ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவி அவர்களுக்கு ஓர் இனிமையான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டுமென்ற முனைப்பு ஹேமாவதி சந்திரனுக்கு இளம் வயதிலிருந்தே இருந்து வந்தது.
அதேபோன்ற எண்ணத்துடன் இருப்பவர் ஹேமாவதியின் கணவர் அங்கபிரதச்சனன். இருவரும் அண்மையில் எட்டு மாதப் பெண் குழந்தையை வளர்க்கத் தொடங்கினர்.
சிங்கப்பூரில் ஜூன் 29ஆம் தேதி வரை தேசிய குடும்ப விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஹேமாவதி, அங்கபிரதச்சனன் தம்பதியினரின் வளர்ப்புப் பெற்றோர் கதையை இப்பதிவு காண்கிறது.
அங்கபிரதச்சனன் பள்ளிப் பருவத்தில் இருந்தபோது பராமரிப்பற்ற சிறுவன் ஒருவனைக் கண்டார். அச்சிறுவனைக் கண்ட காட்சி இன்னும் அவர் மனக்கண் முன் நிற்கிறது.
உலகில் இன்னும் அந்தச் சிறுவனைப்போல எத்தனையோ பிள்ளைகள் சிரமமான பின்னணிகளில் உள்ளனர் என்று நினைத்த இத்தம்பதி, தொடக்கத்தில் ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க எண்ணினர்.
“எதேச்சையாக ஒருமுறை இணையத்தில் வளர்ப்புப் பெற்றோர் விளம்பரம் ஒன்றைக் கண்டோம். அப்போது ஏன் ஒரு பிள்ளையை வளர்க்கக் கூடாது என நாங்கள் முடிவெடுத்தோம்,” என்று சொன்னார் ஹேமாவதி.
வளர்ப்புப் பெற்றோராவதற்கான பயிற்சியை மேற்கொண்ட பின்னர் இருவரும் எட்டு மாதக் குழ்நதை வரவேற்றனர்.
“முதலில் நாங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்க்கவில்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட பிள்ளையை வளர்க்கத்தான் விரும்பினோம். எட்டு மாதக் குழந்தை இருப்பதாகக் கேள்விப்பட்டவுடன் இருவரும் சம்மதித்தோம்,” என்றார் ஹேமாவதி.
தொடர்புடைய செய்திகள்
இவர்களின் வாழ்க்கைக்குள் வந்த அக்குழந்தை எண்ணற்ற அனுபவங்களை அள்ளித் தந்துள்ளது.
குழந்தையுடன் நேரம் செலவிட்டு, அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ளும் இருவரும் அக்குழந்தை தங்களைப் பெற்றோராக்கியதை நினைத்து நெகிழிந்தனர்.
“குழந்தை வளர்ப்பதற்கு முன்னர், எங்கள் பொறுப்புகளில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தோம். இப்போது குழந்தை எங்கள் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டாள்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் ஹேமாவதி.
அண்மையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய ஹேமாவதி, தனது தாய்மைப் பயணம் வாழ்க்கைக்குப் பேரளவில் மாற்றங்களைத் தந்துள்ளதாகச் சொன்னார்.
பலர் வளர்ப்புப் பிள்ளைகள் என்றாலே அவர்கள் மோசமான பின்னணிகளிலிருந்து வருபவர்கள் என்ற தவறான எண்ணம் கொண்டுள்ளதாகக் கருதும் ஹேமாவதி, இது மாற வேண்டும் என்கிறார்.
கூடிய விரைவில் குழந்தை தங்களிடமிருந்து விடைபெறப்போவதாக உணர்ச்சிபொங்கச் சொன்ன ஹேமாவதி, தானும் தன் கணவரும் இன்னும் அதிகமான பிள்ளைகளை வளர்க்க விரும்புவதாகக் கூறினார்.
இளம் தம்பதிகள் வளர்ப்புப் பெற்றோராக விரும்பினால் உணர்வுபூர்வ சவாலுக்குத் தயாராகிக்கொள்ள வேண்டும் என்றார் ஹேமாவதி.