ராயல் கரீபியன் இன்டர்நேஷனலின் குவாண்டம் வகை சொகுசுக் கப்பல் ‘ஒவேஷன் ஆஃப் தி சீஸ்’ சிங்கப்பூருக்கு இரண்டாம் முறையாக வந்துள்ளது. தீபாவளியன்று இது சிங்கப்பூர் வந்துசேர்ந்தது.
2026 மார்ச் வரை இது சிங்கப்பூரிலிருந்து அண்டை நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்.
பினாங்கு, ஃபுக்கெட் தீவுக்கு மூன்று முதல் ஐந்து இரவுகள் இக்கப்பலில் பயணம் மேற்கொள்ளலாம்.
எட்டு இரவுகள் கொண்ட பயணமாக பாலித் தீவுக்கும் சென்று, அங்குள்ள அழகிய கடற்கரைகள், ஆலயங்களுடன் அவற்றுக்கு அருகிலுள்ள லொம்போக் தீவுக்கும் செல்லலாம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க, டிசம்பர் 24 முதல் நான்கு இரவுப் பயணமாக பினாங்கு, ஃபுக்கெட் தீவுக்கும் புத்தாண்டுக்காக டிசம்பர் 28 முதல் பாலித் தீவுக்கு எட்டு இரவுப் பயணமும் மேற்கொள்ளலாம்.
2016ல் அறிமுகம் கண்ட இக்கப்பல், அதன் நவீனத் தொழில்நுட்பங்களுக்காகப் பெயர்பெற்றது.
“2024ல் கப்பல் 340 முறை துறைமுகத்தை வந்தடைந்ததில் 1.8 மில்லியன் பயணிகளைச் சிங்கப்பூர் வரவேற்றது,” என்றார் சிங்கப்பூர் பயணத்துறைக் கழக உதவித் தலைமை நிர்வாகி (பயண அனுபவ மேம்பாட்டுக் குழு) ஜீன் இங்.
“நம் வட்டாரம் சொகுசுக் கப்பல்துறைக்குப் பெரும் வாய்ப்பளிக்கிறது. இங்குள்ள வளரும் நடுத்தர வர்க்கத்தினரால் சொகுசுக் கப்பல்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. குடும்பங்கள் முதல் இளையர்கள் வரை இன்று சொகுசுக் கப்பல்களில் பயணம் செய்கின்றனர். அவர்களை ஈர்க்க சிங்கப்பூர் நல்ல வாய்ப்பளிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இக்கப்பல்களில் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் கப்பலிலிருந்து இறங்கி சிங்கப்பூரின் விதவிதமான உணவுகள், அழகான காட்சிகளைக் கண்டு ரசிக்கின்றனர். இதனால்தான், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் சொகுசுக் கப்பல்களை இவ்வளவு வலுவாக ஆதரிக்கிறது,” என்றார் திருவாட்டி ஜீன்.
ஒவேஷன்’ கப்பலில், ‘ரிப்கோர்ட் பை ஐஃபிளை’ எனும் கடலிலுள்ள முதல் விண்வீழ் பாவனை விளையாட்டிலும் அலைச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபடலாம்.
நார்த் ஸ்டார் கண்ணாடிப் பார்வை மேடையில் ஏறி, கடல்மட்டத்தைவிட 90 மீட்டர் உயரத்திலிருந்து சிங்கப்பூரின் நீர், நிலக் காட்சிகளைக் காணலாம்.
‘சீபிலெக்ஸ்’ எனும் உள்ளரங்க நடவடிக்கைக் கூடத்தில் பம்பர் கார்கள், ரோலர்ஸ்கேட்டிங், ஆர்க்கேட் விளையாட்டுகள், விளையாட்டுக்கூடம் எனப் பலதரப்பட்ட அனுபவங்களையும் பெறலாம்.
சாகசங்கள், ரோபாட்டிக்ஸ், கண்கவர் காட்சிகள், நேரடி இசை, வியப்பில் ஆழ்த்தும் நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் டு70 கூடத்தில் காணலாம்.

