தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூதாட்டப் பழக்கத்தால் கடன் சுமைக்கு ஆளாகும் வெளிநாட்டு ஊழியர்கள்

4 mins read
வாழ்வளிக்கும் நாட்டில் வாழ்வழிக்கும் சூது
59ba8e49-4059-4f10-9b88-ee35acfe3a83
மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகிய இரு சூதாட்டக்கூடங்களுக்கும் பல வெளிநாட்டு ஊழியர்களும் செல்கின்றனர். சூதாட்டத்தினால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முதலில் 30 வெள்ளியாகத் தொடங்கும்; பின்பு, $300, $500, $1,000 என அதிகரித்து சூதாட்டம் நம்மையே அழிக்கும் என்பதைக் கடின வழியில் உணர்ந்தார் வெளிநாட்டு ஊழியர் மணி ஆரோக்கியசாமி, 35.

சூதாட்டம் அவரை 10,000 வெள்ளிக் கடனுக்கு ஆளாக்கியது.

2015ஆம் ஆண்டு அவர் வேலைக்காக முதன்முதலில் சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்தபோது, சூதாட்ட மோகம் அவரை ஆட்கொள்ளும் என அவர் சிறிதும் நினைக்கவில்லை. இந்தியாவில் அவர் சூதாடியதே இல்லை.

எனினும், நண்பர்கள் அவரை மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தை அறிமுகப்படுத்தியபோது அவரால் மறுக்கமுடியவில்லை. அவரைப் பிடித்த ஆசை, பேராசையாக மாறி அவரைச் சூதாட்டத்தில் மூழ்கச் செய்தது.

இரு வாரங்களுக்கு ஒரு முறை 650 வெள்ளி சம்பளத்தைப் பெற்றதும், உடனே மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்துக்கு விரைந்து சென்றுவிடுவார் திரு ஆரோக்கியசாமி.

கட்டுக் கட்டாய்ப் பணம் காலி

“நான் செல்லும்போது முப்பது வெள்ளியை முந்நூறு வெள்ளியாக்கும் நோக்கத்துடன் செல்வேன். அது கிடைத்ததும் உடனே கிளம்பிவிடலாம் என நினைப்பேன்,” என்றார் அவர்.

ஆனால், சூதாட்டத்திற்கு மயங்கிய மனதால் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாது. இழந்த பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து இன்னும் பணம் விரயமானது. ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதுபோல, பணம் தீர்ந்தவுடன் கூடுதல் பணத்துக்கு மனம் தானியங்கி வங்கி இயந்திரத்தை (ஏடிஎம்) நாடியது.

ஆசைக்குத் தூண்டுகோலாக அவ்வப்போது சிறு சிறு வெற்றிகளும் வரும். தமது 300 வெள்ளி ஒருமுறை 3,000 வெள்ளியாகப் பெருகியது என்றார் திரு ஆரோக்கியசாமி. ஆனால், அதைத் தவிரப் பெரும்பாலும் பணம் இழப்புதான் என்றார்.

“பணத்தை இழந்த நாள்களில் என் பணப்பையில் ஒரு நாணயம்கூட இருக்காது. டாக்சிக்கு எப்படிப் பணம் கொடுப்பது? அதனால் நான் விளையாடி முடித்த நேரத்தில் பொதுப் போக்குவரத்து இல்லையெனில், மரினா பேயிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நடந்துசென்று அங்கேயே தூங்கிவிடுவேன்.

“என் வேலைச் சீருடையை எடுத்துச் சென்றிருந்ததால் காலையில் எழுந்து அப்படியே வேலைக்குச் சென்றுவிடுவேன்,” என்றார் திரு ஆரோக்கியசாமி.

அடுத்தடுத்த தவறுகள்

பணம் குறையக் குறைய, கூடுதல் பணத்துக்காகத் தம் நண்பர்களிடம் பொய் சொல்லத் தொடங்கினார் அவர்.

“நான் என் திறன்பயிற்சி வகுப்புகளில் சேரப் பணம் தேவை எனப் பொய் சொல்லி நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினேன்,” என வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார் அவர். 2019க்குள் 10,000 வெள்ளிக்கும் மேலாக அவர் கடன்பட்டிருந்தார்.

அவரது கடன் பிரச்சினை அவருடைய வீட்டிற்குத் தெரிந்துவிட்டது.

“எப்படிப்பா இப்படிப் பணத்தை வீணாக்கினாய்?” என்ற கேள்விக்கு அவரால் பதிலளிக்கமுடியவில்லை. ஆத்திரம், கவலை, ஏமாற்றம் என்ற உணர்வுகள் குடும்பத்தை உலுக்கின. இறுதியில், அவருடைய அண்ணன் கடன்களை அடைத்து, அவரது வங்கி அட்டையை வாங்கி வைத்துக்கொண்டார்.

தமக்கே விதித்துக்கொண்ட தடை

தம் சூதாட்டப் பழக்கத்தை ஒழித்துக் கட்டும் தீர்மானத்துடன் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் உதவியை நாடினார் திரு ஆரோக்கியசாமி. அதன்வழி, சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றத்தின் (என்சிபிஜி) இணையத்தளம்வழி சூதாட்டக்கூடத்திற்குச் செல்லத் தமக்கே தடை விதித்துக்கொண்டார் அவர்.

இதனால், தாமாகத் தடையை அகற்ற விண்ணப்பிக்கும்வரை, அவரால் சூதாட்டக்கூடத்திற்குள் நுழைய முடியாது.

வாழ்வில் புதிய அத்தியாயம்

சூதாட்டத்தை விட்ட பிறகு, இன்று நல்ல நிலையில் இருக்கிறார் திரு ஆரோக்கியசாமி.

“அப்பொழுது எனக்குப் பணத்தின் மதிப்பு தெரியவில்லை. இன்றோ நான் என் குடும்பத்துக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்புகிறேன். சம்பளம் போட்டு 15 நாள்கள் ஆகியும் 350 வெள்ளி கையில் தங்குகிறது. அப்பொழுது நான் இழந்த மதிப்பை இப்பொழுது திரும்பப் பெற்றுள்ளேன்,” என்றார் அவர்.

இருந்தாலும், தமக்குப் பணம் கொடுத்தவர் ஒருவருடன் தொடர்பு அறுந்துவிட்டதால் இன்றும் அக்கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அவர் வருந்துகிறார்.

10 விழுக்காட்டினருக்குச் சூதாட்டத் தடை

சூதாட்டம் என்பது இவர் ஒருவரை மட்டும் பாதிக்கவில்லை. இவ்வாறு சூதாட்டப் பிரச்சினைக்கு ஆளாகியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பலர் உள்ளனர்.

“டிசம்பர் 31, 2023 தரவின்படி, தற்போது பணியாற்றும் 155,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் சூதாட்டக்கூடத்திலிருந்து தங்களையே தடைசெய்துள்ளனர்,” என்றார் ‘என்சிபிஜி’ தலைவர் சிம் கிம் குவான். சிங்கப்பூரில் பணியாற்றும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் இது பத்து விழுக்காடாகும்.

சூதாட்டத்திலிருந்து காக்கும் முயற்சி

ஆனால், சூதாட்டக்கூடத்திலிருந்து தடைசெய்வது ஒன்றே தீர்வல்ல என்றார், திரு ஆரோக்கியசாமியைப் போல் சூதாட்ட வலையில் சிக்கிய மற்றொரு வெளிநாட்டு ஊழியர் இளங்கோவன் சுப்பையா, 39.

“சுயக் கட்டுப்பாடு நம்மிடத்தில் இருக்கவேண்டும்,” என்றார் அவர். தமக்குத் தெரிந்த ஒருவர் சூதாட்டத்தினால் நிலத்தையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் தாமே ஒரே நாளில் சூதாடி 1,600 வெள்ளியை இழந்ததாகவும் கூறினார்.

டிசம்பர் 31, 2023 அளவில், தற்போது பணியாற்றும் 155,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் சூதாட்டக்கூடத்திலிருந்து தம்மையே தடைசெய்துள்ளனர்.
‘என்சிபிஜி’ தலைவர் சிம் கிம் குவான்

“சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் போல் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சூதாட்டக்கூடத்திற்கு 50 வெள்ளி நுழைவுச்சீட்டு வைத்தால் இத்தகைய பிரச்சினைகளைக் குறைக்கலாம்,” எனப் பரிந்துரைத்தார் திரு சுப்பையா. தற்போது, சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சூதாட்டக்கூடத்தினுள் செல்ல நாளுக்கு 150 வெள்ளி, ஆண்டுக்கு 3,000 வெள்ளி கட்டணம். வெளிநாட்டவருக்கு இலவசம்.

தற்போது வெளிநாட்டவர் இலவசமாகச் சூதாட்டக்கூடத்தினுள் நுழையலாம்.
தற்போது வெளிநாட்டவர் இலவசமாகச் சூதாட்டக்கூடத்தினுள் நுழையலாம். - படம்: சாவ்பாவ்

இதுகுறித்து ‘என்சிபிஜி’ தலைவர் சிம், “பொதுவாக உள்ளூர் மக்களைச் சூதாட்டத்தின் எதிர்விளைவுகளிலிருந்து காப்பதற்கே சூதாட்டக்கூட நுழைவுக் கட்டணம் போன்ற பாதுகாப்பு உத்திகளை வைத்துள்ளோம். ஆனால், இது வெளிநாட்டு ஊழியர்களையும் பாதிப்பதை நாங்கள் அறிவோம்.

“அதனால்தான் நாங்கள் (என்சிபிஜி) மனிதவள அமைச்சு, வெளிநாட்டு ஊழியர் நிலையம், நிறுவனங்கள், தங்குமிடங்களுடன் இணைந்து இப்பிரச்சினைகள் குறித்து ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தி, சூதாட்டக்கூடத்திலிருந்து தம்மையே தடைசெய்ய ஊக்குவிக்கிறோம். நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் சார்பில் விண்ணப்பிக்கலாம்,” என்றார்.

மனிதவள அமைச்சும் அதன் ‘ஏஸ்’ குழு வழி, பலதரப்பினருடன் இணைந்து நிதி நிர்வாகம், சூதாட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்றவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதாகக் கூறுகிறது. ‘ஏஜிடபுள்யுஓ’ வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழு போன்ற லாப நோக்கற்ற அமைப்புகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களிலும் அமைச்சு பயிலரங்குகளை நடத்திவருகிறது.

சூதாட்டப் பழக்கத்தைக் கைவிட உதவி நாடுவோர் ‘என்சிபிஜி’ உதவி எண்ணை (1800-6-668-668) அழைக்கலாம்.

https://www.ncpg.org.sg/ இணையத்தளம் வழி சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் சூதாட்டக்கூடங்கள், ‘சிங்கப்பூர் பூல்ஸ்’ இணையச் சூதாட்டம் போன்றவற்றிலிருந்து தங்களுக்கே தடை விதித்துக்கொள்ளலாம்.

ரிசார்ட்ஸ் வர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூடம்.
ரிசார்ட்ஸ் வர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்