உண்ணக்கூடிய பூக்களில் நிறைந்துள்ளது சுவை

2 mins read
ece115a8-204d-4640-9f5b-233be74dac34
உண்ணக்கூடிய பூக்களைக் கொண்டு பல உணவுகளைத் தயாரிக்கலாம். - படம்: ஃபிரீபிக்ஸ்

அலங்காரமாக ஜாடிகளில் வைப்பதற்கு மட்டும் பூக்கள் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.

உண்ணக்கூடிய (edible) பூக்கள், உணவக சமையல் கலைஞர்களுக்கும் வீட்டில் சமைப்பவர்களுக்கும் புதிய விருப்ப தெரிவாக மாறி வருகின்றன.

அவை சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானவை என்பது உறுதிசெய்வது முக்கியம். சாலட் வகைகளை அலங்கரிப்பது, சுவையூட்டப்பட்ட சர்க்கரைப் பாகில் சேர்ப்பது எனப் பல வகைகளில் இவ்வகைப் பூக்களைச் சமையலில் பயன்படுத்தலாம்.

குளிர்பானத்தை அழகாகப் பரிமாற, பூக்கள் நிறைந்த ஐஸ் கட்டிகளைப் பானத்தில் சேர்க்கலாம்.

இனிப்புப் பண்டங்களுக்கு அழகு சேர்க்கப் பூக்களால் அலங்கரிக்கலாம். ஊதாப்பூ, சாமந்திப் பூக்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு உணவிற்கு லேசான இனிப்பையும் சேர்க்கின்றன.

ரோஜா இதழ்களும் இனிப்புச் சுவைக்கு மேலும் மெருகூட்டுகின்றன. சாலட்கள், உண்ணக்கூடிய பூக்களைக்கொண்டு பார்வைக்கும் சுவை ரீதியாகவும் கலைவண்ணம் படைக்கலாம்.

‘நாஸ்டர்டியம்’, ‘பான்சி’, சாமந்தி போன்ற உண்ணக்கூடிய பூக்களின் இயற்கையான வண்ணங்கள் அவற்றின் மெல்லிய, தனித்துவமான சுவைகளுடன் இணைந்து ஒரு சாதாரண சாலட்டை சுவை மிகுந்ததாக மாற்றுகின்றன.

புத்துணர்ச்சியூட்டும் ‘காக்டெயில்’ முதல் இதமான தேநீர்வரை அனைத்திலும் மெல்லிய நறுமணத்தையும், மிதமான இனிப்பையும் சேர்க்க, பூக்கள் சேர்த்த சர்க்கரைப் பாகு அருமையான வழியாகும்.

பூக்களின் மணம் ஊட்டிய வெண்ணெய் ஒருவரின் உணவில் பூக்களின் சுவையை மிக மென்மையாகச் சேர்க்க சிறந்த வழியாகும்.

லாவெண்டரின் மெல்லிய இனிப்புச் சுவை, மன அமைதி தரும் நறுமணத்தினால், வெண்ணெய்க்குச் சுவையூட்ட அது சிறந்த தேர்வாகும்.

கூடுதல் இனிப்புச் சுவைக்காகவும் ஒருவர் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சைத் தோல் துருவலைச் சேர்க்கலாம்.

இந்த லாவெண்டர் வெண்ணெய்யைச் சூடான ரொட்டி, ‘பான்கேக்’ போன்றவற்றில் தடவலாம் அல்லது வறுத்த காய்கறிகளின் மேல் தூவலாம்.

ரோஜாவின் நறுமணத்தையும், லேசான துவர்ப்புச் சுவையையும் விரும்புவோருக்கு ரோஜா இதழ் ஜாம் சிறந்த தேர்வாகும்.

இது மிகவும் மெல்லிய இனிப்பும் நறுமணமும் கொண்டிருப்பதால் ‘ஸ்கோன்’, ‘குரோசான்’ அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

உண்ணக்கூடிய பூக்களைக் கொண்டு ‘பேக்கிங்’கும் செய்யலாம். ‘மஃபின்’, ‘கேக்’ அல்லது ‘குக்கீ’ போன்றவற்றில் உண்ணக்கூடிய பூக்களைச் சேர்த்துச் சமைப்பது அத்தகைய உணவுகளில் பூக்களைப் பயன்படுத்தும் வழிகளில் ஒன்றாகும்.

ஒரு ‘காக்டெயிலை’ மதுபானம் என்ற நிலையைத் தாண்டி மிகச் சிறப்பான பானமாக பூக்களைக் கொண்டு மாற்ற முடியும்.

‘காக்டெயில்’ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பூக்களில் மக்கள் அதிகம் விரும்புவது செம்பருத்தி, எல்டர்ஃபிளவர், மல்லிகை ஆகிய மூன்றுமாகும்.

செம்பருத்தி, லாவெண்டர், ரோஜா இதழ்கள் போன்ற பூக்களை ‘ஸ்மூத்தி’களில் சேர்ப்பதன் மூலம் பூக்களின் சுவையும் ஆன்டிஆக்சிடென்ட்களும் நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கியமான பானத்தை தயாரிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்