சிங்கப்பூரில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல்நலத்தை இலவசமாகப் பரிசோதனை செய்ய வழிவகுத்தது, ஞாயிற்றுக்கிழமை ஜூலை 20ஆம் தேதியன்று இந்து அறக்கட்டளை வாரியம், மீடியாகார்ப் இணைந்து நடத்திய வருடாந்தர சுகாதார விழா.
ஆண்களின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் வழங்கியது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பி. கோவிந்தசாமிப் பிள்ளை (பிஜிபி) மண்டபத்தில் காலை முதல் நண்பகல் வரை நடைபெற்ற சுகாதார விழா.
ஆண் சுரப்பி (புரோஸ்டேட்) புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், சிறுநீர்க் கட்டுப்பாட்டின்மை, இடுப்புத் தசை (pelvic floor) கோளாறுகள் போன்றவற்றைக் கண்டறியும் முறைகள் பற்றியும் அதற்கான சிகிச்சைகள் பற்றியும் அதற்கென அமைக்கப்பட்டிருந்த தனிக் கூடத்தில் மக்கள் அறிந்துகொண்டனர்.
“சிங்கப்பூர் மூப்படையும் சமுதாயம் என்பதால், நாளடைவில் இத்தகைய புற்றுநோய்களின் பரவல் இங்கு அதிகரிக்கும். இந்திய சமூகத்தினர் - குறிப்பாக அதிகமாக வெளியில் வராதவர்கள் - இவற்றைப் பற்றி அறிந்துகொள்வது முக்கியம்,” என்று கூறினார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
“இந்த உடல்நலப் பரிசோதனைகளால் தற்போது ஆண்டுக்கு 500 முதல் 800 பேர்வரை பயனடைகின்றனர். அமைதியான உயிர்க்கொல்லிகளான உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு போன்ற பிரச்சினைகளை இத்தகைய பரிசோதனைகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் மருத்துவ ஆதரவுச் சேவையின் தலைவர் டாக்டர் எல் ஜெயராம்.
“உடல்நலப் பரிசோதனைகளுக்கு வருவோரில் 5 முதல் 10 விழுக்காட்டினர் வரை தங்களுக்கு நோய் இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர். அதற்கு முறையான சிகிச்சையை அவர்கள் பலதுறை மருந்தகம்வழி நாடலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவமனைகள், நிபுணத்துவ மருந்தகங்கள், சுகாதார அமைப்புகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையினர் சுகாதார விழாவில் தொண்டாற்றினர்.
பிஜிபி மண்டபத்தின் முதல் மாடியில் கண், பல், கை, கால், பாதம் எனப் பலதரப்பட்ட பரிசோதனைகளை மக்கள் மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளைச் சுயமாகக் கண்டறிவது, கீழே விழும் அபாயத்தைக் குறைப்பது, உடற்பயிற்சி மூலம் கைகால் தசைகளை வலுப்படுத்துவது போன்ற உடல்நலம் பேணும் வழிமுறைகளை அவர்கள் தெரிந்துகொண்டனர்.
மேல்மாடியில் ‘சாட்டா காம்ஹெல்த்’ அமைப்பு ரத்தச் சோதனையை நடத்தியது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘சில்வர் ஸ்கிரீன்’ திட்டம் வழி 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு கண், காது, வாய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றுக்குத் தகுதிபெற அப்பரிசோதனையை ஓராண்டுக்குச் செய்திருக்கக்கூடாது.
“மருத்துவமனையில் காத்திருப்பு நேரம் அதிகம். ஆனால் இங்கு மிக விரைவாக ஒவ்வொரு கூடத்துக்கும் சென்று பரிசோதனை செய்யமுடிந்தது. தகவல்களைத் தமிழிலும் மொழிபெயர்த்துக் கூறினார்கள்,” எனப் பாராட்டினார் ரமேஷ் மாரிமுத்து, 57.
“கை, கால்களைத் தூக்க ஊக்குவிக்கும் விளையாட்டு மிகவும் பயனுள்ளதாக இருந்தது,” என்றார் சகுந்தலா ராஜு, 73.
“பல் மருத்துவர்கள் மிகவும் சிறப்பாகப் பரிசோதனை செய்தார்கள். அனைவரும் மிகவும் பணிவன்புடன் தங்கள் கடமையைச் செய்தனர்,” என்றனர் பாக்கியநாதன் - வினோதா இணையர்.
வந்திருந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
1990களில் மாரியம்மன் கோவிலில் ஒரு சுகாதாரத் தொண்டூழியர்க் குழு இந்தியர்களுக்கு வழங்கிய மாதாந்தர மருத்துவ ஆலோசனையாகத் தொடங்கிய இப்பரிசோதனை நிகழ்வு, தற்போது பெரிய அளவில் ஆண்டுதோறும் இடம்பெறுகிறது.