ஒருவரது மனநிலையே மறைமுகமாக அவரது உணர்வைத் தீர்மானிக்கிறது என்றும் அது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பணிச்சுமை நிறைந்த பரபரப்பான நாளிறுதியில் சற்று அதிகமாக உணவு உட்கொள்ள நினைப்பதும் சற்றே சாந்தமான மனநிலையில் இருக்கும்போது ‘கம்ஃபர்ட் ஃபுட்’ எனப்படும் எளிமையான உணவை உட்கொள்ள நினைப்பதும் இயல்பே.
ஒரு குறிப்பிட்ட உணவைச் சாப்பிட வேண்டும் எனும் விருப்பம் ஏற்படுவதும் மனச்சோர்வு ஏற்படும்போது சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் எண்ணங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் உணவுமுறை தேர்வில் தாக்கம் ஏற்படுத்துவதற்கான சான்றுகள். சிலர் அதிக நொறுக்குத் தீனி உண்பதற்குப் பின்னும் மனம் அமைதியற்று இருக்கலாம்.
இதுபோல் அவ்வப்போது நடப்பது இயல்பாக இருந்தாலும், அது தொடர்ந்து நடந்தால் உணவு உண்ணும் கோளாறாக (Eating disorder) மாற வாய்ப்புள்ளது.
பின்ஜ் ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Binge eating disorder) எனும் தொடர்ந்து கணக்கின்றி உண்ணும் நிலை தொடங்கி, அனோரெக்ஸியா நெர்வோசா (Anorexia Nervosa), புலிமியா (Bulimia) எனப் பல்வேறு உளவியல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புலிமியா எனும் பிரச்சினை, உணவின் மீது அதிக விருப்பமும் உடல்நலன், அழகின் மீது கவலையும் இருக்கும். இவற்றுக்கிடையே சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்படும்.
‘அனோரெக்ஸியா’ என்பது தான் பருமனாக இருக்கிறோம் எனும் மனநிலையினால் உண்ணாமல் பட்டினி கிடைக்கும் நிலை. அழகு சார் துறையில் இருக்கும் பலர் இந்த நிலையால் அவதியுறுகின்றனர்.
உருவக் கேலி குறைந்திருப்பதும், அதனை எதிர்கொள்ளும் பக்குவம் அதிகரித்திருப்பதும் இந்த நிலையைக் குறைத்துள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், பிற மன அழுத்தம் தரும் சூழ்நிலைகள் உண்ணுதலில் கோளாறு/குறைபாடு ஏற்படக் காரணமாக அமைகின்றன.
சமூக ஊடகங்களில் மனநிலையையும் உணவையும் தொடர்புப்படுத்தி வரும் காணொளிகளால் ஈர்க்கப்பட்டு, அந்தத் தாக்கத்தினால் இந்தக் கோளாறுகளுக்கு ஆளாவதும் அதிகரித்து வரும் போக்கு.
எதிர்பாராத சிக்கல், இழப்புகள் ஏற்படும்போது அது உணவின் மீது முதலில் வெளிப்படுகிறது. சரியாகச் சாப்பிடாமலோ அதிகம் சாப்பிடும் நிலையோ ஏற்படும். இது ஏட்டிபிக்கல் டிப்ரெஷன் (Atypical depression) என்று வரையறுக்கப்படுகிறது.
பொதுவாக விதவிதமாக, ருசித்துச் சாப்பிட வேண்டும் எனும் எண்ணம் இயல்பானது. ஆனால், வழக்கத்துக்கு மாறான உணவு உண்ணும் பழக்கம் தொடர்ந்தால், உரிய மருத்துவ, உளவியல் ஆலோசனை எடுத்துக்கொள்வது நல்லது.