சண்டைபோட்டு தன்னம்பிக்கை வளர்த்த தாரிக்

சண்டைபோட்டு தன்னம்பிக்கை வளர்த்த தாரிக்

3 mins read
சிறுவயதிலிருந்து தாத்தாவுடன் பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலியின் சண்டைகளைப் பார்த்து வளர்ந்திருந்த தாரிக் அஸீஸிற்கு, அண்டைவீட்டுக்காரரான பாலா விடுமுறையில் குத்துச்சண்டை பழகலாமே என்று சொல்லும்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்படும்.
58e9d661-89e3-4043-8a43-03b5719cab96
தொழில்முறைக் குத்துச்சண்டைவீரராகக் கலந்துகொண்ட முதல் போட்டியில் 25 வயது தாரிக் அஸீஸ் வெற்றிபெற்றார். - படம்: ஃபியோனா லிம்
multi-img1 of 2

முன்னாள் தேசிய குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளார் பாலாவின் யூ2கேன் குத்துச்சண்டை பயிற்சிக்கூடத்தில் 2012ல் உயர்நிலை ஒன்று படிக்கும்போது விடுமுறையில் குத்துச் சண்டை பழகத் தொடங்கினார்.

மாதம் $50 கட்டணம் செலுத்த பள்ளிச்செலவுக்கு பெற்றோர் அன்றாடம் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடிப்பார். சில நேரங்களில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார். கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் தாரிக் மற்ற பயிற்சிக்கூடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தன் மாணவரின் திறனைக் கண்ட திரு பாலா, பின்னர் அவரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.

அப்படி விளையாட்டாக தொடங்கிய பயிற்சி தாரிக் அஸீஸை இன்று தொழில்முறை குத்துச் சண்டை வீரராக்கியுள்ளது. குத்துச்சண்டையில் 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் 25 வயது தாரிக் அஸீஸ், இதுவரையில் ஏறக்குறைய 30 சண்டைகளில் பங்கேற்றுள்ளார்.

தேசிய அணியில் இடம்பெற்றிருந்த தாரிக், ஏஎஸ்பிசி ஆசிய சம்மேளன இளையர் குத்துச்சண்டைப் போட்டிகள் போன்றவற்றில் 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளார்.

எனினும் தொழில்முறை சண்டைகளில் பங்கேற்பது சற்று பதற்றமாக இருந்தாலும் புதிய சவால் அவரை மேலும் துடிப்பானவராக்கி உள்ளது.

பிரதர்ஸ் பாக்ஸிங் புரொமோஷன்ஸ், லெயெண்டாஸ் புரொமோஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஃபூச்செளவ் கட்டடத்தில் நடத்திய ‘டெஸ்ட் ஆஃப் சேம்பியன்ஸ்’ போட்டிகளில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக அவர் தன் முதல் வெற்றியைச் சுவைத்தார்.

இந்தோனீசியாவின் ஜோஹான் சிகலிங்கிங் எனும் குத்துச்சண்டை வீரருடன் 60 கிலோ பிரிவில் அவர் நான்கு மூன்று நிமிடச் சுற்றுகளில் மோதி வெற்றி பெற்றார்.

60 கிலோ பிரிவில், இந்தோனீசியாவின் யோஹான் சிகலிங்கிங் எனும் குத்துச்சண்டை வீரரை நான்கு சுற்றுகளில் மோதித் தோற்கடித்தார் தாரிக்.
60 கிலோ பிரிவில், இந்தோனீசியாவின் யோஹான் சிகலிங்கிங் எனும் குத்துச்சண்டை வீரரை நான்கு சுற்றுகளில் மோதித் தோற்கடித்தார் தாரிக். - படம்: ஃபியோனா லிம்

இப்போட்டிக்காக நான்கு மாதங்களாக வாரத்துக்கு ஐந்துமுறை, மூன்று மணி நேரம் தாரிக் பயிற்சி செய்தார்.

“ஆட்டம் தொடங்குவதற்குமுன் எனக்குச் சற்று பதற்றமாகத்தான் இருந்தது. எனினும், தன்னம்பிக்கையோடு களத்தில் இறங்கினேன்,” என்றார் தாரிக்.

பள்ளி நாள்களில் ஒழுங்குமுறைப் பிரச்சினைகளில் அடிக்கடி மாட்டிக்கொண்டதைக் குறிப்பிட்ட தாரிக், வாழ்க்கையின் திசையைத் தனக்குக் காட்டியது குத்துச்சண்டைதான் என்றார்.

“தன்னம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றைக் குத்துச்சண்டைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது. இப்போது என் வாழ்க்கைமுறையோடு குத்துச்சண்டை ஒன்றிவிட்டது,” என்றார் அவர்.

“உடல்நலக் குறைவால் திரு பாலா 2018ல் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பதை நிறுத்திவிட்டார். என்றாலும், 2022ல் அவர் உயிரிழக்கும் வரையில் அவரை அடிக்கடி சென்று சந்திப்பேன். என்றும் எனக்கு ஆதரவும் உற்சாகமும் தருபவர் அவர்,” என்று தமது குருவை நினைவுகூர்ந்தார் தாரிக்.

தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக முறையான அனுபவம், திறன்கள், பயிற்றுவிப்பாளர்கள் இருக்கவேண்டும் என்று தாரிக் கூறினார்.

“வளர்ந்துவரும் குத்துச்சண்டை வீரர் மூன்று மூன்று-நிமிடச் சுற்றுகளில்தான் போட்டியிடுவார். தொழில்முறைக் குத்துச்சண்டை வீரரோ நான்கு முதல் 12 மூன்று-நிமிடச் சுற்றுகள் வரை போட்டியிட வேண்டும்,” என்றார் தாரிக்.

‘ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன’

“ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் ஒரே ஒரு குத்துச்சண்டைப் போட்டிதான் நடத்தப்பட்டு வந்தது. திறனைக் காட்ட அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. தற்போது வளர்ந்துவரும் குத்துச்சண்டை வீரர்கள் ஆண்டுக்குப் பத்துப் போட்டிகளில் போட்டியிடுகின்றனர்,” என்றார் தாரிக்.

“குத்துச்சண்டையில் சேர சிறுவயதில் அஞ்சினேன்; குத்துச்சண்டையை வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுப்பேன் என எண்ணவே இல்லை,” என்ற தாரிக், குத்துச்சண்டை பயில பல இளையர்கள் முன்வர வேண்டும் என்று கூறினார். இத்துறையில் வாய்ப்புகளும் ஆதரவும் தற்போது அதிகரித்து இருப்பதாக சொன்னார் பகுதிநேரக் குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றும் தாரிக்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழில்கல்லூரியில் வணிகத் துறையில் பட்டயப் படிப்பை முடித்திருக்கும் தாரிக், குத்துச்சண்டையையும் ஒரு வணிகமாகவே பார்க்கிறார். போட்டிகளுக்கு ஆதரவாளர்களைக் தேடுவதிலும் போட்டிகளை நடத்துவதிலும் வணிகத் திறனுடன் செயல்படும்போதே வெற்றிபெற முடியும் என்று தாரிக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்