இருமனங்கள் இணைவதே திருமணம். ஆனால், திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய கணவன், மனைவி இடையே நேர்மையான உரையாடல்கள் தேவை என்கிறார் எண்டோவஸ் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வு இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம்.
செலவு, சேமிப்பு, முதலீடு குறித்து இணையர் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தால் திருமணம், புதிய வீடு போன்ற பெரிய செலவுகளை நன்கு நிர்வகிக்கலாம்.
மேலும், நிதி திட்டமிடலை ஒருங்கிணைந்து மேற்கொள்வதுமூலம் திருமண உறவின் அடித்தளம் வலுவாக அமையும் என்கிறார் திருவாட்டி மின்.
வங்கிக் கணக்கில் தொடங்கட்டும்
பணம் சார்ந்த நம்பிக்கைகள், செலவிடும் பழக்கம், நடப்பிலுள்ள நிதிக் கடப்பாடுகள் போன்றவை குறித்து தங்களுக்குள் மனம்விட்டுப் பேசிக்கொள்வது, இணையரின் நிதிசார்ந்த இலக்குகளையும் வாழ்க்கைமுறை எதிர்பார்ப்புகளை வகுத்துக்கொள்ள உதவும்.
அது வங்கிக் கணக்கு சார்ந்த திட்டமிடலிலிருந்து தொடங்கலாம்.
கணவனும் மனைவியும் தனித்தனி வங்கிக் கணக்குகளை வைத்திருக்கலாம். இதன்மூலம் ஒருவர் செலவாளி, இன்னொருவர் சேமிப்பவர் என்ற சண்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மாறாக, இருவரும் சேர்ந்து கூட்டுக் கணக்குகளைத் தொடங்கலாம். பணம் எங்கே செல்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள இது உதவும், அதே நேரத்தில், ஒருவரின் செலவுப் பழக்கம் இன்னொருவர்க்கு வருத்தம் தரலாம்.
பொதுவான செலவுகளுக்குக் கூட்டுக் கணக்குகளை வைத்துக்கொள்வது இன்னொரு தெரிவு. அதாவது, மின்கட்டணம், சேவைப் பராமரிப்புக் கட்டணம், ஓய்வுக்கால முதலீடுகள் போன்றவற்றுக்கு கூட்டுக் கணக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட செலவுகளுக்கான நிதிச் சுதந்திரத்திற்கும் தனிப்பட்ட முதலீடுகளுக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருமணத்திற்கு முன்பே திட்டமிடுங்கள்
அடுத்ததாக, வாழ்வில் பெருந்தாக்கத்தை உருவாக்கும் நிதி இலக்குகளை இணையர்கள் திட்டமிட வேண்டும். அவை தனிப்பட்ட இலக்குகளாகவும் இருக்கலாம், இருவர்க்குமான கூட்டு இலக்குகளாகவும் இருக்கலாம். இருவரும் சேர்ந்து எவ்வளவு முதலீடு செய்வது, சேமிப்பது என்பதை முடிவுசெய்யலாம்.
குடும்பம், குழந்தைகள், வாழ்க்கைமுறை, ஓய்வுக்காலம் ஆகியவை கூட்டு இலக்குகளில் அடங்கும். மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை உங்கள் இலக்குகளுக்காக ஒதுக்குவது நல்ல பழக்கம்.
அதே நேரத்தில், வேலையிழப்பு, திடீரென பெருஞ்செலவு போன்ற அவசரத் தேவைகளுக்கான சேமிப்பும் அவசியம். ஒரு சில மாதங்களுக்கான செலவுகளைச் சமாளிக்கத் தேவையான போதுமான பணம் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
பின்னர் தங்களது பொதுவான இலக்குகளை அடைவதற்கான முதலீடுகள் குறித்து இணையர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி, தங்கள் வருமானத்திற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களை வகுக்கலாம். முதலீடு செய்வதும் கூட்டுவட்டியும் சொத்துப் பெருக்கத்திற்கான எளிய, ஆனால் ஆற்றல்மிக்க வழிமுறை.
இரண்டு, மூன்று ஆண்டுகள் என குறுகியகால முதலீட்டுத் திட்டங்கள், குறைந்த அபாயமுள்ள முதலீடுகள் குறித்தும் அவர்கள் சிந்திக்கலாம்.
இணையரின் நிதித் திட்டமிடலில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது காப்புறுதி. வீட்டுக்கான அடைமானக் காப்புறுதித் திட்டங்கள், மருத்துவம், தனிப்பட்ட விபத்துக் காப்புறுதித் திட்டங்களை இணையர்கள் கருத்தில் கொள்ளலாம்.
அதிகப்படியான செலவையும் கடனையும் தவிர்ப்பது நலம்
வருமானத்திற்குள் வாழ்வதே நிம்மதி தரும். வரவை மிஞ்சிய செலவாலும் சமாளிக்க முடியாத அளவு கடனாலும் திருமண வாழ்க்கை கசந்து போகலாம்.
இணையர்கள் அவ்வப்போது தங்களது வரவுசெலவை ஒழுங்குபடுத்துவதும் மறுஆய்வு செய்வதும் நலம்பயக்கும்.
குடும்பத்தின் வரவுசெலவு குறித்து கணவன், மனைவி இருவரும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
பணம், நிதி சார்ந்த விவகாரங்களில் அவர்கள் மனம்விட்டுப் பேசிக்கொள்வது முக்கியம். கூட்டு முதலீடுகள், செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதற்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்குள் புரிதலும் தெளிவும் இருப்பது அவசியம். குறிப்பாக, பெரிய செலவுகளைச் சமாளிப்பதற்கு இருவரும் சேர்ந்து திட்டமிட வேண்டும்.
கணவன் - மனைவி இடையிலான நிதி சார்ந்த கலந்துரையாடல்களும் திட்டமிடலும் திருமண வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பது உறுதி.

