முதல் பரிசு 6000 வெள்ளி ரொக்கம்

தங்கமுனை விருது 2025 எழுத்துப் படைப்புகளைச் சமர்ப்பிக்க அழைப்பு

2 mins read
a3f9dace-90da-459f-b7c0-329727fc0196
தேசிய கலைகள் மன்றமும் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியமும் ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்புடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்பு

உள்ளூர் எழுத்தாற்றலை அங்கீகரித்துப் பாராட்டும் ‘தங்கமுனை’ விருதுப் போட்டி இவ்வாண்டு மீண்டும் நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் சிறுகதை, கவிதை இரு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. அத்துடன், மொழிபெயர்ப்புக்கான பிரிவு, ஆங்கிலத்தில் இடம்பெறுகிறது.

எழுத்துப் படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், தேசிய படைப்பிலக்கியப் போட்டிக்கு அவற்றை அனுப்பலாம்.

விதிமுறைகளும் பரிசுகளும்

பங்கேற்க விரும்புவோரின் படைப்புகள், நாளிதழ், சஞ்சிகை, தொகுப்புகளில் வெளியாகி இருக்கலாம். ஆனால், நூல் அவர் வெளியிட்டு இருக்கக்கூடாது.

தேசிய கலைகள் மன்றமும் தேசிய புத்தக மேம்பாட்டு வாரியமும் ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்புடன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம். கவிதை, சிறுகதை என இரு பிரிவுகளிலும் ஒருவர் கலந்துகொள்ளலாம்.

சிறுகதை 5,000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைப் போட்டிக்குக் குறைந்தது ஐந்து கவிதைகளை அனுப்ப வேண்டும்.

ஒரு விண்ணப்பத்துடன் எட்டுக் கவிதைகள் வரை அனுப்பலாம்.

நான்கு மொழிகளிலும் கவிதை, சிறுகதை இரு பிரிவுகளிலும் பரிசு வழங்கப்படும்.

முதல் பரிசு: $6,000 ரொக்கம், சான்றிதழ், கிண்ணம், சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கான $200 பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வெற்றியாளர் பெறுவார். அத்துடன், நான்கு மாத வழிகாட்டுதல் திட்டத்தில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு கிட்டும்.

இரண்டாம் பரிசு: $4,000 ரொக்கம், சான்றி­தழ், சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கான $200 பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வெற்றியாளர் பெறுவார். அத்துடன், நான்கு மாத வழிகாட்டுதல் திட்டத்தில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு கிட்டும்.

மூன்றாம் பரிசு: $2,000 ரொக்­கம், சான்­றி­தழ், சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுக்கான $100 பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வெற்றியாளர் பெறுவார்.

படைப்புகளை மார்ச் 3 முதல் மே 12 வரையிலான காலகட்டத்திற்குள் அனுப்ப வேண்டும். போட்டி விதிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கும் விண்ணப்பப் படிவத்திற்கும் https://artshouselimited.sg/gpa எனும் இணை­யத்தளத்தை நாட­வும்.

விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: gpa@artshouse.sg

குறிப்புச் சொற்கள்