அளவுகடந்த அன்பையும் அரவணைப்பையும் தங்கள் 14 வயது வளர்ப்பு மகள் கதீஜாவுக்கு (உண்மைப் பெயரல்ல) வாரி வழங்குகின்றனர் அகமது மரைக்காயர், ரோசியா தம்பதியர்.
“என் மனைவி முழுநேரக் குடும்பத் தலைவி. அவருக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்களுடைய இரு மகள்களுடன் கதீஜாவையும் வளர்க்க அவர் விரும்பினார்,” என்றார் திரு அகமது, 66.
ஒரு மாதக் குழந்தையிலிருந்து கதீஜாவை வளர்த்து வருகின்றனர் இத்தம்பதியர். பிள்ளை வளர்ப்பில் தங்கள் சொந்த மகள்களுக்கும் வளர்ப்பு மகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்கின்றனர்.
தங்களது குடும்பச் சூழலால் கதீஜா வாழ்வில் வெற்றி பெறுவார் என இருவரும் உறுதியாக நம்புகின்றனர்.
கல்வியில் மட்டுமன்றி தற்காப்புக் கலைகளிலும் சிறந்து விளங்குகிறார் கதீஜா. கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) கண்டறியப்பட்டபோதும், விருப்பமான காரியங்களில் சிறந்து விளங்க அவரது மீள்திறன் ஊக்குவித்தது.
தொடக்கப்பள்ளிக் காலத்திலேயே தற்காப்புக் கலைகள் கற்பதில் ஆர்வம் இருந்ததால், ‘வூஷு’ எனும் சீனப் பாரம்பரிய தற்காப்புக் கலையைப் பயின்றார்.
உயர்நிலைப்பள்ளியில் ‘டேக்வாண்டோ’வில் இணைந்தார் கதீஜா. பள்ளிகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியின் ‘சி’ பிரிவில் தொடர்ந்து ஈராண்டுகளாகத் தனது பள்ளியை இவர் பிரதிநிதித்தார்.
இவ்வாண்டின் வளர்ப்புக் குழந்தைகள், இளையர்களுக்கான விருது வழங்கும் விழாவில் விளையாட்டு, கலைத்துறை சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் விளையாட்டு நிர்வாகம் பயிலும் கனவுடன் இவர் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விருது கிடைத்துள்ளது பெருமை எனச் சொன்ன கதீஜா, “என்னை வளர்க்கும் பெற்றோர் மிகவும் கனிவானவர்கள். அவர்களின்றி நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது,” என்றார்.
தாம் ஒரு வளர்ப்பு மகள் என்ற எண்ணம் தமக்கு ஒருபோதும் ஏற்படாதவாறு தம் குடும்பம் தம்மைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார் கதீஜா.
அண்மையில் குடும்பத்துடன் இலங்கைக்குச் சென்றது குறித்து பேசிய அவர், அடுத்தடுத்த குடும்ப சுற்றுலா பயணங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.
“தத்தெடுத்து வளர்ப்பதும் வளர்ப்புக் குழந்தைகளை அரவணைப்பதும் ஒன்று எனப் பெரும்பாலானோர் நினைப்பதாகக் கருதிய திரு அகமது, இதுகுறித்த புரிதல் மேம்பட வேண்டும்,” என்றார்.
“கடினமான சூழல் கொண்ட குழந்தைகளுக்கு அன்பான சூழலை அமைத்துத் தருவது உன்னதம். இதனைச் செய்ய மேலும் பலர் முன்வரவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“வளர்ப்புப் பிள்ளைகள் என்றாவது ஒருநாள் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்து எங்களைப் பிரிந்து செல்வார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது,” என்று கலங்கிய திரு அகமது, அதிகாரிகள், அமைச்சுகளின் ஆதரவுடன் தம்மால் இயன்ற சிறந்த சூழலை கதீஜாவுக்கு அமைத்துக் கொடுக்க இந்த வாய்ப்பு கிடைத்தது மனநிறைவு தருவதாகச் சொன்னார்.
அதற்குச் சான்றாக கதீஜா சிறந்து விளங்குவதும் விருதுகள் பெறுவதும் பெருமையளிக்கின்றன என்றார் திருவாட்டி ரோசியா, 61.
வளர்ப்புக் குழந்தைகள், இளையர்களுக்கு விருது விழா
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சார்பில் கல்வி, இணைப்பாட நடவடிக்கைகள், கலை, விளையாட்டு எனப் பல துறைகளில் சிறந்து விளங்கும் வளர்ப்புப் பிள்ளைகளுக்கான விருது விழா நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இவ்விழாவில் மொத்தம் 32 சிறுவர்களும் இளையர்களும் விருது பெற்றனர்.
“வளர்ப்புப் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு உள்ளிட்டவற்றின் நீண்டகால நேர்மறைத் தாக்கம் அளப்பரியது. அவர்கள் கற்றுத்தரும் நன்மதிப்பு குழந்தைகளின் வாழ்வில் மிளிர்ந்து அவர்களை நல்ல முறையில் வழிநடத்தும்,” என்றார் திரு சுவா.