ஓய்வுபெற்ற தொழில்நுட்பர் ராமையா விஜயநாமன், 76, வயதான காலத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறையைப் புரிந்துகொண்டுள்ளார்.
“நன்றாகச் சேமித்திருக்கவேண்டும்; சேமித்த பணத்தை அறிவாகச் செலவுசெய்யவேண்டும். அதனால்தான், என் மனைவியும் நானும் பணத்துக்காக எங்கள் பிள்ளைகளை நம்பியிருப்பதில்லை,” என்றார் திரு விஜயநாமன்.
திரு விஜயநாமன் தன் 70 வயது வரை ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வுகாலத்திற்காகத் தன் சேமிப்புகளைப் பெருக்கிக்கொண்டார்.
ஓய்வுபெற்றபின்பும் கொவிட்-19 பெருந்தொற்றின்போது மனைவி சமைத்த உணவை உற்றார் உறவினருக்கு அவர் விநியோகித்தும் சம்பாதித்தார்.
இன்றுவரை அவருடைய 76 வயது மனைவி ஜானகி பொட்டலமிடும் துறையில் பகுதிநேர வேலை செய்கிறார்.
தம் மூன்றாவது மகனுடன் நான்கறை வீட்டில் வசிக்கின்றனர் இந்த இணையர். அவர்கள் தம் வீட்டுக்கான வரவுசெலவுகளைக் கவனமாக நிர்வகித்துவந்துள்ளனர். அதனால், தேவைப்படும் காலத்தில் அவர்களுக்குப் போதிய சேமிப்புகள் உள்ளன.
கைகொடுத்த அரசாங்கத் திட்டங்கள்
வேலைசெய்யும் காலத்தில் திரு விஜயநாமன் வேலைநலன் துணை வருமானத் திட்டம்வழிப் பயனடைந்தார். இத்திட்டம், தகுதிபெறும் ஊழியர்களின் சம்பளங்களையும் மத்திய சேமநிதிக் (மசேநி) கணக்குகளையும் அதிகரிக்கிறது. பணிபுரியும் காலத்தில், அவர் நீக்குப்போக்கான வேலை வாய்ப்புகளின் மூலமும் பயனடைந்தார்.
பொருள், சேவை வரிக்கான நிரந்தரப் பற்றுச்சீட்டுத் திட்டம், சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டம் போன்றவற்றின்மூலம் கிடைக்கும் யு-சேவ் மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள், ரொக்கம், மெடிசேவ் நிரப்புதொகைகள், பற்றுச்சீட்டுகளும் விஜயநாமன்-ஜானகி தம்பதியருக்கு உதவுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சிக்கனமாக இருப்பதற்காகத் திரு விஜயநாமன் இயன்றவரைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார். டிசம்பர் 2024ல் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டபோது அரசாங்கம் வழங்கிய $60 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் அவருக்கு உதவியாக இருந்தன. மாதாந்திரத் தனிநபர் வருமானம் அதிகபட்சம் $1,800 இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் இப்பற்றுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.
மாதாமாதம் மசேநி ஓய்வுகாலச் சேமிப்புகளிலிருந்து வரும் பணமும் மூத்தோருக்கான மற்ற அரசாங்க உதவித் திட்டங்களும் திரு விஜயநாமன் போன்ற மூத்தோர் தம் வயதான காலத்திலும் நிதிப் பிரச்சினைகளின்றி வாழ உதவுகின்றன.
ஆனால், உண்மையான நிதிப் பாதுகாப்பு என்பது அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் ஆற்றலை மட்டும் குறிப்பதல்ல; மருத்துவச் செலவுகள்பற்றிய கவலையின்றி உடல்நலத் தேவைகளை பூர்த்திசெய் முடிவதும் அதில் உள்ளடங்குகிறது.
பாதுகாவலராகப் பணியாற்றும் காலத்தில் கீழே விழுந்தபோதும் சென்ற ஆண்டு லேசான பக்கவாதம் ஏற்பட்டபோதும் திரு விஜயநாமன் மருத்துவச் செலவுகள்பற்றிக் கவலைப்படத் தேவைப்படவில்லை. சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறைத் திட்டம்வழி கிடைத்த சலுகைகள் மருத்துவச் செலவுகளில் பெரும்பான்மையை ஈடுகட்டின; மீதமுள்ள தொகையை அவர் மெடிசேவ் வழிச் செலுத்தினார்.
முன்னோடித் தலைமுறைத் திட்டம் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு ஆண்டுதோறும் மெடிசேவ் நிரப்புத்தொகைகளை ($300 முதல் $1,200 வரை, பிறந்த ஆண்டைப் பொறுத்து) வழங்குகிறது. மெடிசேவ்மூலம் மெடிஷீல்டு லைஃப், கேர்ஷீல்டு லைஃப், எல்டர்ஷீல்டு காப்பீடுகளுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியும்.
அனைத்துச் சிங்கப்பூர்க் குடும்பங்களையும் போல திரு விஜயநாமனின் குடும்பமும் 2021இல் அறிமுகமான மின்னிலக்க சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டம்வழி பயனடைகிறது. சென்ற மே மாதம் வழங்கப்பட்ட $500 சிடிசி பற்றுச்சீட்டுகள்மூலம் அவருடைய மனைவி காய்கறிகள், வீட்டுப் பொருள்களை வாங்குகிறார். சிங்கப்பூரின் 60வது ஆண்டுப் பிறந்தநாளைக் கொண்டாட, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்துச் சிங்கப்பூர் முதியவர்களும் $800 மதிப்பிலான எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளையும் பெறத் தகுதிபெறுகின்றனர். சிடிசி பற்றுச்சீட்டுகளை ஏற்கும் அனைத்து வர்த்தகங்களிலும் அவைச் செல்லுபடியாகும்.
ஓய்வுகாலம் நோக்கியப் பயணம்
திரு விஜயநாமனுக்கு நீண்ட, வெற்றிகரமான வேலைப் பயணம் இருந்துள்ளது. தன் 16 வயதில் பள்ளியில் தொழில்சார் கல்வியை முடித்ததும் அவர் ஆகாயப்படையின் உணவகத்தில் பணியாற்றினார். தேசிய சேவை செய்த முதல் சிங்கப்பூரர்களில் அவரும் ஒருவர். அப்போது ‘விஜிலன்டெ கார்ப்ஸ்’சில் சேவையாற்றிய அவர், அதே சமயம் செம்பவாங் கப்பல் தொழிற்சாலையில் வேலைப்பயிற்சியும் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அங்கேயே அவர் வேலைக்கும் சேர்ந்தார்.
அங்குப் பல்லாண்டுகள் பணியாற்றியபின் அவர் ‘எம்ஆர்டி கார்ப்பரேஷன்’ (பின்பு எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன் என மாறியது) நிறுவனத்தில் சேர்ந்து தலைமைத் தொழில்நுட்பர் பதவிக்கு உயர்ந்தார். அங்கு அவர் இறுதியாக பணியாற்றிய திட்டம், சாங்கி விமான நிலையத்துக்கான தானா மேரா இணைப்பே. தன் 52வது வயதில் நிறுவன மறுவடிவமைப்பால் அவர் நிறுவனத்தை விட்டுச் சென்றார்.
பின்பு பாதுகாப்புத் துறைசார்ந்த பயிற்சிக்குச் செல்ல நண்பர் பரிந்துரைத்ததும் அத்துறையில் உரிமம் பெற்றார் திரு விஜயநாமன். அதை வைத்து அவர் அனைத்துலக பிரெஞ்சுப் பள்ளியில் ஐந்தாறு ஆண்டுகள் பணியாற்றினார். “எஸ்ஜி50க்கு எனக்குத் தலைசிறந்த பாதுகாவலர் விருது கிடைத்தது,” எனப் பெருமையுடன் நினைவுகூர்ந்தார் திரு விஜயநாமன்.
ஆனால், நீண்ட நேரப் பணி அவருடைய ஆரோக்கியத்தைப் பாதித்தது. ஒரு முறை விழுந்து கால் அடிபட்டபின் வேலையை நிறுத்த மகன் அறிவுறுத்தியதால் அவர் 70 வயதில் ஓய்வுபெற்றார்.
எண்ணங்களும் வாழ்க்கைமுறையும் மாறின
ஓய்வுபெற்றதும் திரு விஜயநாமன் தன் மசேநி சாதாரணக் கணக்கிலிருந்து ஒரு முறை $20,000 திரும்பப் பெற்று, மீதமுள்ள தொகையை அவசரக் காலத்துக்காக ஒதுக்கிவைத்தார்.
தொடக்கத்தில் திரு விஜயநாமனுக்கு ஓய்வுபெறுவது பற்றிய கவலை இருந்தது. “நாங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பினோம். அத்தியாவசியச் செலவுகளைத் தாண்டி அதற்குப் போதிய பணம் உள்ளதா எனத் தெரியவில்லை; அதே சமயம், எங்கள் மகனிடம் பணம் கேட்கவும் விரும்பவில்லை,” என்றார் திரு விஜயநாமன்.
அதனால் தம் வாழ்க்கைமுறையை அவர்கள் மாற்றிக்கொண்டனர். “சலுகை கொண்ட எம்ஆர்டி அட்டை எங்களுக்கு உள்ளது என்பதால் நாங்கள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறோம். என்ன, வீட்டைவிட்டு முன்பே வெளியாக வேண்டும். சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து நன்றாகவும் மூத்தோர் சமாளிக்கக்கூடிய விலையிலும் உள்ளது. காரில் செல்வதோடு ஒப்பிடும்போது எவ்வளவோ சேமிக்க முடிகிறது,” என்றார் அவர்.
“என் மனைவிக்கும் எனக்கும் அவ்வளவு தேவைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஏற்கெனவே நல்ல உடைகள் இருக்கும்போது புத்தாடை வாங்குவது அவசியமில்லை. இருப்பதைத் துவைத்து இஸ்திரி போட்டால் போதும். ஆனால் என் மகன்களோ, எத்தனை ஆண்டுகள் அதே சட்டையை அணிவேன் எனக் கேட்பார்கள். எங்களுக்காக எப்போதும் உடைகள் வாங்கித் தருவார்கள். நானும் மறுப்பதில்லை. மறுத்தால் மகன்கள் கோபித்துக்கொள்வார்கள்,” எனச் சிரித்தபடிக் கூறினார் திரு விஜயநாமன்.
சமூகப் பணியும் உடற்பயிற்சியும் அளிக்கும் மனநிறைவு
திரு விஜயநாமனும் அவருடைய மனைவியும் இளமைத் துள்ளலோடு தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபடுகின்றனர்.
உட்லண்ட்ஸ்சிலுள்ள ஸ்ரீ நாராயண மிஷன் துடிப்பான மூப்படைதல் நிலையத்தில் தொண்டூழியர்களாக இணைந்துள்ள திரு விஜயநாமனும் அவருடைய மனைவி ஜானகியும் சக முதியோருடன் வலுவான பந்தங்களை ஏற்படுத்துகின்றனர்.
“எனக்கு மலாய்மொழியில் பேசப் பிடிக்கும். இங்குள்ள முதியோரில் சிலர் மலாய் பேசுவதால் என் மொழி வளத்தை என்னால் மேம்படுத்தமுடிகிறது. அவ்வப்போது நான் வட்டாரத்தைச் சுற்றிச் சென்றும் சக முதியோருடன் உரையாடுகிறேன்,” என்றார் திரு விஜயநாமன். நிலையத்திலுள்ள முதியோருக்குச் சமையல் வகுப்புகளை நடத்துகிறார் திருவாட்டி ஜானகி.
சென்ற ஆண்டு ஏற்பட்ட பக்கவாதத்திலிருந்தும் குணமடைந்துவரும் திரு விஜயநாமன், தன் ஆரோக்கியத்தைக் கருதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ நாராயண மிஷன் துடிப்பான மூப்படைதல் நிலையத்துக்குச் சென்று யோகா பயிற்சி மேற்கொள்கிறார். “முன்பு வாழ்க்கை வேலை, வீடு, தூக்கம் என இருந்தது. நான் இப்போது இன்னும் நிம்மதியாக இருக்கிறேன்,” என்றார் அவர்.
இன நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் திரு விஜயநாமன் வெவ்வேறு வழிபாட்டிடங்களுக்கும் சென்று மனநிறைவடைகிறார்.
துடிப்பாக இருப்பது, கவனமாகச் செலவிடுவது
“இன்று செய்தியில் பார்த்தால் பல நாடுகளின் பொருளாதாரங்களும் தடுமாறுகின்றன. நாட்டின் நிர்வாகம் வீட்டின் நிர்வாகத்தில் தொடங்குகிறது என நம்புகிறேன். நான் என் மகனிடம் கூறுவதும் அதேதான். சிறு வருமானத்தை வைத்துக்கூட என்னால் குடும்பத்தை நடத்த முடிவதற்குக் காரணம் நாம் சேமிப்பதே. இப்போது நீ சேமிக்காவிட்டால் நாளைப் பெரிய பிரச்சினைகள் இருக்கும் என அறிவுறுத்துவேன்,” என்றார் திரு விஜயநாமன்.
4Dயில் நம்பிக்கை வைத்துப் பணத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, பணத்தைச் சேமித்துக் கோயில்களில் உணவு நன்கொடைச் செய்வது, வசதிகுறைந்த நாடுகளுக்கு நன்கொடையளிப்பது போன்றவற்றைச் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
இன்று திரு விஜயநாமன் பல புதிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்; தன் சக முதியோரைத் துடிப்பான மூப்படைதல் நிலையங்களுக்குச் சென்று அவற்றின் நடவடிக்கைகளில் பங்குகொள்ள ஊக்குவிக்கிறார். “சிலர் நிலையம் தம் வீட்டின் அருகில் இல்லையெனக் கூறும்போது, உங்கள் வீட்டிலிருந்து நேரடிப் பேருந்து இருக்கின்றதேயென நான் சுட்டிக்காட்டுகிறேன். அப்பொழுது அவர்களும் நிலையத்துக்கு வருவது அவ்வளவு கடினமல்ல என உணர்கிறார்கள்,” என்றார் அவர்.
இதையடுத்து, அவர் ஸ்ரீ நாராயண மிஷன் மூப்படைதல் நிலையத்தில் சக முதியோருக்கு நண்பராகப் பழகப் பயிற்சி மேற்கொள்வார். “நம்மைப் போன்ற முதியோர் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது, பணத்தை நிர்வகிப்பது, அதிமுக்கியமாக, எப்படிச் சொந்தக் காலில் நிற்பது என அறிந்துகொள்ள வேண்டும்,” என அவர் கூறினார். அவற்றுக்குத் திட்டமிட ஓய்வுபெறும் வரைக் காத்திருக்க முடியாது என்பதற்கு அவரே நல்ல சான்று.
ஓய்வுகாலத்துக்காகத் திட்டமிட உதவும் திட்டங்களுக்கும் ஆதரவுக்கும் https://go.gov.sg/tfb-tm இணையத்தளத்தை நாடவும். உங்கள் துடிப்பான மூப்படைதல் பயணத்தைத் தொடங்க, தீவு முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ‘டுகெதர் ஃபார் பெட்டர்’ சாலைக் கண்காட்சிகளுக்கும் சென்று காணவும்.

