உல்லாசக் கப்பலான கெந்திங் டிரீம், மலேசியாவின் மலாக்காவுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 11) மேற்கொண்ட முதல் பயணத்தை ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் குரூசஸ் நிறுவனம் கொண்டாடியது.
மலாக்கா சுற்றுப்பயண அமைப்புடன் சேர்ந்து ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் குரூசஸ், மலாக்காவின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தது.
4,500 பேர் உல்லாசமாக செல்வதற்கு வசதியுடைய கெந்திங் டிரீம், வாரந்தோறும் இரண்டு நாள் சிங்கப்பூர்-மலாக்கா உல்லாசக் கப்பல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
Visit Melaka Year 2024 இயக்கத்தின் தூதரான அனைத்துலகப் பிரபலம் ஃபேன் பிங்பிங், மலாக்காவுக்கு முதல் கப்பல் பயணத்தை சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) தொடங்கி வைத்தார்.
“கெந்திங் டிரீம் உல்லாசக் கப்பல் இன்று மலாக்காவுக்குச் சென்றிருப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது. ஒரு சுற்றுலாத் தலமாக மலாக்காவில் பார்ப்பதற்கு ஏராளமான கண்கவர் இடங்கள் உள்ளன,” என்றார் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் குரூசஸ் நிறுவனத் தலைவர் மைக்கல் கோ.
“கெந்திங் டிரீம் கப்பலின் வருகை, மாநிலத்தின் சுற்றுப்பயணத் துறையை மெருகூட்டுவது மட்டுமின்றி அனைத்துலக உல்லாசக் கப்பல்களுக்கு முக்கிய இடமாக மலாக்கா விளங்குவதை உறுதிசெய்யும்,” என்று மலாக்கா முதல்வர் அப் ரவுஃப் யூசோ கூறினார்.
மலாக்கா சென்றவுடன் வாடிக்கையாளர்கள் கப்பலிலிருந்து இறங்கி, 15 நிமிட நடைப்பயணம் மேற்கொண்டு டச்சுக்காரர் சதுக்கம் (Dutch square), ஜான்க்கர் ஸ்த்ரீட் (Jonker street) உள்ளிட்ட பெயர்பெற்ற இடங்களுக்குச் செல்லலாம்.

