மகிழ்ச்சி, இரக்கம், கனவு, அன்பு என நான்கு முக்கிய வாழ்வியல் கூறுகளைக் குழந்தைகளுக்குக் கலை நிறுவல்கள்மூலம் கற்பிக்கும் நோக்கில் ‘சில்ட்ரன்ஸ் பியனாலே’ மே 31ஆம் தேதி தொடங்கியது.
குழந்தைகளின் கற்பனைகளைத் தூண்டும் எட்டு வண்ணமயமான கலை நிறுவல்கள் தேசியக் கலைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளன.
இதனைக் கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் தொடங்கிவைத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் குழந்தைகளுக்கான இந்நிகழ்ச்சி, வேடிக்கையான, எளிதில் அணுகக்கூடிய கலைப்படைப்புகள் மூலம் கலைமீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, ‘நாளை நாங்கள் ஆக விரும்புவது…’ எனும் கருப்பொருளில் இந்த ‘பியானாலே’ அமைந்துள்ளது. முதன்முறையாகச் சிறு குழந்தைகளுக்கும் ஏற்ற வகையில் அவர்களது செவி, காட்சிப் புலன்களைத் தூண்டும் விதமான கலை நிறுவல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள கலை நிறுவல்கள் மழலையர் முதல் சிறார், உடற்குறையுள்ளோர் எனப் பல்வேறு தரப்பினரும் ரசித்துப் பார்வையிடும், பங்கேற்கும் வகையில் எளிதில் அணுகும் விதத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு கலைப்படைப்பும் கருப்பொருள் கலந்துரையாடல் நிலையிலேயே சிறுவர்களை ஈடுபடுத்தி அவர்களது நேரடி விளையாட்டு ஆர்வம், புலனாற்றல்கள், உரையாடல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டன.
“தேசியக் கலைக்கூடம் தனது பத்தாம் ஆண்டைக் கொண்டாடும் வேளையில், குடும்பத்தினரும் குழந்தைகளும் இணைந்து வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அர்த்தம் மிக்கது,” என்றார் தேசியக் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூஜீன் டான்.
தொடர்புடைய செய்திகள்
பெற்றோர், குடும்பம் எனப் பாதுகாப்பான கட்டமைப்பில் குழந்தைகள் தங்கள் வாழ்வைத் தொடங்குகின்றனர். தனியாக, எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்யும்போது அவை சிறப்பாக அமைய, சில முக்கிய மதிப்புகளை அவர்கள் மனங்களில் வலுவாக விதைப்பது அவசியம். அவற்றை இந்நிறுவல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது சிறப்பானது,” என்றார் அவர்.
கடந்த மே 1ஆம் தேதி, கொரியாவின் தேசிய நவீன, சமகாலக் கலை அரும்பொருளகம், ‘நாளை நாங்கள் ஆக விரும்புவது…’ எனும் கருப்பொருளை ஏற்று ‘பியனாலே’ அமைத்திருப்பது இந்நிகழ்ச்சியின் தாக்கம் சிங்கப்பூருக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளதைக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
கடந்த மே 31 முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை இக்கலை நிறுவல்கள் கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கண்காட்சிக்கான அனுமதி இலவசம்.
இக்கண்காட்சி முடிவடையும் வரை, நடனம், நடவடிக்கைகள், பயிலரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.