தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்ஃப்வழி நிதி திரட்டிய மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை

3 mins read
6771bfbc-3f29-41dd-a559-51d3d99e2f95
இந்த ஆண்டின் ‘டீ ஃபார் பிங்க்’ நிகழ்ச்சியில் 144 கோல்ஃப் விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.  - படம்: மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை
multi-img1 of 2

கோல்ஃப் விளையாட்டு வழியாக மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, நிதி திரட்ட ‘டீ ஃபார் பிங்க்’ நிகழ்ச்சியை மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

11வது முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, $600,000க்கும் அதிகமான நிதியை வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது. திரட்டப்பட்ட நிதி, அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

அவற்றில் சமூக மார்பகப் புற்றுநோய்ச் சோதனைப் பேருந்து (கம்யூனிட்டி மாம்மோபஸ்), மார்பகப் புற்றுநோய் ஆதரவு நிலையங்கள், ‘விக்’ கடன் சேவை, கலை வழி மருத்துவம் (Healing through the Arts) போன்ற திட்டங்கள் அடங்கும்.

‘தானா மேரா கன்ட்ரி கிளப்’பில் வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோல்ஃப் விளையாட்டாளர்கள் 144 பேர் கலந்துகொண்டனர்.

இந்த கோல்ஃப் விளையாட்டு நிகழ்ச்சியில் தொழில்முறை விளையாட்டாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், பெருநிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட அறக்கட்டளையின் நீண்டகால ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

விளையாட்டு அங்கத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் 170க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது துணைவியாருடன் வருகையளித்தார்.

1998ல் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினராக இருந்த அவர், மார்பகப் புற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சி, மருத்துவக் கடமை என்பதற்கும் அப்பால், ஆழமான தனிப்பட்ட அனுபவமாகவும் சமூகத்துக்கான முக்கியப் பங்களிப்பாகவும் தமக்கு இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அந்தக் காலத்தில் பெண்கள் பலர் நோய் தொடர்பான அச்சத்தாலும் சமூகத்தினரின் விமர்சனம் குறித்த அச்சத்தாலும் புற்றுநோயைத் தாமதமாகவே கண்டறிந்து சிகிச்சை பெற்றதை அவர் நினைவுகூர்ந்தார்.

“ஏராளமான பெண்கள் மார்பகத்தை இழக்க நேரிடலாம் என்ற பயத்தில் தங்கள் குடும்பத்தாரிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் இருந்தனர்,” என்று அவர் கூறினார். இதுவே, தாம் இந்த அறக்கட்டளையைத் தொடங்குவதற்கான யோசனையை முன்வைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்றார் டாக்‌டர் இங்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த வேளையில் அறக்கட்டளையின் உருவாக்கத்தில் பங்காற்றிய அவர், இந்த ஆண்டின் ‘டீ ஃபார் பிங்க்’ நிகழ்ச்சி தமக்கு ஒரு ‘முழு வட்ட நிறைவு’போல் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அரசியலுக்கு முன்பு, நான் என் குடும்பம், அறுவை சிகிச்சை, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை முதலியவற்றுக்கு மட்டுமே நேரத்தை ஒதுக்கினேன். இப்போது அரசியலிலிருந்து ஓய்வுபெற்று, மீண்டும் பொதுவாழ்வுக்குத் திரும்பும் நிலையில் இங்கு வருவது மிகுந்த உணர்வுபூர்வமானது,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட டாக்டர் இங், “நீங்கள் வழங்கும் ஆதரவு மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளைக்கு மட்டுமன்று; அது உங்கள் தாய், மனைவி, மகள்கள், பேத்திகளுக்குமான ஆதரவாகவும் அமையும்,” என்று சொன்னார்.

தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் முதலியோரின் நீடித்த பங்களிப்புக்கு அறக்கட்டளையின் பொது மேலாளர் அடெலின் கோ நன்றி தெரிவித்தார். “அவர்களின் ஆதரவே, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவும் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தவும் உதவி வருகிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூர்ப் பெண்களில் 13 பேரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலையில், கல்வி, தொடக்கத்திலேயே கண்டறிதல், முழுமையான ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்தும் இலக்கை அடைய மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை தனது பணியைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்