தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கென்யாவின் இந்தியக் கலாசாரத்தை உணரவைத்த நட்புப்பயணம்

3 mins read
6788452a-93b9-4adb-a37c-45d5a3ac2246
தோழி மெஹெக்குடனும் (வலமிருந்து 2வது) இதர செய்தியாளர்களுடனும் சிங்கப்பூரிலிருந்து இந்தியா சென்றிருந்த தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா (இடமிருந்து 2வது). - படம்: அனுஷா செல்வமணி

கென்யாவில் இந்தியத் திருமணங்களில் ஆப்பிரிக்கப் பாடல்களும் இசைக்கப்படும் என்ற தகவலை என் தோழி பகிர்ந்துகொண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதுவரை வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் இந்திய பாடல்கள்தான் ஒலிக்கும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குப் பரந்த ஒரு பார்வையை அண்மையில் நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ‘நோ இந்தியா புரோகிராம்’ எனும் திட்டத்தின் 79வது சந்திப்பில் கலந்துகொண்ட எனக்கு, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இதர நாடுகளிலிருக்கும் செய்தியாளர்களை இந்தியாவில் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது.

அதில் கென்யாவைச் சேர்ந்த மெஹெக் தகர் எனும் 24 வயதுடைய பெண்ணுடன் நெருங்கிய நட்பை நான் வளர்த்துக்கொண்டதுடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்துகொண்டேன்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் வசித்து வரும் மெஹெக், மார்வாடி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாட்டி நைரோபியில் பிறந்து வளர்ந்ததாகக் கூறிய மெஹெக், தம்முடைய குடும்பத்தினர் பல தலைமுறைகளாக கென்யாவில் இருப்பதாகச் சொன்னார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் பலர் இன்னும் இந்தியக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் ஆழமாகப் பின்பற்றி வருகின்றனர். அதேபோல், கென்யாவிலும் அத்தகைய பழக்கம் தொடர்கிறது என்று நான் அறிந்து வியந்து போனேன்.

கென்யாவில் இந்தியர்கள் பெரும்பாலும் குஜராத்திகள் என்று கூறிய மெஹெக், அங்கு இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் பலர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் என்றார். தம் தந்தை மருந்துவகை தொழிலில் உள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தி இனத்தவர்களுக்கு அப்பாற்பட்டு தமிழ், மலையாளம், சீக்கியர்கள் ஆகியோரும் கென்யாவில் இருப்பதாகக் கூறிய மெஹெக் அங்கு இந்தியர்கள் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து ஆதரவளிப்பதாகப் பெருமிதத்துடன் கூறினார்.

“கென்யாவில் வளர்ந்தாலும் நான் ஓர் இந்தியராகத்தான் வளர்ந்தேன். அங்கு வேறுபாடில்லை. நமது கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எனக்கு அது வினோதமாகத் தெரியவில்லை,” என்றார் மெஹெக்.

இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி, ஹோலி, நவராத்திரி போன்ற அனைத்துப் பண்டிகைகளும் அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் என்ற மெஹெக், கென்யா அரசாங்கம் இந்தியர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குப் பட்டாசு வெடிக்க இரண்டு நாள்கள் அனுமதி அளித்ததாகக் கூறினார்.

“ஹோலி பண்டிகையின்போது பெரிய திறந்தவெளியில் பல உணவுச் சாவடிகள் அமைக்கப்படும். வண்ணங்கள் வைத்து விளையாடி நாங்கள் பண்டிகை உணர்வில் திளைப்போம்,” என்று மெஹெக் சொன்னார்.

ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் சுவாஹிலி மொழியைக் கரைத்து குடித்திருக்கும் மெஹெக், ஆப்பிரிக்க கலாசாரத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

“ஆப்பிரிக்க இசை, நடனம் எங்களுக்குப் பேரளவில் உற்சாகமூட்டும். எங்கள் திருமணங்களில்கூட நாங்கள் ஆப்பிரிக்க இசைக்கு நடனமாடுவோம்,” என்று மெஹெக் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க உணவுக்கும் இந்திய உணவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளதாகச் சொன்ன மெஹெக், இந்திய உணவில் இருக்கும் பஜ்ஜி, சமோசா போல ஆப்பிரிக்க உணவுக் கலாசாரத்திலும் அத்தகைய உணவுவகைகள் இருப்பதாகக் கூறினார்.

“எனக்கு மொக்கிமோ எனும் ஆப்பிரிக்க உணவு பிடிக்கும். கிழங்கு, பூசணிக்காய் இலை, பட்டாணி ஆகியவற்றை நன்கு பிசைந்து செய்யப்படும் உணவு அது,” என்றார் மெஹெக்.

பலர் காதல் திருமணங்கள் செய்துகொண்டாலும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அங்கு இன்னும் அதிகமாக நடப்பதாகச் சொன்னார் மெஹெக். ஒரு சிலர் இந்தியாவிற்கு வந்து திருமணம் செய்வதாகவும் அவர் கூறினார். இதற்குக் காரணம் அவர்களின் பாரம்பரியம் விட்டுப்போய்விடக்கூடாது என்பதுதான் என்றார் மெஹெக்.

கென்யாவில் வாழ்ந்தாலும் இந்தியக் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதற்குக் காரணம் தம் குடும்பத்தினர் என்று கூறிய மெஹெக், தமது வீட்டில் இந்தியக் கலாசாரக் கூறுகள் பற்றி அடிக்கடி வலியுறுத்தப்படும் என்றார்.

“கோவில்கள், குருத்வாரா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல் போன்றவற்றில் நாங்கள் அதிகம் ஈடுபட்டு வருவதால் இந்தியக் கலாசாரம் என் ரத்தத்தில் ஊறிவிட்டது. நானும் இந்தியாவிற்கு ஐந்து முறை சென்று என் உறவினர்களைச் சந்தித்துள்ளேன்,” என்றார் மெஹெக்.

இந்தப் பயணத்தின்போது ஃபிஜியிலிருந்து வந்தவர்களையும் நான் சந்தித்தேன். அவர்களிடம் உரையாடிய பிறகுதான் ஃபிஜி நாட்டில் இருக்கும் இந்தியர்களில் சிலர் வளர்ச்சியடையாத இடங்களில் வசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

அடிக்கடி நிகழும் இயற்கைப் பேரிடர்களால் அங்கு மின்சாரத் தடைப்பாடு, வெள்ளம் போன்ற இன்னல்களை அவர்கள் பலமுறை சந்திப்பதை அறிந்துகொண்டேன்.

மொத்தத்தில் நான் மேற்கொண்ட இந்த வெளிநாட்டுப் பயணம், ஒரு செய்தியாளராக, ஒரு பெண்ணாக, ஓர் இந்தியராக, ஒரு சிங்கப்பூரராக எனது அடையாளத்தை வலுவாக்கியுள்ளது என்ற உணர்வே என்னுள் மேலோங்கியுள்ளது.

கென்யாவில் வளர்ந்தாலும் நான் ஓர் இந்தியராகத்தான் வளர்ந்தேன். அங்கு வேறுபாடில்லை. நமது கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எனக்கு அது வினோதமாகத் தெரியவில்லை.
கென்யாவைச் சேர்ந்த மெஹெக் தகர், 24
குறிப்புச் சொற்கள்