செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை ஏறத்தாழ அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு கருவிகளைப் போட்டிபோட்டு வடிவமைத்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவுக் கருவியுடன் உரையாடும் அனுபவம் தொடங்கி பல்வேறு அம்சங்களிலும் முன்னோடியாக இருந்துவரும் கூகல் நிறுவனம் அண்மையில் மேலும் பல புதிய மேம்பாடுகளை அறிவித்தது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தனது I/O எனும் ஆண்டுவிழாவில் கிட்டத்தட்ட 100 அம்சங்களை அந்நிறுவனம் அறிவித்தது.
ஏறத்தாழ 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தனது ‘ஜெமினாய்’ செயலியைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட கூகல், அன்றாட அனுபவங்களை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
விரைவில், மின்வணிகத் தளங்களில் பொருள்கள் வாங்குவோர் அவற்றை முப்பரிமாணத்தில், உண்மையான அளவுகளுடன் பார்க்க முடியும். உடைகளின் நிறம், பொருள்கள் வீட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் இடம் எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதால் மின்வணிக அனுபவம் பன்மடங்கு எளிதாகும் வாய்ப்புள்ளது. மேலும், ஒரு பொருளின் விலையைத் தொடர்ந்து கண்காணித்து, குறையும்போது தெரியப்படுத்தும் அம்சமும் சேர்க்கப்படும்.
கூகலின் ‘ஜிமெயில்’ செயலி தற்போது வரும் தகவல்களுக்கு ஏற்ற பதில்களைப் பரிந்துரைக்கிறது. அது மேம்பாடு கண்டு, வரும் ஜூலை மாதம் கூகல் ஆய்வகத்தின் ‘விவேக மறுமொழி’ (ஸ்மார்ட் ரிப்ளை) அம்சம் அறிமுகம் காணவுள்ளது.
அந்த அம்சம், முன்னரே மின்னஞ்சல் பெட்டிகளில் உள்ள தகவல்கள், ‘டிரைவ்’ எனும் சேமிப்பகங்களில் உள்ள தகவல்கள் ஆகியவற்றைப் படித்து, அனுப்புநர், பெறுநரின் தொனிகள், அவர்களது பணி, பதவி ஆகியவற்றைப் பொறுத்து, உத்திபூர்வமான முறையில் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களைப் பரிந்துரைக்கும். ஒவ்வொருவரது எழுத்துமுறைகளுக்கு ஏற்றவாறு அவை அமையும் என்பது கூடுதல் சிறப்பு.
தற்போது ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் அமைந்த உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கும் கூகல் ‘ஸ்பீச் ட்ரான்ஸ்லேஷன்’ தற்போது மேலும் பல இந்திய மொழிகளுக்கு விரிவடையவுள்ளது. இந்த அம்சம் ‘கூகல் மீட்’ செயலியுடனும் இணைகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘வாட்ஸ்அப்’ செயலியில் உள்ள ‘மெட்டா ஏஐ’ அம்சம், ‘எக்ஸ்’ தளத்தின் ‘கிராக்’ அம்சம் போலவே கூகல் சந்தாதாரர்கள் ‘கூகல் குரோம்’ உலாவியில் ‘ஜெமினாய்’ செயலியைக் காண முடியும்.
வரி வடிவத்திலும் படங்கள் மூலமாகவும் தரப்படும் நினைவுக்குறிப்புகளைக் (prompt) கொண்டு எட்டு நொடிக் காணொளியை உருவாக்கும் ‘ஃபுளோ’ (FLOW) அம்சத்தையும் கூகல் அறிமுகம் செய்துள்ளது.
ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும்போது, உள்ளிடப்படும் தகவல்கள், ‘பிடிஎஃப்’ ஆவணங்கள், பொதுத்தளத்தில் உள்ள தகவல்கள் ஆகியவற்றைத் தொகுக்க உதவும்.
பாடல்களைத் தொகுக்கவும், குரலைத் திருத்தும் அம்சங்களுடன் ‘லிரியா 2’ அம்சம் மேம்பாடு காணவுள்ளது.
வரிவடிவத்தைக் குரலாக மாற்றும் அம்சம் 24 மொழிகளுக்கு விரிவடைகிறது.