சிங்கப்பூரில் தமிழுக்கும் இசைக்கும் பங்களிக்கும் ஐவருக்கு விருது

2 mins read
இசை முரசு நாகூர் இ.எம். ஹனிஃபா கலாசார விருதுகளை வழங்கியது சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
8a24c410-ccb0-4bdc-bde0-dab9b46d4036
(இடமிருந்து) திருவாளர்கள் முகமது உசேன், முகமது அலி, முகமது பிலால், ராஜா முகமது, சிறப்பு விருந்தினர் ஜைனுல் ஆபிதீன் ரஷீத், மு.அ. மசூது, இர்ஃபானுல்லாஹ் கான், முகமது ரஃபி யாக்கோப், முகமது ரஃபி அபூபக்கர், மு.அ.காதர். - படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

சிங்கப்பூரில் நெடுங்காலமாகத் தமிழுக்கும் இசைத்துறைக்கும் பங்காற்றும் ஐவருக்கு இசை முரசு நாகூர் இ.எம். ஹனிஃபா கலாசார விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் - இந்திய முஸ்லிம் பேரவையுடன் இணைந்து இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிஃபா நூற்றாண்டுப் பெருவிழாவை நடத்தியது. கிரேத்தா ஆயர் கலைக்கூடத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி நடந்த விழாவில் சிங்கப்பூர்க் கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான திரு ஹனிஃபா தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளில் பாடிப் பறந்த இறையிசைக் குயிலாக வர்ணிக்கப்படுபவர்.

அவருடைய இசைப் பயணத்தில் சிங்கப்பூருக்குத் தனியிடம் உண்டு. இசை முரசின் தொடக்ககால இறையிசை ஒலிப்பேழைகள் சிங்கப்பூரில்தான் வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் அவர் குரல் ஒலிக்க அவையும் காரணமாயின.

‘இறைவனிடம் கையேந்துங்கள்’ எனும் பாடல் உட்பட பல்வேறு பாடல்கள் மூலம் இன நல்லிணக்கக் கருத்துகளை மக்கள் மனங்களில் விதைத்தவர் நாகூர் ஹனிஃபா.

தாய்மொழிப் பற்று மிகுந்த அவர் தமிழை ஏற்றிப் போற்றும் பாடல்களையும் பாடியிருக்கிறார். அவரது குரலில் சிங்கப்பூரின் புகழ்ச் சித்திரத்தை வரைந்து காட்டும் ‘சின்னஞ் சிறு எழில் நாடு’ எனும் பாடலை ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால் எழுதினார். தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் சிங்கப்பூரின் பெருமையை இன்றும் அந்தப் பாடல் பறைசாற்றுகிறது.

இசை முரசின் பெருமையைப் போற்றிய அதேவேளை சிங்கப்பூரில் தமிழுக்கும் இசைத்துறைக்கும் பங்களிக்கும் ஐவருக்கு விருது வழங்கி கௌரவித்தது சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்.

சிங்கப்பூர் சின்னத்திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத முத்திரை பதித்துள்ள ஆளுமை ‘த மீடியா’ நிறுவனத்தின் முகமது அலி, ‘வசந்தம் பாய்ஸ்’ இசைக் குழு மூலம் சீரிய இசைப் பணியாற்றும் முகமது ரஃபி யாக்கோப், ஒலி 968 வானொலியில் நாள்தோறும் நல்ல தமிழ் பரப்பும் ஒலிபரப்பாளர் முகமது ரஃபி அபூபக்கர், சிங்கை மக்களின் மனங்கவர்ந்த நல்லிசைப் பாடகர் இர்ஃபானுல்லாஹ் கான், ‘சிங்கை நாடு’ எனும் தேசிய தின அணிவகுப்புப் பாடலை எழுதி, இசையமைத்து, வெளியிட்ட பன்முகத் திறன் கொண்ட கலைஞர் ஷபீர் சுல்தான் ஐவருக்கும் இசை முரசு நாகூர் இ.எம். ஹனிஃபா கலாசார விருது வழங்கப்பட்டது. ஷபீர் சார்பாகத் திரு முகமது உசேன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் மூத்த துணையமைச்சரும், குவைத்துக்கான முன்னாள் சிங்கப்பூர்த் தூதருமான ஜைனுல் ஆபிதீன் ரஷீத் ஐவருக்கும் விருது வழங்கிக் கௌரவித்தார்.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாடகர் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ், தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஃபரீதா, யூடியூப் புகழ் பாடகி ரஹீமா ஆகியோர் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நாகூர் ஹனிஃபாவின் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர். அரங்கில் 750க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சி சிறக்க உறுதுணையாய் இருந்த ஆதரவாளர்களுக்கும் அங்கீகார மடல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

முத்தாய்ப்பாக இசைமுரசின் பல்வேறு பாடல்களைக் கோத்து இசைக் கலைஞர்கள் வழங்கிய கதம்ப இசையாரம் ரசிகர்களின் பலத்த கரவொலியைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்