீயா?’ என்று கேட்பார்,” என்று திரு ரஃபி சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.
திரு ரஃபியின் நிரலாக்கமும் இசையமைப்புகளும் ‘தாள்’ இந்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இஷ்க் பினா’ போன்ற பாடல்களிலும், ‘காதல் தேசம்’, ‘பாய்ஸ்’ போன்ற திரைப்படங்களின் இசையிலும் இடம்பெற்றுள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களுக்கும் தமது குரல், கித்தார், இசை அமைக்கும் திறன்களை அவர் வழங்கியுள்ளார்.
திரைப்படப் பாடல்களுக்கு அப்பாற்பட்டு, திரு ரஃபி தம் சொந்தப் பாடல்களை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். அம்முயற்சியில் நிதி, தளவாடச் சவால்கள் இருந்தபோதும் மக்களை ஈர்க்கும் இசையை உருவாக்கும் நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்தார். கலாசார எல்லைகளைத் தாண்டி, சிங்கப்பூர் ரசிகர்களுக்குப் புதுமையான இசை அனுபவங்களை அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்.
இசையை உருவாக்குவதில் கணினித் தொழில்நுட்பத்தின் வருகையை ‘கடவுள் கொடுத்த வரம்’ என்று அவர் கருதுகிறார். 1980களின் பிற்பகுதியில் அட்டாரி (Atari) கணினியுடன் தொடங்கி, பின்னர் 1990களின் மத்தியில் முழுமையான ஆப்பிள் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு மாறியபோது, கணினி அவருக்கு ஓர் அத்தியாவசியத் துணையாக மாறியது. இது, சிங்கப்பூரில் பெரிய இசைக்குழுவை அமைப்பதன் சிரமத்தைக் குறைத்து, மிக நுணுக்கமான இசையை உருவாக்க அவருக்குத் துணைபுரிந்தது.
“இசையின் சாரம் மாறவில்லை. ஆனால், அதை உருவாக்கும் விதமும் பகிரும் முறைகளும் காலப்போக்கில் எல்லையற்ற சாத்தியங்களுக்கு வழிவகுத்துள்ளன,” என்று திரு ரஃபி குறிப்பிட்டார்.
புதிய இசையை உருவாக்க இன்றும் ஊக்கத்துடன் இருப்பதாகக் கூறும் திரு ரஃபி, வளர்ந்துவரும், இளைய சிங்கப்பூர்க் கலைஞர்களுக்குச் சொந்த பாடல்களையும் சிறந்த வாய்ப்புகளையும் வழங்க அவர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் சொன்னார்.
மேடையில் நிகழ்ச்சிகளைப் படைப்பது, ஸ்டுடியோவில் இசையமைப்பது, அனைவரையும் உள்ளடக்கிய இசை முயற்சிகளை ஆதரிப்பது என எதுவாக இருந்தாலும், தம்முடைய பயணத்தைப் புகழ் வரையறுக்கவில்லை என்று அவர் கூறினார். மாறாக அது இசைமீதான பேரார்வம், விடாமுயற்சி, மற்றவர்களுடன் இசையைப் பகிர்ந்துகொள்வதனால் ஏற்படும் மகிழ்ச்சி முதலியவற்றால் கட்டமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இளங்கலைஞர்கள் தங்களுக்குள் இருக்கும் இசையை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்த திரு ரஃபி, அவர்கள் கிடைத்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி தொடர்ந்து பயிற்சி செய்து, தங்கள் திறமைகளை மெருகேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

